அல்வேஸின் இழப்பால் உலகக் கிண்ண பிரேசில் அணிக்கு மற்றொரு நெருக்கடி

421

பிரேசில் கால்பந்து அணியின் பின்கள வீரரான டானி அல்வேஸ் பிரான்ஸ் சம்பியன் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்கான போட்டியில் முழங்கால் காயத்திற்கு உள்ளானதை அடுத்து எதிர்வரும் உலகக் கிண்ண போட்டியில் இருந்து நீக்கப்பட்டதாக பிரேசில் கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது.

”அவர் மீண்டு வருவதற்கான அனைத்து சாத்தியங்களும் நழுவிவிட்டன. தற்போதைய நிலையில் உலகக் கிண்ணத்திற்கு டானியல் அல்வேஸை தேர்வு செய்வது சாத்தியமில்லாதது” என்று பிரேசில் கால்பந்து சம்மேளனத்தின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

லெஸ் ஹெர்பிஸ் அணிக்கு எதிராக கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரெஞ்ச் கிண்ண இறுதிப் போட்டியின்போதே 35 வயதான அல்வேஸ் காயமடைந்தார். அந்த போட்டியில் அவரது பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணி 2-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் பட்டத்தை வென்றது.

பிரேசிஸ் அணி ஆறாவது தடவையாக உலகக் கிண்ணத்தை வெல்ல எதிர்பார்க்கும் உலகக் கிண்ண கால்பந்து போட்டி ரஷ்யாவில் எதிர்வரும் ஜுன் மாதம் 14 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

பிரேசில் கால்பந்து ஜாம்பவானும் மூன்று முறை உலகக் கிண்ணத்தை வென்றவருமான பீலேவின் ட்விட்டர் (Twitter) பதிவில் கூறியிருப்பதாவது, ”இதனைக் கேட்க மிகவும் கவலையாக இருக்கிறது. கால்பந்து வீரர்கள் ஆட்டங்களை இழப்பதை வெறுக்கின்றனர், அதுவும் உலகக் கிண்ண போட்டிகளை இழப்பது மிக மோசமானது என்பது எனக்குத் தெரியும்” என்றார்.

மார்செலோவின் கன்னத்தில் அறைந்த ரொபர்டோவுக்கு 4 போட்டிகள் தடை

அல்வேஸின் இழப்பு உலகக் கிண்ணத்திற்கான பிரேசில் அணி முகம் கொடுக்கும் இரண்டாவது நெருக்கடியாகும். அந்த அணி காயத்துக்கு உள்ளாகி இருக்கும் தனது நட்சத்திர முன்கள வீரரான நெய்மார் காயத்தில் இருந்து மீண்டுவருவதை எதிர்பார்த்துள்ளது. அவர் கடந்த மார்ச் மாதம் தொடக்கம் எந்த போட்டியிலும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.    

2006 ஆம் ஆண்டு தனது முதல் போட்டியில் விளையாடியது தொடக்கம் அல்வேஸ் பிரேசில் அணிக்காக இதுவரை 107 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அவர் இம்முறை உலகக் கிண்ணத்தில் பிரேசில் அணியில் இடம்பிடிப்பது உறுதியாகி இருந்த நிலையிலேயே இந்த சூழ்நிலைக்கு முகம்கொடுத்துள்ளார். பிரேசில் அணி உலகக் கிண்ண ஆரம்ப சுற்றில் சுவிட்சர்லாந்து, கொஸ்டாரிக்கா மற்றும் செர்பிய அணிகள் இடம்பெற்றுள்ள குழுவில் உள்ளது.

உலகக் கிண்ணத்திற்கான பிரேசில் குழாம் எதிர்வரும் திங்கட்கிழமை (14) உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.

தனது கடைசி உலகக் கிண்ண போட்டியாக இருக்க வாய்ப்பு உள்ள இந்த உலகக் கிண்ணத்தில் அல்வேஸ் விளையாட முடியாமல் போயிருப்பது குறித்து பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியின் பயிற்றுவிப்பாளர் உனை எமெரி (Unai Emery) கவலையை வெளியிட்டுள்ளார்.

”டானி அல்வேஸுக்கு எது நல்லது என்பது பற்றியே மருத்துவர்கள் முடிவு செய்தனர். அவருக்காக நான் உண்மையில் வருந்துகிறேன்” என்று எமெரி குறிப்பிட்டார்.  

பார்சிலோனா மற்றும் ஜுவான்டஸ் அணியின் முன்னாள் வீரரான டானி அல்வேஸ், தனது கால்பந்து வாழ்வில் 38 கிண்ணங்களை வென்றுள்ளார். தனது 17 ஆண்டு கால்பந்து வாழ்வில் சிறுபருவ அணியான எஸ்போர்டே கிளப் டி பஹியா (Esporte Clube Bahia) கழகத்திற்காக முதல் கிண்ணத்தை வென்ற அவர் தொடர்ந்து செவில்லா அணிக்கு ஐந்து கிண்ணங்களையும் பார்சிலோனா 23, ஜுவான்டஸ் 2 மற்றும் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்கு இதுவரை நான்கு கிண்ணங்களையும் வென்றுள்ளார்.   

ரியெல் மெட்ரிட்டுடனான இறுதிப் போட்டிக்கு லிவர்பூல் தகுதி

டானி அல்வேஸ் பிரேசில் அணிக்காக மூன்று வெற்றியாளர் பதக்கங்களை பெற்றுள்ளார்.

இந்நிலையில் அல்வேஸ் போன்ற இயற்கையான திறமை கொண்ட வீரரை இழந்திருக்கும் பிரேசில் கால்பந்து அணி அவருக்கு நிகரான வலது பின்கள நிலையில் மாற்று வீரர் ஒருவரை தேர்ந்தெடுப்பதில் சிரமத்தை எதிர்கொண்டுள்ளது.

பிரேசில் அணியின் மற்றைய வலது பின்கள வீரரான கோரின்தியன்ஸ் அணிக்கு ஆடும் பக்னரும் தற்போது காயத்திற்கு உள்ளாகி இருப்பதோடு அவர் மருத்துவர் ரொட்ரிகோ லாஸ்மரை இன்று (13) சந்திக்கவுள்ளார். இந்த மருத்துவரே நெய்மாருக்கு சத்திரசிகிச்சை செய்தவராவார்.    

மறுபுறம் பிரேசில் அணியின் மற்றொரு பின்கள வீரரான மன்செஸ்டர் சிட்டி கழகத்திற்கு விளையாடும் டானிலோ இந்த பருவத்தில் போதிய திறமையை வெளிப்படுத்தாதது பலரதும் விமர்சனத்திற்கு உள்ளானது.

பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியால் உலக சாதனை தொகையான 222 மில்லியன் யூரோவுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட 26 வயதான நெய்மார் உலகக் கிண்ணத்திற்கு முன் உடல் தகுதி பெற்றுவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனது சக கழகத்தைச் சேர்ந்தவரும் பிரேசில் அணி வீரருமான மார்கின்ஹோஸ், ”தேசிய அணிக்கும் அவர் (நெய்மார்) அவசியமாக உள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.   

2019 ஆசிய கிண்ணத் தொடரில் அணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

”அவரது தற்போதைய நிலைமையைப் பார்க்க நன்றாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பது முக்கிய விடயமாகும்” என்று நெய்மார் பற்றி மார்கின்ஹோஸ் விபரித்திருந்தார்.

மே மாதம் 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பிரேசில் அணியின் பயிற்சி முகாமுக்கு நெய்மாரை 100 சதவீதம் தயார்படுத்துவதே தற்போதைய இலக்கு என்று அவரது மருத்துவரான லாஸ்மர், சாவோ போலோ பத்திரிகை ஒன்றுக்கு குறிப்பிட்டுள்ளார்.

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க  <<