சிட்டி லீக் கால்பந்து மைதானத்தில் நடைபெற்ற டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடரின் முதலாம் வாரப் போட்டியில் கிறிஸ்டல் பெலஸ் கால்பந்துக் கழகம் 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் ஜாவா லேன் விளையாட்டுக் கழகத்தை வெற்றி கொண்டது.
சில மாதங்களுக்கு முன்பு நடந்து முடிந்த FA கிண்ணத்தின் இறுதிப் போட்டி வரை முன்னேறிய ஜாவா லேன் அணி, இப்போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற உத்வேகத்துடன் களமிறங்கிய போதிலும் கிறிஸ்டல் பெலஸ் அணி ஆரம்பம் முதலே நெருக்கடி கொடுக்கத் தொடங்கியது.
ரினௌன் – சௌண்டர்ஸ் இடையிலான பரபரப்பான போட்டி சமநிலையில் முடிவு
டயலொக் சம்பியன்ஸ் லீக்கின் முதல் வாரத்தில் இடம்பெற்ற ரினௌன் விளையாட்டுக்..
போட்டி ஆரம்பமான ஒரு சில நிமிடங்களினுள் இரு அணிகளும் மிகவும் சுறுசுறுப்புடனும் உத்வேகத்துடனும் பந்துப்பரிமாற்றங்களை நிகழ்த்தத் தொடங்கின. எனினும் கிறிஸ்டல் பெலஸ் அணி சற்றே வேகமான முறையில் தமது ஆட்டத்தை மேற்கொண்டது.
போட்டியின் முதலாவது வாய்ப்பு கிறிஸ்டல் பெலஸ் அணியின் ஐசாக் அபாவிற்கு கிடைத்தது. எனினும் அவர் அடித்த ஹெடரை ஜாவா லேன் கோல் காப்பாளர் தடுத்தார்.
இரு அணிகளும் முழு மைதானப் பரப்பையும் பயன்படுத்தி தமது திட்டங்களை கட்டமைத்திருந்தன. ஜாவா லேன் அணியின் ரெவின் குமார் அற்புதமாக செயல்பட்டு இடது முனையில் இருந்து பந்தை உள்ளனுப்பிய போதிலும் அதனை கோலாக்க ஜாவா லேன் முன்கள வீரர்கள் தவறினர்.
இரு அணிகளுக்கும் வாய்ப்புகள் மாறி மாறி வழங்கப்பட்ட போதிலும் அவை சரியான முறையில் பயன்படுத்தப்படவில்லை.
முதலாம் பாதியின் இறுதி வாய்ப்பு ஜாவா லேன் அணிக்கு ப்ரி கிக் முறையில் கிடைக்கப்பெற்றது. அதன்போது தலைவர் மொஹமட் றிஸ்கான் அடித்த பந்து வீரர்களின் உடம்பில் பட்டு வீணானது.
முதல் பாதி– ஜாவா லேன் விளையாட்டுக் கழகம் 0-0 கிறிஸ்டல் பெலஸ் கால்பந்துக் கழகம்
இரண்டாம் பாதியை மிகவும் ஆக்ரோஷமான முறையில் இரு அணி வீரர்களும் ஆரம்பித்தனர்.
ஆரம்ப தருணங்களில் ஜாவா லேன் இளம் வீரர் நவீன் ஜூட் தனது வேகத்தின் மூலம் பந்தினை முன்னகர்த்தி கோலாக்க முயன்றாலும் அவர் அடித்த உதை கோல் கம்பத்திற்கு மேலாகச் சென்றது.
போட்டியின் 51வது நிமிடத்தில் கிறிஸ்டல் பெலஸ் அணி தமது முதலாவது கோலினைப் பெற்றது. அய்டேஜி டுண்டெ அனுப்பிய உள்ளனுப்பலை மிகவும் லாவகமாக நிறுத்திய மொஹமட் ரௌசான் நிதானமாகவும் நேர்த்தியான முறையிலும் அதனை கோலாக்கினார்.
மொறகஸ்புல்ல அணியை வீழ்த்தி வெற்றியுடன் தொடரை ஆரம்பித்த கொழும்பு கழகம்
டயலொக் சம்பியன்ஸ் லீக்கின் முதல் வாரத்தில் இடம்பெற்ற ஒரு ஆட்டத்தில் நடப்புச் சம்பியன்..
வழங்கப்பட்ட கோலினால் கதிகலங்கிய ஜாவா லேன் வீரர்கள், ஒரு சில இலகுவான தவறுகளின் மூலம் பந்தினை தொடர்ந்து கிறிஸ்டல் பெலஸ் அணி வீரர்களிடம் தாரை வார்த்துக் கொடுத்தனர்.
எனினும் ஒரு சில மாற்றங்கள் நிகழ்த்தப்பட மீண்டும் உத்வேகத்துடன் செயற்பட ஆரம்பித்தது ஜாவா லேன் அணி.
ஜாவா லேன் அணியின் முன்கள வீரர் ஷப்ராஸ் கைஸ் தனது கால்களுக்குக் கிடைத்த பந்தினை கோலாக்க முயன்றாலும் மீண்டும் அது கோல் கம்பங்களுக்கு வெளியே சென்றது.
போட்டியின் இறுதி நேரங்களில் நவீன் ஜூட் அடித்த பந்தை கிறிஸ்டல் பெலஸ் கோல் காப்பாளர் நதீஷான் பெர்னாண்டோ இரட்டிப்புத் தடுப்பு மூலம் தடுத்தார்.
தொடர்ந்து வந்த வாய்ப்புகளையும் அவர் சிறப்பாகத் தடுத்து கிறிஸ்டல் பெலஸ் அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
முழு நேரம்– ஜாவா லேன் விளையாட்டுக் கழகம் 0-1 கிறிஸ்டல் பெலஸ் கால்பந்துக் கழகம்
ThePapare.com சிறப்பாட்டக்காரர்– நதீஷான் பெர்னாண்டோ (கிறிஸ்டல் பெலஸ் கால்பந்துக் கழகம்)
போட்டியின் பின்பு கருத்துத் தெரிவித்த கிறிஸ்டல் பெலஸ் அணியின் பயிற்றுனர் சுனில் சேனவீர,
“ஜாவா லேன் அணியை அவர்களது மைதானத்தில் வென்றது மகிழ்ச்சியளிக்கிறது. ஒரு சில தடைகளைத் தாண்டி இந்தப் போட்டியில் விளையாடி இந்த வெற்றியை பெற்றிருக்கிறோம். பல இடங்களில் முன்னேற்றமடைய வேண்டும். அவற்றை அடுத்த போட்டிகளில் சரி செய்வோம்” என்றார்.
ஜாவா லேன் அணியின் முகாமையாளரை தவிர்க்க முடியாத காரணங்களால் சந்திக்க முடியாமல் போக, அணியின் உதவி முகாமையாளர் சுரங்க எம்முடன் கலந்துரையாடினார்
“இப்போட்டியில் வெற்றி பெறுவோம் என நினைத்தோம். பயிற்சிகள் மிகவும் சிறப்பாக அமைந்தன. எனினும் முன்கள வீரர்கள் நினைத்தவாறு பிரகாசிக்கத் தவறினர். ஒரு சில பிழைகள் விடப்பட்டன. அதன் காரணமாகவே தலைவரையும் வெளியேற்ற நிகழ்ந்தது. அடுத்த போட்டிகளில் நிச்சயம் முன்னேற்றம் தெரியும்” என்றார்.
கோல் பெற்றவர்கள்
கிறிஸ்டல் பெலஸ் கால்பந்துக் கழகம்– மொஹமட் ரௌசான் 51′