ரினௌன் – சௌண்டர்ஸ் இடையிலான பரபரப்பான போட்டி சமநிலையில் முடிவு

267

டயலொக் சம்பியன்ஸ் லீக்கின் முதல் வாரத்தில் இடம்பெற்ற ரினௌன் விளையாட்டுக் கழகத்திற்கும், சௌண்டர்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கும் இடையிலான விறுவிறுப்பான போட்டி 1-1 என்ற கோல் அடிப்படையில் சமநிலையில் முடிந்தது.

சுகததாச அரங்கில் இன்று (03) மாலை இடம்பெற்ற போட்டியின் முதல் பாதியின் ஆரம்பத்திலேயே சௌண்டர்ஸ் கழகம் கோலொன்றை போட ரினௌன் கழகம் போட்டியின் கடைசித் தறுவாயில் பதில் கோல் போட்டு ஆட்டத்தை சமநிலை செய்தமை குறிப்பிடத்தக்கது.

>> மொறகஸ்புல்ல அணியை வீழ்த்தி வெற்றியுடன் தொடரை ஆரம்பித்த கொழும்பு கழகம்

ஆரம்ப நிமிடங்களிலேயே சௌண்டர்ஸ் அணிக்கு கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பின்போது வந்த பந்தை அடிக்க பந்து கம்பத்தில் பட்டு வெளியேறியது.

எனினும், அதற்கு பதில் கொடுக்கும் வகையில், அடுத்த நிமிடமே கசுன் ஜயசூரிய பந்தை நீண்ட தூரம் எடுத்துச் சென்று கம்பங்களுக்குள் செலுத்த, ஆட்டத்தின் ஆரம்ப கட்டத்திலேயே சௌண்டர்ஸ் முன்னிலை பெற்றது.

மீண்டும் பெனால்டி எல்லைக்கு வெளியில் இருந்து சுந்தரராஜ் நிரேஷ் கோல் நோக்கி அடித்த பந்து, கம்பங்களுக்கு சற்று வெளியால் சென்றது.

தொடர்ந்தும் ஜயசூரிய உள்ளனுப்பிய பந்தை ரினௌன் கோல் காப்பாளர் உஸ்மான் தட்டிவிட்டார். இதன்போது தன்னிடம் வந்த பந்தை சனோஜ் சமீர வேகமாக கோல் நோக்கி அடித்தார். எனினும் பந்து கம்பங்களுக்கு மேலால் சென்றது.

சில நிமிடங்களின் பின்னர் நிரேஷ் வழங்கிய ப்ரீ கிக் உதை கோலை நோக்கி உயர்ந்து வந்தது. எனினும், ரினௌன் கோல் காப்பாளர் உஸ்மான் அதைத் தடுத்தார்.

ரினௌன் அணியின் முதல் முயற்சியாக ஷாமில் அஹமட் வழங்கிய பந்தை ஆசாத் கோலுக்குள் செல்லும் வகையில் ஹெடர் செய்தார். எனினும், அனுபவம் மிக்க கோல் காப்பாளர் அசன்க விராஜ் பந்தை பாய்ந்து வெளியே தட்டினார்.

20ஆவது நிமிடத்தில் முஜீப் வழங்கிய பந்தை ஜொப் மைகல் கோலாக மாற்றினார். எனினும் நடுவர் அதனை ஓப் சைட் என சைகை காண்பித்தார்.

முதல் பாதி ஆட்டத்தின் ஆரம்பத்தில் சௌண்டர்ஸ் அணி ஆதிக்கம் செலுத்தியபோதும் போட்டியில் 16 நிமிடங்களாகும்போது ரினௌன் சுதாகரித்து ஆட ஆரம்பித்தது. பந்துப் பரிமாற்றங்களை மாறிமாறிப் பெற்ற இரு அணிகளும் சரிசமமாக கோல் வாய்ப்புகளையும் ஏற்படுத்தின.

28 ஆவது நிமிடத்தில் கசுன் ஜயசூரிய மற்றும் நிரேஷ் ஆகியோர் ரினௌன் கோல் கம்பத்தை ஆக்கிரமித்தனர். எனினும் கோல் வாய்ப்பு இலங்கையின் முன்னணி வீரர்களில் ஒருவரான ஜயசூரியவினால் தவறியது.

இந்நிலையில் 32ஆவது நிமிடத்தில் ரினௌன் வீரர் ரிப்னாஸ் அடித்த பந்தை சௌண்டர்ஸ் கோல் காப்பாளர் அசங்க விராஜ் சிறப்பான முறையில் தடுத்தார்.

ரினௌன் அணிக்கு கோல் பெறும் இரு பொன்னான வாய்ப்புகள் ஒரு நிமிட இடைவேளைக்குள் தவறிப்போயின. 42 ஆவது நிமிடத்தில் சௌண்டர்ஸ் கோல் காப்பாளர் சுதாகரிக்கும் முன் பந்தை கோலுக்குள் செலுத்தும் வாய்ப்பொன்று ரினௌன் அணியால் தவறியதோடு, பின்னர் 43 ஆவது நிமிடத்தில் மொஹமட் முஜீப் சௌண்டர்ஸ் பின்கள வீரர்களை தாண்டி முன்னேறி பந்தை கோலுக்குள் செலுத்தியபோதும் அந்தப் பந்து கோல் கம்பத்தை மிகவும் அண்மித்த வகையில் வெளியேறியது

முதல் பாதியின் ஆரம்பத்தில் ஆதிக்கம் செலுத்தியது போன்று கடைசி நேரத்தில் சௌண்டர்ஸ் அணியால் போட்டியில் செல்வாக்கு செலுத்த முடியாமல் போனது. 41 ஆவது நிமிடத்தில் சாகிர் அஹமட் ஆடுகளத்தில் இருந்து வெளியே அழைக்கப்பட்டார். மாற்று வீரராக அஷான் லக்ஷித களம் வந்தார்.

முதல் பாதியின் மேலதி நேரத்தில் வைத்து சௌண்டர்ஸ் அணிக்கும் ப்ரீ கிக் மற்றும் கோணர் கிக் வாய்ப்புகள் கிடைத்தபோதும் ரினௌன் கோல்காப்பாளர் உஸ்மானின் சிறப்பான காப்பால் எதிரணியால் கோல் புகுத்த முடியவில்லை.

இந்நிலையில், ஆரம்பத்தில் பெறப்பட்ட கோலின் உதவியுடன் முதல் பாதியில் செளண்டர்ஸ் வீரர்கள் முன்னிலை பெற்றனர்.

முதல் பாதி: சௌண்டர்ஸ் விளையாட்டுக் கழகம் 1-0 ரினௌன் விளையாட்டுக் கழகம்

இரண்டாவது பாதி ஆட்டத்தின் தொடக்கம் முதல் ரினௌன் அணி பதில் கோல் போடும் முயற்சியாக ஆக்கிரமிப்பு ஆட்டத்தை வெளிக்காட்டியது. இதனால் சௌண்டர்ஸ் ஆரம்பத்தில் சற்று தடுமாறியபோதும் அந்த அணியின் பின் கள வீரர்கள் அரணாக செயற்பட்டு ரினௌன் அணியின் பல கோல் வாய்ப்புகளையும் முறியடித்தனர்.  

குறிப்பாக, கோல் காப்பாளர் அசங்க விராஜ் கோல் செல்லும் நெருக்கமான வாய்ப்புகள் பலவற்றைத் தனது சிறப்பான ஆட்டத்தால் தடுத்து நிறுத்தினார்.

ஆட்டத்தின் 54 ஆவது நிமிடத்தில் சௌண்டர்ஸ் வீரர் பிரியதர்ஷனவிடமிருந்து பந்தைப் பறித்த ஜொப் மைக்கல் கோலுக்காக மேற்கொண்ட முயற்சி சிறப்பாக அமையவில்லை.

 >> போராட்டத்தின் பின் சென் மேரிஸ் அணியை வீழ்த்தியது ரட்ணம்

பதிலுக்கு 61 ஆவது நிமிடத்தில் சௌண்டர்ஸ் வீரர் நிரேஷ் கோலை நோக்கி உயர்த்தி அடித்த பந்து கோல் கம்பத்தில் பட்டும் படாமலும் வெளியே பறந்தது.

அதற்கு அடுத்த நிமிடம் மொஹமட் முஜீப் பரிமாற்றிய பந்தை மொஹமட் ஆசாத் தலையால் முட்டி கோலாக்க முயன்றாலும் அந்த பந்தை அசங்க விராஜ் பாய்ந்து பிடித்துக்கொண்டார்.

ரினௌன் முன்கள வீரர் ஜொப் மைகல் இரண்டாவது பாதி ஆட்டத்தில் பல கோல் வாய்ப்புகளை நெருங்கினார். இதில் 68ஆவது நிமிடத்தில் கோலடிக்கும் வாய்ப்பை கோட்டை விட்டார்.

பின்னர் 73 ஆவது நிமிடத்தில் பிரன்சிஸ் வழங்கிய நீண்ட தூரப் பந்துப் பரிமாற்றத்தைப் பெற்ற அவர், வேகமாக கடத்திச் சென்று கோலுக்குள் புகுத்தியபோதும் அது ஓப் சைட் கோலாக இருந்தது.

போட்டி இறுதிக் கட்டத்தை நெருங்கும்போது இரு அணிகளும் ஆட்டத்தில் வேகம் காட்டின.  

எவ்வாறாயினும் இரண்டாவது பாதி முடிவதற்கு இன்னும் மூன்று நிமிடங்கள் எஞ்சி இருக்கும்போது ரினௌன் அணியின் ஆக்கிரமிப்பு ஆட்டத்திற்கு பலன் கிடைத்தது.

89 ஆவது நிமிடத்தில் ஹமீட் அல் ஹுசைனி கல்லூரி வீரர் சாஜித்திற்கு பந்தை ரிப்னாஸ் வழங்க, மீண்டும் சாஜித் சிறந்த முறையில் ரிப்னாசுக்கு பரிமாற்றம் செய்தார். வந்த வேகத்தியேயே பந்தை கோலுக்குள் செலுத்தியதன் மூலம் அணிக்கான முதல் கோலை அணித் தலைவர் ரிப்னாஸ் பெற்றுக்கொடுத்தார்.

கோல் எண்ணிக்கை சமநிலையடைந்ததைத் தொடர்ந்து இடம்பெற்ற மேலதிக நேர ஆட்டத்தில் சௌண்டர்ஸ் அணிக்கு கோல் புகுத்த சில வாய்ப்புகள் கிட்டியபோதும் அது வெற்றி அளிக்கவில்லை.

இறுதியில் முதல் பாதியில் சௌண்டர்ஸ் ஆதிக்கம் செலுத்த, இரண்டாவது பாதியில் ரினௌன் ஆதிக்கம் செலுத்தியதால் போட்டி 1-1 என்ற கோல் வித்தியாசத்தில் சமநிலையில் முடிந்தது.   

முழு நேரம்: சௌண்டர்ஸ் விளையாட்டுக் கழகம் 1-1 ரினௌன் விளையாட்டுக் கழகம்

கோல் பெற்றவர்கள்

சௌண்டர்ஸ் விளையாட்டுக் கழகம்கசுன் ஜயசூரிய

ரினௌன் விளையாட்டுக் கழகம் – மொஹமட் ரிப்னாஸ்