இலங்கைக்கு எதிரான முதற்கட்ட குழாத்தை அறிவித்த பங்களாதேஷ்

555

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான 21 பேர்கொண்ட முதற்கட்ட குழாத்தை பங்களாதேஷ் கிரிக்கெட் சபை இன்று (9) அறிவித்துள்ளது.

பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அறிவித்துள்ள குழாத்தில், புதுமுக வேகப்பந்து வீச்சாளர்களான முகிதுல் இஸ்லாம், சஹிதுல் இஸ்லாம் மற்றும் சொரிபுல் இஸ்லாம் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.

மீண்டும் கேள்விக்குறியாகும் இலங்கை – பங்களாதேஷ் தொடர்?

புதுமுக வீரர்கள் உள்ளடக்கப்பட்டுள்ள அதேவேளை, நூருல் ஹாசன், ஷவகாட்டோ ஹொம் மற்றும் கலீட் அஹமட் ஆகியோர் மீண்டும் குழாத்துக்குள் அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய முஷ்தபிசூர் ரஹ்மான், சௌமிய சர்கார் மற்றும் ஹசன் மஹ்மூட் ஆகியோர் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் உபாதை காரணமாக விலகிய ஷகிப் அல் ஹசன் இந்த குழாத்திலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். ஐ.பி.எல்.தொடரில்  விளையாடவுள்ளதால், ஷகிப் அல் ஹசன் வெளியேறியுள்ள நிலையில், முஷ்தபிசூர் ரஹ்மானும் .பி.எல். தொடரில் விளையாடவுள்ளார்.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பங்களாதேஷ் அணி, இம்மாதம் 17-18ம் திகதிகளில் கட்டுநாயக்க சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இலங்கை அணியுடன் இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சிப்போட்டியில் விளையாடவுள்ளதுடன்,  முதல் டெஸ்ட் போட்டி இம்மாதம் 21ம் திகதியும், இரண்டாவது டெஸ்ட் போட்டி 29ம் திகதியும் பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷ் முதற்கட்ட குழாம்

மொமினுல் ஹக் (தலைவர்), லிடன் டாஸ், மொஹமட் மிதுன், முஷ்பிகூர் ரஹீம், தமிம் கான், ஷட்மன் இஸ்லாம், அபு ஜயட், தாஜுல் இஸ்லாம், நஜ்முல் ஹுசைன் சென்டோ, மெஹிடி ஹாசன் மிராஷ், நயீம் ஹசன், டஸ்கின் அஹமட், இபோடொட் ஹுசைன், மொஹமட் ஹாசன், யசீர் அலி, சொரிபுல் இஸ்லாம், கலீட் அஹமட், முகிதுல் இஸ்லாம், ஷவகாட்டோ ஹொம், ஷஹிதுல் இஸ்லாம், நூருல் ஹாசன்

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…