இராணுவ மெய்வல்லுனர் தொடரில் கிழக்கு மாகாண வீரர்கள் பிரகாசம்

524

இலங்கையின் மெய்வல்லுனர் விளையாட்டுத்துறையின் வளர்ச்சிக்கு பாரிய பங்களிப்பை வழங்கி அதனை நிலைபெறச் செய்து வருகின்ற இலங்கை இராணுவம், வடக்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட இலங்கையின் அனைத்து மாகாணங்களையும் சேர்ந்த வீரர்களுக்கு தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் ஜொலிப்பதற்கான வாய்ப்புக்களை அண்மைக்காலமாக வழங்கி வருகின்றமை அனைவரும் அறிந்த விடயமாகும்.

இந்நிலையில், வருடத்தின் இறுதி மெய்வல்லுனர் போட்டித் தொடராகவும், இராணுவத்தின் ஒலிம்பிக் விழா என்று அழைக்கப்படுகின்ற இலங்கை இராணுவத்தில் உள்ள படைப்பிரிவுகளுக்கிடையில் நடத்தப்படுகின்ற 54ஆவது இராணுவ மெய்வல்லுனர் போட்டிகள் கடந்த 3ஆம் திகதி முதல் தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்றதுடன், 12 போட்டி சாதனைகளும் முறியடிக்கப்பட்டன.

இதேவேளை, கடந்த காலங்களைப் போல இம்முறை போட்டித் தொடரிலும் இலங்கை இராணுவ வீரர்கள் தங்களது திறமைகளை அபாரமாக வெளிப்படுத்தியிருந்ததுடன், அதிலும் குறிப்பாக கிழக்கு மாகாண வீரர்களும் வெற்றிகளைப் பதிவு செய்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இல்ஹாமுக்கு முதல் தங்கம்

அண்மையில் நிறைவடைந்த 43ஆவது தேசிய விளையாட்டு விழாவில் காலில் ஏற்பட்ட சிறு உபாதை காரணமாக எதிர்பாராத விதமாக ஆண்களுக்கான 110 மீற்றர் தடை தாண்டலில் தோல்வியைத் தழுவிய இராணுவ இயந்திரவியல் மற்றும் பொறியியல் படைப்பிரிவைச் சேர்ந்த வொஷிம் இல்ஹாம், முதற்தடவையாக இராணுவ மெய்வல்லுனர் போட்டித் தொடரில் தங்கப்பதக்கம் வென்றார். அவர் குறித்த போட்டியை 14.51 செக்கன்களில் நிறைவுசெய்ததுடன், இவ்வருடத்துக்கான தனது சிறந்த காலத்தையும் பதிவுசெய்தார்.

இந்நிலையில் 2011 இல் பாடசாலைக் கல்வியை முடித்துக்கொண்டு இலங்கை இராணுவத்தின் அழைப்பில் இராணுவ மெய்வல்லுனர் குழாமில் இணைந்துகொண்டு பயிற்சிகளை மேற்கொண்டு வந்த இல்ஹாம், 2012ஆம் ஆண்டு நடைபெற்ற இராணுவ தொண்டர் படை மெய்வல்லுனர் போட்டிகளில் முதற்தடவையாகக் கலந்துகொண்டு 4ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். இதனையடுத்து தொடர்ந்து இராணுவ மெய்வல்லுனர் போட்டிகளில் கலந்துகொண்டு நாளுக்கு நாள் தனது திறமைகளை வெளிப்படுத்தி வந்த அவர், கடந்த வருடம் நடைபெற்ற பாதுகாப்புப் படை மெய்வல்லுனர் மற்றும் தொண்டர் படை மெய்வல்லுனர் ஆகிய போட்டிகளில் முதலிடத்தையும், இராணுவ மெய்வல்லுனர் போட்டிகளில் முதற்தடவையாக 2ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. முன்னதாக தேசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 110 மீற்றர் தடைதாண்டலில் தங்கப்பதக்கம் வெல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வொஷிம் இல்ஹாம், போட்டியை 14.88 செக்கன்களில் நிறைவுசெய்து 5ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டதுடன், கடந்த மாதம் நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் கலந்துகொண்ட அவர், போட்டித் தூரத்தை 14.57 செக்கன்களில் நிறைவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆனால், கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான தடை தாண்டலில் கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி முதற்தடவையாக கலந்துகொண்ட வொஷிம் இல்ஹாம், போட்டித் தூரத்தை 14.90 செக்கன்களில் கடந்து வெள்ளிப்பதக்கத்தை வென்று தனது முதலாவது தேசிய மட்ட வெற்றியைப் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இராணுவ பொதுச்சேவை படைப் பிரிவைச் சேர்ந்த சாலிந்த ரந்திவ வெள்ளிப்பதக்கத்தையும், இராணுவ இயந்திரவியல் மற்றும் பொறியியல் படைப் பிரிவைச் சேர்ந்த ரங்க கெலும் வெண்கலப்பதக்கத்தையும் வென்றனர்.

ஆஷிக்கிற்கு 2ஆவது தங்கம்

இராணுவ மெய்வல்லுனர் போட்டிகளில் இலங்கை இராணுவத்தின் இயந்திரவியல் மற்றும் பொறியியல் படைப்பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்திய கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த Z.T.M ஆஷிக் ஆண்களுக்கான பரிதி வட்டம் எறிதலில் 43.05 மீற்றர் தூரம் எறிந்து இராணுவ மெய்வல்லுனர் போட்டிகளில் தொடர்ச்சியாக 2ஆவது தடவையாகவும் தங்கப்பதக்கத்தினை பெற்றுக்கொண்டார்.

எனினும், கடந்த 2 வாரங்களுக்கு முன் மாத்தறையில் நடைபெற்ற 43ஆவது தேசிய விளையாட்டு விழாவில் இதே போட்டியில் கலந்துகொண்ட ஆஷிக், 42.97 மீற்றர் தூரம் எறிந்து தங்கப்பதக்கம் வென்றிருந்துடன், கடந்த மாத முற்பகுதியில் தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்ற 95ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளிலும் இலங்கை இராணுவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட ஆஷிக், ஆண்களுக்கான பரிதி வட்டம் எறிதலில் 42.48 மீற்றர் தூரம் எறிந்து 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இதன்படி இவ்வருடம் நடைபெற்ற முக்கிய 3 மெய்வல்லுனர் போட்டித் தொடர்களிலும் ஆஷிக், வெற்றிகளைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இராணுவ பீரங்கிப் படைப் பிரிவைச் சேர்ந்த பந்துல பெரேரா 40.22 மீற்றர் தூரத்தை எறிந்து இரண்டாமிடத்தையும், இராணுவ இலேசாயுத காலற் படைப் பிரிவைச் சேர்ந்த எஸ்.எஸ் ஜயதிலக 40.21 மீற்றர் தூரத்தை எறிந்து மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

100 மீற்றரில் அஷ்ரப் 3ஆவது இடம்

வருடத்தின் அதி வேகமான இராணுவ வீரரைத் தெரிவு செய்கின்ற ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவரும், இலங்கை இராணுவத்தின் இயந்திரவியல் மற்றும் பொறியியல் படைப்பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட மொஹமட் அஷ்ரப், 10.65 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து 3ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

எனினும் மாத்தறையில் நடைபெற்ற 43ஆவது தேசிய விளையாட்டு விழாவிலும் குறித்த போட்டியை 10.86 செக்கன்களில் நிறைவு செய்த அஷ்ரப், 3ஆவது இடத்தை பெற்றுக்கொண்டதுடன், கடந்த மாத முற்பகுதியில் தியகமவில் நடைபெற்ற 95ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளில் ஆண்களுக்கான 100 மீற்றரில், 10.71 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இம்முறை தேசிய விளையாட்டு விழாவில் தங்கப்பதக்கத்தை வென்று இவ்வருடத்தின் அதிவேக வீரராக முடிசூடிய, இராணுவ பீரங்கி படைப்பிரிவைச் சேர்ந்த ஹிமாஷ ஏஷான், போட்டியை 10.64 செக்கன்களில் நிறைவுசெய்து வெள்ளிப்பதக்கத்தையும், இத்தாலியில் மெய்வல்லுனர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்ற இலங்கை இயந்திரவியல் மற்றும் பொறியியல் படைப்பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட யுபுன் பிரியதர்ஷன அபேகோன், 10.47 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து தனது தனிப்பட்ட சிறந்த காலத்தைப் பதிவு செய்ததுடன், ஆண்டின் அதிவேக இராணுவ வீரராகவும் முடிசூடினார்.

எனினும் கடந்த மாதம் நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் சம்பின்ஷிப் தொடரிலும் பங்கேற்றிருந்த யுபுன் பிரியதர்ஷன, 10.52 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து தங்கப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நீளம் பாய்தலில் மிப்ரானுக்குத் தோல்வி

ஆண்களுக்கான நீளம் பாய்தலில் இராணுவ இயந்திரவியல் மற்றும் பொறியியல் படைப்பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட எம்.ஐ.எம் மிப்ரான் எதிர்பாராத விதமாக மீண்டும் அதிர்ச்சித் தோல்வியைத் தழுவினார்.

கடந்த வருடம் நடைபெற்ற இராணுவ மெய்வல்லுனர் போட்டித் தொடரில் 7.75 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து புதிய போட்டி சாதனையை நிகழ்த்திய மிப்ரானுக்கு, இம்முறை போட்டித் தொடரில் 6ஆவது இடம் கிடைத்தது. அவர் குறித்த போட்டியின் முதல் சுற்றில் 7.36 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து இறுதி 8 பேர் குழாமிற்கு தெரிவாகியிருந்த போதிலும், அதன்பிறகு மேற்கொண்ட 3 முயற்சிகளிலும் தோல்வியைத் தழுவிய மிப்ரான், 6ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

எனினும், கடந்த 2 வாரங்களுக்கு முன் மாத்தறையில் நடைபெற்ற 43ஆவது தேசிய விளையாட்டு விழாவில் இதே போட்டியில் கலந்துகொண்ட மிப்ரான், குறித்த போட்டியில் 7.04 மீற்றர் தூரத்தை மாத்திரம் பாய்ந்து 7ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டதுடன், கடந்த மாத முற்பகுதியில் நடைபெற்ற 95ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில், 7.72 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து 3ஆவது இடத்தை அவர் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இராணுவ சேவைப் படைப்பிரிவைச் சேர்ந்த ஜானக பிரசாத் விமலசிறி, 8.13 மீற்றர் தூரம் பாய்ந்து புதிய போட்டி சாதனை நிகழ்த்தியதுடன், 2 வாரங்களுக்குள் 3ஆவது தடவையாக தேசிய மட்ட வெற்றியையும் பதிவு செய்தார். முன்னதாக மாத்தறையில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழா மற்றும் அநுராதபுரத்தில் நடைபெற்ற இளைஞர் சேவைகள் விளையாட்டு விழாவிலும் ஜானக பிரசாத் தங்கப்பதக்கங்களை வென்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கடந்த 2 வருடங்களாக உபாதை காரணமாக மெய்வல்லுனர் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றிருந்த ஜானக, கியூபா நாட்டு பயிற்சியாளர் லுயில் மிரன்டாவிடம் பயிற்சிகளைப் பெற்றவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், 7.76 மீற்றர் தூரத்தைப் பாய்ந்த இலங்கை பீரங்கிப் படையைச் சேர்ந்த எச்.ஜி சம்பத் 2ஆவது இடத்தையும், 7.59 மீற்றர் தூரத்தைப் பாய்ந்த இராணுவ இயந்திரவியல் மற்றும் பொறியியல் படைப்பிரிவைச் சேர்ந்த கிரேஷன் தனஞ்சய 3ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்

இதேவேளை, இப்போட்டியில் கலந்துகொண்ட இராணுவ இயந்திரவியல் மற்றும் பொறியியல் படைப்பிரிவைச் சேர்ந்த சப்ரின் அஹமட், 7.36 மீற்றர் தூரம் பாய்ந்து 5ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். எனினும் கடந்த வருடம் நடைபெற்ற இராணுவ மெய்வல்லுனரில் இதே போட்டியில் கலந்துகொண்ட அவர், 7.57 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து 3ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டார்.

முப்பாய்ச்சலில் சப்ரினுக்கு ஏமாற்றம்

ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் இராணுவ இயந்திரவியல் மற்றும் பொறியியல் படைப்பிரிவைப் பிரிதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட சப்ரின் அஹமட், 5ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். சுகயீனத்துக்கும் மத்தியில் குறித்த போட்டியில் கலந்துகொண்ட அவர், 15.55 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்தார்.

எனினும், கடந்த 2 வாரங்களுக்கு முன் மாத்தறையில் நடைபெற்ற 43ஆவது தேசிய விளையாட்டு விழாவில் இதே போட்டியில் கலந்துகொண்ட சப்ரின் அஹமட், 14.92 மீற்றர் தூரம் பாய்ந்து 5ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டதுடன், கடந்த மாத முற்பகுதியில் நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் 15.96 மீற்றர் தூரம் பாய்ந்து வெண்கலப்பதக்கத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தேசிய சாதனையுடன், 12 போட்டி சாதனைகள் முறியடிப்பு

விறுவிறுப்பாகவும், போட்டித் தன்மையுடனும் கடந்த 3 தினங்களாக தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்ற 54ஆவது இராணுவ மெய்வல்லுனர் விளையாட்டு விழாவில் ஒரு தேசிய சாதனை மற்றும் ஆறு போட்டி சாதனைகள் நிகழ்த்தப்பட்டன.

இதில் ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் இலங்கை பீரங்கிப் படைப் பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட சஞ்சய ஜயசிங்க, போட்டித் தூரத்தை 16.39 செக்கன்களில் நிறைவுசெய்து 4 வருடங்களுக்குப் பிறகு புதிய தேசிய சாதனை படைத்தார். முன்னதாக 2012ஆம் ஆண்டு 16.37 மீற்றர் தூரம் பாய்ந்து எரந்த தினேஷ் பிரணாந்துவினால் நிகழ்த்தப்பட்ட சாதனையை அவர் முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இராணுவ பொதுச்சேவை படைப் பிரிவினைச் சேர்ந்த சம்பத் ரணசிங்க, 78.70 மீற்றர் தூரத்தை எறிந்து தனது சிறந்த தூரத்தைப் பதிவு செய்ததுடன், புதிய போட்டி சாதனையும் நிகழ்த்தினார். எனினும் இம்முறை உலக மெய்வல்லுனர் தொடரில் பங்கேற்றிருந்த வருண லக்‌ஷான், 76.52 மீற்றர் தூரத்தை எறிந்து 2ஆவது இடத்தையும், றியோ ஒலிம்பிக்கில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய சுமேத ரணசிங்க, 3ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

இந்நிலையில் பெண்களுக்கான 400 மீற்றர் தடை தாண்டலில் கலந்துகொண்ட கௌஷல்யா மதுஷானி, 01 நிமிடமும் 01.19 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து புதிய போட்டி சாதனை படைக்க, ஆண்களுக்கான 400 மீற்றர் தடை தாண்டலில் கலந்துகொண்ட அரவிந்த சத்துரங்க, 51.37 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து மற்றுமொரு போட்டி சாதனை நிகழ்த்தினார்.  அத்துடன், பெண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்ட கே.கே குமாரி, போட்டி தூரத்தை 37 நிமிடங்களும் 35.02 செக்கன்களில் நிறைவுசெய்து புதிய போட்டி சாதனை படைத்தார்.  

இதேவேளை, பெண்களுக்கான 3000 மீற்றர் தடை தாண்டலில் கலந்துகொண்ட நிலானி ரத்னயாக்க, போட்டியை 10 நிமிடங்களும் 13.12 செக்கன்களில் நிறைவு செய்து புதிய போட்டி சாதனை படைக்க, பெண்களுக்கான 10 கிலோமீற்றர் நடை போட்டியில் கலந்துகொண்ட கே.மதுரிகா, போட்டியை 51 நிமிடங்களும் 45.33 செக்கன்களில் நிறைவுசெய்து தங்கப்பதக்கத்தை வென்று புதிய போட்டி சாதனையும் நிகழ்த்தினார். இந்நிலையில், ஆண்களுக்கான நீளம் பாய்தலில் கலந்துகொண்ட ஜானக பிரசாத் விமலசிறி, 8.13 மீற்றர் தூரம் பாய்ந்து புதிய இராணுவ சாதனையுடன், போட்டி சாதனையும் நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இது இலங்கையின் நீளம் பாய்தல் வரலாற்றில் 2ஆவது மிகச் சிறந்த பாய்ச்சலாகவும் இடம்பெற்றது.

இந்நிலையில், முன்னதாக நடைபெற்ற இராணுவ அஞ்சலோட்ட போட்டிகளின் போது ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 4×800 அஞ்சலோட்டம் மற்றும் ஆண்களுக்கான 4×1500 அஞ்சலோட்டப் போட்டிகளில் புதிய போட்டி சாதனை நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.