டயலொக் சம்பியன்ஸ் லீக்கின் முதல் வாரத்தில் இடம்பெற்ற ஒரு ஆட்டத்தில் நடப்புச் சம்பியன் கொழும்புக் கால்பந்துக் கழகம் 2-0 என்ற கோல்கள் கணக்கில் மொறகஸ்முல்ல யுனைடட் விளையாட்டுக் கழகத்தை வீழ்த்தி, வெற்றியுடன் இந்தப் பருவகாலப் போட்டிகளை ஆரம்பித்துள்ளது.
சுகததாஸ அரங்கில் இடம்பெற்ற இந்த ஆட்டத்தில் சுமார் 10 நிமிடங்கள் கடந்த நிலையில், கடந்த முறை ரினௌன் விளையாட்டுக் கழகத்திற்காக விளையாடியவரும் இம்முறை கொழும்பு கால்பந்து அணிக்கு ஒப்பந்தம் செய்துள்ளவருமான மொஹமட் பசால் மூலம் பல முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டன.
அவர் தனது முதல் முயற்சியாக கோலை இலக்கு வைத்து உதைந்த பந்தை மொறகஸ்முல்ல கோல் காப்பாளர் தரிந்து ருக்ஷான் பாய்ந்து தட்டி விட்டார். அதன் பின்னர், மீண்டும் பசால் கோல் நோக்கி அடித்த பந்து எதிரணியின் பின்கள வீரரின் உடம்பில் பட்டு வெளியேறியது.
அதனைத் தொடர்ந்து சில நிமிடங்களுக்கு கொழும்பு கால்பந்து தரப்பினரின் மத்திய மற்றும் முன்கள வீரர்கள் தமது சிறந்த பந்துப் பரிமாற்றங்கள் மூலம் தொடர்ந்து பல முயற்சிகளை மேற்கொண்டனர். எனினும் அவை மூலம் சிறந்த நிறைவுகள் கிடைக்கவில்லை.
20ஆவது நிமிடம் கொழும்பு தரப்பினரால் உள்ளனுப்பப்பட்ட பந்தை தரிந்து ருக்ஷான் தடுத்தார். தடுக்கப்பட்ட பந்து இஸ்மயில் அபுமெறியின் கால்களுக்கு வர, அவர் அதனை கோலாக்கினார்.
அதன் பின்னரும், கொழும்பு அணியினரால் தொடர்ச்சியாக மெற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் தரிந்து ருக்ஷானின் சிறந்த தடுப்புக்களினால் முறியடிக்கப்பட்டன.
மறுபுறம், மெறகஸ்முல்ல தரப்பினருக்கு கிடைத்த கோலுக்கான வாய்ப்புக்கள் அனைத்தும் கொழும்பு பின்கள வீரர்களால் தடுக்கப்பட்டன.
முதல் பாதி : கொழும்பு கால்பந்து கழகம் 1 – 0 மொறகஸ்முல்ல யுனைடட் விளையாட்டுக் கழகம்
முதல் பாதியைப் போன்றே இரண்டாவது பாதியும் கொழும்பு கால்பந்து தரப்பினரின் ஆதிக்கத்துடன் ஆரம்பமாகியது.
இந்தப் பாதியில் கொழும்பு கால்பந்து கழகத்திற்கான சிறந்த வாய்ப்பாக எதிரணியின் பின்களத்தில் இருந்து ரௌமி மொஹிதீன் வழங்கிய பந்தை சர்வான் ஜோஹர் பெற்றார். மீண்டும் அதை அவர் பசாலுக்காக கோல் எல்லைக்குள் பரிமாற்றம் செய்கையில், தரிந்து வேகமாக வந்து பந்தைப் பற்றிக்கொண்டார்.
சற்று நேரத்தின் பின்னர் ரௌமி மொஹிதீன் கொடுத்த பந்துப் பரிமாற்றத்தை மொமாஸ் யோபோ கோலுக்கு அடிக்க முயற்சிக்கையில், பந்து வேளியே சென்றது.
அதன் பின்னர் நிரான் கனிஷ்க வழங்கிய பந்தை தரிந்து ருக்ஷான் தட்டிவிட, மீண்டும் பந்து பசாலின் கால்களுக்கு சென்றது. கோல் காப்பாளர் இல்லாத நேரத்தில் கோலை நோக்கி பசால் உதைந்த பந்து கம்பங்கலுக்கு வெளியால் சென்றது.
தொடர்ந்தும் ஆதிக்கம் செலுத்திய கொழும்பு கால்பந்து தரப்பினருக்கு சிறந்த நிறைவுகள் இல்லாமையினால் கோலுக்கான வாய்ப்புகள் தொடர்ச்சியாக வீணாகின.
எனினும், போட்டி முடியும் தருவாயில் கொழும்பு அணிக்கு இரண்டாவது கோலும் கிடைக்கப்பெற்றது. பசால் வழங்கிய பந்துப் பரிமாற்றத்தை அஹமட் சஸ்னி அடிக்க பந்து கம்பத்தில் பட்டு மீண்டும் மைதானத்திற்கு வந்தது. மீண்டும் தன்னிடம் வந்த பந்தை பசால் கோலாக்கினார்.
முழு நேரம் : கொழும்பு கால்பந்து கழகம் 2 – 0 மொறகஸ்முல்ல யுனைடட் விளையாட்டுக் கழகம்
கோல் பெற்றவர்கள்
கொழும்பு கால்பந்து கழகம் – இஸ்மயில் அபுமெறி, மொஹமட் பசால்
மஞ்சள் அட்டை
கொழும்பு கால்பந்து கழகம் – மொஹமட் அபீல், நிரான் கனிஷ்க, மொஹமட் ஆகிப்
மொறகஸ்முல்ல யுனைடட் விளையாட்டுக் கழகம் – சிரங்க பிரியவன்ச, தினிது குமார