பதவி விலகும் இலங்கை அணித் தலைவர் சுஜான் பெரேரா

Sri Lanka Football

293

இலங்கை மீதான பிஃபாவின் தடை நீக்கப்பட்டதன் பின்னர், தான் தலைமை பதவியில் இருந்து விலகுவதாக இலங்கை தேசிய கால்பந்து அணியின் தலைவர் சுஜான் பெரேரா தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளமான தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் சுஜான் வெளியிட்டுள்ள பதிவின்படி, தனது பதவி விலகல் சம்பந்தமான கடிதத்தை இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில், ”பிஃபாவின் தடை நீக்கப்பட்டதன் பின்னர் நான் தேசிய அணியின் தலைமைப் பதவியில் இருந்து விலகிக் கொள்வேன் என்பதை உங்களுக்கு அறியத் தருகின்றேன். எனது இந்தப் பதவிக் காலத்தில் என்னால் முடிந்த அனைத்தையும் நான் செய்துள்ளேன் என்று நினைக்கின்றேன். ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக செயற்படுவதற்கு மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நான் எனது வீரர்களுக்கு உதவியுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

சுஜான் பெரேரா கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இலங்கை தேசிய கால்பந்து அணியில் இடம்பெற்று விளையாடி வருவதுடன், முதல் முறையாக கடந்த 2016ஆம் ஆண்டு அணியின் தலைவராக நியமனம் பெற்றார். பின்னர் சிறிய ஒரு இடைவெளியின் 2018ஆம் ஆண்டு மீண்டும் அணியின் தலைவரானார்.

உலகக் கிண்ண தகுதிகான் தொடர், தெற்காசிய கால்பந்து சம்மேளன (SAFF) சம்பியன்ஷிப் தொடர் மற்றும் இலங்கையில் இடம்பெற்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கிண்ணத் தொடர் ஆகிய முக்கிய போட்டித் தொடர்களில் சுஜான் இலங்கை அணியை வழிநடாத்தியுள்ளார்.

கடந்த பல ஆண்டுகலாக மாலைதீவுகளில் தொழில்முறை கால்பந்து ஆடி வருகின்ற சுஜான் தேசிய அணிக்காகவும் கழக அணிகளுக்காகவும் கோல்காப்பில் வெளிப்படுத்திய சிறந்த திறமைக்காக பலராலும் ”தெற்காசியாவின் சுவர்” என்றும் அழைக்கப்பட்டு வருகின்றார்.

இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தற்போதைய மற்றும் கடந்த கால நிர்வாகிகள் எவரும் வீரர்களின் நலனுக்காக செயற்படவில்லை என்று குறித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ள சுஜான் அதுவே தனது பதவி விலகலுக்கான காரணம் என்பதையம் தெரிவித்துள்ளார்.

”முன்னர் இருந்த மற்றும் தற்போதைய என அனைத்து நிர்வாகங்களும் வீரர்களைப் பாதுகாப்பதற்காக எந்தவொரு அவதானமும் எடுக்கவில்லை. கடந்த காலங்களில் நடந்தவையும், தற்போது நடப்பவையுமே என்னை இந்த தீர்மானத்தை எடுப்பதற்கு வழிவகுத்தது.”

இறுதியாக, எதிர்காலத்தில் தான் ஒரு வீரராக தேசிய அணிக்கு சேவையாற்றுவேன் என்றும் தேசிய அணி வீரர்களுக்காக எதிர்காலத்தில் நிர்வாகிகள் சிறந்த முறையில் செயற்படும் பட்சத்தில் தனது இந்த முடிவில் மாற்றத்தை ஏற்படுத்த தான் தயாராக இருப்பதாகவும், சுஜான் பெரேரா குறித்த கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.

பிஃபாவின் விதிமுறைகளை மீறியமைக்காக கடந்த பெப்ரவரி மாதம் முதல் இலங்கை கால்பந்திற்கு பிஃபா மூலம் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இலங்கைக்கு சர்வதேச கால்பந்துடன் தொடர்புபட்ட எந்தவொரு நடவடிக்கைகளிலும் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இந்தியாவில் இடம்பெறவுள்ள இவ்வாண்டுக்கான SAFF சம்பியன்ஷிப் தொடரில் விளையாடும் வாய்ப்பையும் இலங்கை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க <<