இந்திய வீரர்களுக்கு அவுஸ்திரேலியாவின் உறுதியான உத்தரவு

187

இந்திய கிரிக்கெட் அணியினர் அவுஸ்திரேலியாவுக்கு வருவதாக இருந்தால் அங்கு அவர்கள் 14 நாட்கள் கட்டாயம் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை உறுதியாக தெரிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி இந்த வருட இறுதியில் அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடவுள்ளது.

>>T20 உலகக் கிண்ணம் ஒத்திவைப்பு: ஐ.சி.சி அறிவிப்பு

இந்த தொடரின் போது இந்திய அணி வீரர்களை 14 நாட்கள் சுய தனிமைப்படுத்துவது என்பது அதிகமானதாகும். இதனை சற்று குறைக்க வேண்டும் என்று அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபைக்கு, இந்திய கிரிக்கெட் சபையின் தலைவர் சவுரவ் கங்குலி வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

அத்துடன், அதாவது இரண்டு வாரங்கள் வீரர்களால் தனிமையில் ஹோட்டல் அறைக்கு உள்ளே இருக்க முடியாது. அவர்களுக்கு புத்துணர்ச்சி தேவை. மனவுளைச்சல் வந்துவிடும். சோம்பல் ஏற்பட்டுவிடும். இதன் காரணமாக அந்த காலகட்டத்தை குறைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் இடைக்கால தலைமை செயல் அதிகாரி நிக் ஹொக்லி அளித்த ஒரு பேட்டியில்,

வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் கட்டாயம் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பது அவுஸ்திரேலிய அரசின் விதிமுறையாகும். அதனை இந்திய கிரிக்கெட் அணியும் கடைப்பிடித்தாக வேண்டும்.

அதேநேரத்தில் தனிமைப்படுத்துதல் காலத்திலும் பயிற்சி பெறும் வகையில் இந்திய அணியினருக்கு அனைத்து வசதிகளும் சிறப்பாக செய்து கொடுக்கப்படும். குறிப்பாக, அடிலெய்ட் ஓவல் மைதானத்துக்கு அருகே புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ள ஹோட்டலில் சுய தனிமைப்படுத்துதலுக்கு தேவையான வசதிகள் உள்ளன.

>>Video – டிவில்லியர்ஸ் Comeback எப்போது? |Sports RoundUp – Epi 124

அதேபோல, இந்திய வீரர்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட மண்டலத்தில் சிறந்த பயிற்சி வசதிகள் செய்து தரப்படும். எனவே போட்டிகளுக்கான தயாரிப்பில் எந்தவித அதிருப்தியும் இந்திய வீரர்க்ளுக்கு ஏற்படாது” என அவர் தெரிவித்தார்.

இந்தியா -அவுஸ்திரேலிய அணிகள் இடையே டிசம்பர் மாதத்தில் டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னோட்டமாக தற்போதே ஆயத்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதேநேரம், இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் மைதானத்தில் டிசம்பர் 3ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<