டெல்லி அணியின் புதிய தலைவராக டேவிட் வோர்னர்

Indian Premier League 2023

61
Indian Premier League 2023

இந்தியாவில் இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் டெல்லி கெபிடல்ஸ் அணியின் தலைவராக அவுஸ்திரேலியாவின் அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரருமான டேவிட் வோர்னர், ஐபிஎல் போட்டிகளில் கடந்த பல ஆண்டுகளாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைவராக செயல்பட்டு வந்தார். இதில் 2016இல் அவர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சம்பியன் பட்டம் வென்றது.

அதேபோல, ஒவ்வொரு ஐபிஎல் சீசனிலும் துடுப்பாட்டத்தில் பிரகாசித்து ஓட்டங்களைக் குவித்த டேவிட் வோர்னர், கடந்த சில ஆண்டுகளாக பின்னடைவை சந்தித்தார். இதனால் டேவிட் வோர்னரை தலைவர் பதவியிலிருந்து தூக்கிய சன்ரைசர்ஸ் அணி பின்னர் இறுதிப் பதினொருவரில் இருந்தும் நீக்கி கதிரையில் அமர வைத்தது.

இதனிடையே, கடந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் டேவிட் வோர்னரை சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி விடுவித்த நிலையில் அவரை டெல்லி கெபிடல்ஸ் அணி 6.25 கோடிக்கு வாங்கியது.

இதேநேரம், கடந்த 2 ஆண்டுகளாக டெல்லி கெபிடல்ஸ் அணியின் தலைவராக இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான ரிஷப் பாண்ட் செயல்பட்டு வந்தார். இந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் திகதி அவர் கார் விபத்தில் சிக்கி உயிர்த்தப்பியிருந்தார். தற்போது சிகிச்சை பெற்று வருகின்ற ரிஷப் பாண்ட்டுக்கு காயத்திலிருந்து மீண்டு கிரிக்கெட் ஆட சிறிது காலம் எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, ரிஷப் பாண்ட் தற்போது ஓய்வில் இருப்பதால், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைவர் யார் என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி கெபிடல்ஸ் அணியின் தலைலவராக டேவிட் வோர்னர் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த அணி நிர்வாகம்n உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பொண்டிங் மற்றும் அணி நிர்வாகம் எடுத்த தீர்மானத்துக்கு அமைய இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் ஒருசில போட்டிகளில் டெல்லி அணியை டேவிட் வோர்னர் வழிநடத்தியிருந்தமை குறிப்பிடத்தது.

36 வயதான வோர்னர், இதுவரை 162 ஐபிஎல் போட்டிகளில் 42.01 சராசரியில் 5,881 ஓட்டங்களை எடுத்துள்ளார். ஐபிஎல் தொடரில் 4 சதங்கள் அடித்துள்ள அவர், 55 அரைச் சதங்களைக் குவித்து ஐபிஎல் தொடரில் அதிக அரைச் சதங்கள் அடித்தவர் என்ற சாதனையை அவர் தக்கவைத்துள்ளார்.

அதேபோல, கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக துடுப்பாட்டத்தில் பிரகாசித்த அவர், 438 ஓட்டங்களைக் குவித்து அந்த அணிக்காக அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராக இடம்பிடித்தார்.

ஒட்டுமொத்தமாக, வோர்னர் ஐபிஎல்லில் 69 போட்டிகளில் தலைவராக செயல்பட்டு 35 வெற்றி மற்றும் 32 தோல்விகளையும் பெற்றுள்ளார். இரண்டு போட்டிகளில் முடிவில்லை.

இதேவேளை, கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் உதவி தலைவராக நியமிக்கப்பட்ட அக்ஷர் படேல் இந்த ஆண்டும் அப்பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க, இம்முறை ஐபிஎல் தொடரில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சௌரவ் கங்குலியும் இணைந்துள்ளார். அந்த அணியின் இயக்குநராக அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நடப்பு ஐபிஎல் சீசனில் டெல்லி கெபிடல்ஸ் அணி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<