அணைக்கட்டுமான பணிகளுக்காக நிதி உதவி செய்யும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

244
@AFP

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவரான சர்பராஸ் அஹ்மட், தற்போதுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் குழாம் மொத்தமாக இணைந்து அவர்களின் நாட்டிலுள்ள அணைகளின் கட்டுமானப் பணிகளுக்காக மொத்தமாக, 3.2 மில்லியன் பாகிஸ்தான் ரூபாய்களை (இலங்கை நாணயப்படி 4.2 மில்லியன் ரூபாய்கள்) வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அணைக்கட்டுமான பணிகளுக்காக பணம் வழங்கியது தொடர்பில் மேலும் பேசிய சர்பராஸ் அஹ்மட், அணைகள் கட்டுவது நாட்டின் வளர்ச்சிக்கு எதிர்காலத்தில் உதவும்  ஒரு நன்மையான விடயம் எனக் குறிப்பிட்டார்.

“பொதுமக்களும் கட்டாயமாக அணைக் கட்டுமான பணிகளுக்கு நிதி உதவிசெய்ய வேண்டும், ஏனெனில் அது நாட்டுக்கு நன்மை பயக்கும் பெறுமதியான விடயங்களில் ஒன்றாகும்“ எனப் பேசிய சர்பராஸ், “பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3.2 மில்லியன் ரூபா பணத்தை அணைக் கட்டுமானப் பணிகளுக்காக கொடுகின்றது“ என்றார்.

>> இலங்கை அணியில் இருந்து சந்திமால் நீக்கம், திக்வெல்ல இணைப்பு

இதற்கு முன்னதாக, காணொளி ஒன்றில் பேசியிருந்த பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த சர்வதேச கிரிக்கெட் நடுவரான அலீம் தார் அவரது நாட்டின் அணைக்கட்டுமான பணிகளுக்காக 10,000 அமெரிக்க டாலர்களை (இலங்கை நாணயப்படி 1.6 மில்லியன் ரூபாய்கள்) வழங்கப்போவதாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1992 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை பாகிஸ்தான் அணி வெல்வதற்கு காரணமாக இருந்தவரும், அந்நாட்டின் புதிய பிரதமருமான இம்ரான் கான் அண்மையில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், பாகிஸ்தானுக்கு தற்போது சவாலாக இருக்கும் நீர்பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய அந்நாட்டில் அதிக நீர்த்தேக்கங்கள் அடுத்து வரும் ஏழு ஆண்டுகளுக்குள் அமைக்கப்பட வேண்டும் எனவும் இவற்றுக்கான வேலைகள் செய்யப்படாதவிடத்து நாடு பெரும் வரட்சியால் பாதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.

பாகிஸ்தான் புதிய பிரதமரின் இந்த எச்சரிக்கையை கருத்திற் கொண்டே அந்நாட்டில் (கிரிக்கெட் உட்பட) பல்வேறு துறைகளில் பிரசித்தி பெற்ற நபர்கள்  அணைக்கட்டு கட்டுமான பணிகளுக்காக நிதி உதவி செய்வதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<