இலங்கை இல்லாத SAFF சம்பியன்ஷிப்; இந்தியா, பாகிஸ்தான் ஒரே குழுவில்

SAFF Championship

220

தெற்காசிய கால்பந்து சம்மேளன (SAFF) சம்பியன்ஷிப் 2023 போட்டித் தொடரில் நடப்புச் சம்பியன் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் ஒரே குழுவில் உள்வாங்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு இந்தியாவில் இடம்பெறவுள்ள 14ஆவது SAFF சம்பியன்ஷிப் தொடருக்கான அணிகளை குழுநிலைப்படுத்தும் நிகழ்வு புதன்கிழமை (17) இந்தியாவின் டெல்லி நகரில் இடம்பெற்றது.

சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பிஃபா) தடைக்கு உள்ளாகியிருந்த பாகிஸ்தான் அணி, மாலைதீவுகளில் 2021ஆம் ஆண்டு இடம்பெற்ற 13ஆவது SAFF  சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கவில்லை. எனினும், கடந்த வருடத்தில் இருந்து பாகிஸ்தான் மீதான குறித்த தடை நீக்கப்பட்ட நிலையில் அந்த அணி இம்முறை தொடரில் பங்கேற்கவுள்ளது.

இதேவேளை, கடந்த பெப்ரவரி மாதம் முதல் பிஃபாவின் தடையை எதிர்நோக்கியுள்ள இலங்கைக்கு இம்முறை தொடரில் பங்கேற்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான ஒரு நிலையில், மேற்காசிய நாடுகளான குவைட் மற்றும் லெபனான் ஆகிய அணிகள் இம்முறை SAFF சம்பியன்ஷிப் தொடருக்கு போட்டி ஏற்பாட்டுக் குழுவினரால் அழைக்கப்பட்டுள்ளனர். எனவே, இம்முறை தொடரில் மொத்தமாக 8 அணிகள் பங்கேற்கின்றன.

இதன்படி, புதன்கிழமை இடம்பெற்ற அணிகளை குழுநிலைப்படுத்தும் நிகழ்வின் நிறைவில் நடப்புச் சம்பியன் இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இம்முறை தொடருக்கு அழைக்கப்பட்டுள்ள குவைட் அணிகள் குழு Aஇல் இடம்பெற்றுள்ளன.

அதேவேளை, பிஃபா தரவரிசையில் 99ஆவது இடத்தில் உள்ள லெபனான் அணி இரண்டு முறை SAFF கிண்ணத்தை வென்றுள்ள மாலைதீவுகள், ஒரு முறை கிண்ணம் வென்றுள்ள பங்களாதேஷ் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகள் இம்முறை தொடரில் குழு B யில் இடம்பிடித்துள்ளன.

குழுநிலைப் போட்டிளின் நிறைவில் இரண்டு குழுக்களிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தெரிவாகும். அரையிறுதிப் போட்டிகள் ஜூலை முதலாம் திகதியும் இறுதிப் போட்டி ஜூலை 4ஆம் திகதியும் இடம்பெறும்.

பிஃபா தரவரிசையில் லெபனான் அணிக்கு அடுத்த படியாக இந்தியா 101ஆவது இடத்திலும், குவைட் 143வது இடத்திலும் உள்ளன. இதனால், பலமிக்க இரண்டு அணிகள் மேலதிகமாக உள்வாங்கப்பட்டுள்ளமை இம்முறை தெற்காசிய கால்பந்து சம்மேளன சம்பியன்ஷிப் தொடரை மேலும் விறுவிறுப்பாக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரை இடம்பெற்றுள்ள 13 தொடர்களில் இந்தியா அதிகபட்சமாக 8 முறை சம்பியன் கிண்ணத்தை வென்றுள்ளது. நேபாளம், பாகிஸ்தான் மற்றும் பூட்டான் ஆகிய அணிகள் இதுவரை எந்தவொரு கிண்ணத்தையும் வென்றதில்லை. இறுதியாக 2021ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் கிரன் குமார் லிம்பு தலைமையிலான நேபாளம் அணியை சுனில் ஷெத்ரி தலைமையிலான இந்திய அணி 3-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி கொண்டது.

14வது SAFF சம்பியன்ஷிப் தொடர் எதிர்வரும் ஜூன் 21ஆம் திகதி முதல் ஜூலை 4ஆம் திகதி வரை பெங்களூரில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  • குழு A – இந்தியா, குவைட், நேபாளம், பாகிஸ்தான்
  • குழு B – லெபனான், மாலைதீவுகள், பங்களாதேஷ், பூட்டான்

போட்டி அட்டவணை

>> மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க <<