IPL தலைவர்களாக அவதாரம் எடுக்கும் வோர்னர், எய்டன்

Indian Premier League 2023

129

இந்தியாவில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் டெல்லி கெபிடல்ஸ் அணியின் புதிய தலைவராக அவுஸ்திரேலியா அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னரும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய தலைவராக தென்னாபிரிக்கா அணியின் எய்டன் மார்கரமும்  நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் மார்ச் 31ஆம் திகதி முதல் மே 28ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில், டெல்லி கெபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இந்த ஆண்டு போட்டித் தொடரில் தத்தமது அணிகளின் புதிய தலைவர்களை இன்று (23) உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக டெல்லி அணியின் தலைவராக இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான ரிஷப் பாண்ட் செயல்பட்டு வந்தார். இதனிடையே, துரதிஷ்டவசமாக அவர் கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் திகதி கார் விபத்தில் சிக்கி உயிர்த்தப்பியிருந்தார். எனவே அவருக்கு ஏற்பட்டுள்ள காயத்திலிருந்து மீண்டு களம் திரும்ப சிறிது காலம் எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிஷப் பாண்ட் இவ்வாறு விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளது இந்திய அணியை மட்டுமல்லாது ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி கெபிடல்ஸ் அணிக்கும் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இம்முறை ஐபிஎல் தொடரிலும் அவருக்கு விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், நடப்பு ஐபிஎல் பருவத்திற்கான டெல்லி கெபிடல்ஸ் அணியின் தலைலவராக அவுஸ்திரேலியாவின் அதிரடி வீரர் டேவிட் வோர்னர் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை டெல்லி கெபிடல்ஸ் அணி நிர்வாகம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதற்கு முன்னர் டேவிட் வோர்னர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை திறம்பட வழிநடத்திய அனுபவத்தைக் கொண்டுள்ளார். அணியின் தலைவராக சிறப்பான ஆட்டத்தையும் அவர் வெளிப்படுத்தி உள்ளார். மேலும் 2016இல் அவர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சம்பியன் பட்டம் வென்றது. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டே டெல்லி அணி டோவிட் வோர்னரை தவைவராக நியமித்துள்ளது.

இதேவேளை, நடப்பு ஐபிஎல் பருவத்திற்கான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைவராக தென்னாபிரிக்கா அணியின் நட்சத்திர சகலதுறை வீரர் எய்டன் மார்க்ரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக சன்ரைசர்ஸ் அணி ஐபிஎல் தொடரில் மிக மோசமாக விளையாடியது. 2021இல் 3 வெற்றிகளை மட்டுமே பெற்ற அந்த அணி, 2022இல் 6 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 8ஆவது இடத்தையே பிடித்தது. கடந்த 2 ஆண்டுகளில் 28 போட்டிகளில் 9 வெற்றிகள், 18 தோல்விகள், ஒரு சமநிலை என மோசமான பெறுபேறுகளை அந்த அணி பெற்றுக் கொண்டது.

இதையடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமைப் பயிற்சியாளர் டொம் மூடி பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார். அதன்பிறகு மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் பிரையன் லாரா, கடந்த ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அதேபோல, கடந்த ஆண்டு சன்ரைசர்ஸ் அணியின் தலைவராக பணியாற்றிய கேன் வில்லியம்சன் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாகச் செயல்படவில்லை. இதையடுத்து, 2023 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் அந்த அணியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைவராக தென்னாபிரிக்கா வீரர் எய்டன் மார்க்ரம் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. 28 வயதான மார்க்ரம், தென்னாபிரிக்கா அணிக்காக 33 டெஸ்ட், 47 ஒருநாள் மற்றும் 31 T20I போட்டிகளில் விளையாடியுள்ளார்.

மேலும் அண்மையில் நிறைவடைந்ம SA20 தொடரில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்குத் தலைமை தாங்கி, அந்த அணிக்கு சம்பியன் பட்டத்தை வென்று கொடுக்கவும் முக்கிய காரணமாக இருந்தார். இதன் காரணமாக ஐபிஎல் தொடரிலும் சன்ரைசர்ஸ் அணியின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<