பாகிஸ்தான் கிரிக்கெட்டில் சஹீட் அப்ரிடிக்கு புதிய பதவி

191

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தேர்வுக் குழு இடைக்காலத் தலைவராக முன்னாள் தலைவர் சஹீட் அப்ரிடி தேர்வு நியமிக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்தது. இதன் காரணமாக பாகிஸ்தான் அணியின் தலைவர் மற்றும் தேர்வுக் குழு தலைவர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தது.

இதன் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் பதவியிலிருந்து ரமீஸ் ராஜா அதிரடியாக நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக நஜாம் சேதி தலைமையிலான 14 பேர் கொண்ட இடைக்கால நிர்வாகக் குழுவொன்று அந்நாட்டு பிரதமரினால் நியமிக்கப்பட்டது. அதேபோல, மொஹமட் வசீம் தலைமையிலான தேர்வுக் குழுவும் அதிரடியாகக் கலைக்கப்பட்டது.

இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் இடைக்கால தேர்வுக் குழு தலைவராக முன்னாள் ஜாம்பவான் சஹீட் அப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளார்.

அப்துல் ரசாக், ராவ் இப்திகார், அஞ்சும் உள்ளிட்ட முன்னாள் வீர்ர்கள் அடங்கிய தேர்வுக் குழுவை அப்ரிடி வழிநடத்துவார். மேலும், பாகிஸ்தான் கிரிக்கெட் தேர்வுக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக முன்னாள் வீரர் ஹாரூன் ரஷித் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, பாகிஸ்தான் தேர்வுக் குழு இடைக்காலத் தலைவராக தேர்வு செய்யப்பட்டது குறித்து பேசிய சஹீட் அப்ரிடி கூறியதாவது, ‘எனக்கு மதிப்பளித்து இந்தப் பொறுப்பை வழங்கியது தொடர்பாக நான் பெருமை கொள்கிறேன். எனது திறமையின் மூலம் இந்தப் பணியைச் சிறப்பாக செய்வேன். பாகிஸ்தான் அணி வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டும்’ என்றார்.

மேலும் பாகிஸ்தான் அணியை வெற்றிப்பாதைக்கு திருப்பி அழைத்துக் கொண்டு போக வேண்டும் என்பதுதான் தனது கனவு என்றும் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் தேசிய அணி வலுவாக செயல்படவும் ரசிகர்களை நம்பிக்கையைப் பெறவும் நாங்கள் உதவுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

1996ம் ஆண்டு முதல் 2018 வரை சர்வதேச கிரிக்கெட்டில் ஆடிய சஹீட் அப்ரிடி, 27 டெஸ்ட், 398 ஒருநாள் மற்றும் 99 T20i போட்டிகளில் ஆடி 11,200 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இதில் 541 விக்கெட்டுகளும் அடங்கும்;. அதேபோல, 83 சர்வதேச போட்டிகளில் அவர் தலைவராகவும் செயல்பட்டுள்ளதுடன், இங்கிலாந்தில் 2009இல் நடைபெற்ற T20 உலகக் கிண்ணத்தை வென்ற பாகிஸ்தான் அணியில் உறுப்பினராகவும் இருந்தார்.

இதேவேளை, நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மறறும் ஒருநாள் தொடர்களில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான பாகிஸ்தான் குழாத்தை அப்ரிடி தலைமையிலான தேர்வுக்குழு நியமனம் செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<