பறிபோகிறதா பாபர் அசாமின் தலைமைப் பதவி?

184

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வருவதால் அந்த அணியின் தலைவர் பொறுப்பில் இருந்து பாபர் அசாமையும், பயிற்சியாளர் பதவியில் இருந்து சக்லைன் முஷ்டாக்கையும் நீக்குவதற்கு அந்நாட்டு கிரிக்கெட் சபை கவனம் செலுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, அடுத்த ஆண்டு ஜூலை மாதத்துக்குப் பிறகு டெஸ்ட் தலைமைப் பொறுப்பில் இருந்தும், பயிற்சியாளர் சக்லைன் முஷ்டாக், எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள நியூசிலாந்துடனான டெஸ்ட் தொடருக்குப் பிறகு அந்தப் பதவியில் இருந்தும் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சமீபத்தில் நடைபெற்ற T20 உலகக் கிண்ணத்தில் இறுதிப் போட்டி வரைக்கும் சென்று இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

இதையடுத்து, இங்கிலாந்து கிரிக்கெட் அணி 17 ஆண்டுகளுக்குப்; பிறகு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியதுடன், அந்த தொடரை 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முழுமையாக கைப்பற்றி சாதனை படைத்தது.

மறுபுறத்தில் பாகிஸ்தான் அணி சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அனைத்துப் போட்டிகளிலும் தோல்வியடைந்தது இதுவே முதல் முறையாகும், மேலும் நடப்பாண்டில் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக நான்கு டெஸ்ட் போட்டிகளை இழந்த முதல் பாகிஸ்தான் தலைவர் என்ற பெருமையை பாபர் அசாம் பெற்றார்.

இந்தப் பின்னணியில் சொந்த மண்ணில் தோல்வியை தழுவிய பாகிஸ்தன் அணிக்கும், அதன் தலைவர் பாபர் அசாமுக்கு எதிராக முன்னாள் வீரர்கள் கருத்துக்களை வெளியிட்டிருந்ததுடன், தலைவர் பொறுப்பில் இருந்து பாபர் அசாமை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதனிடையே, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்த உடனேயே பாபர் அசாம் மற்றும் பயிற்சியாளர் சக்லைன் லாகூருக்குச் சென்றனர். பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் முன்னாள் தலைவர் ரமீஸ் ராஜா தலைமையில் இடம்பெற்ற உயர்மட்ட கூட்டத்தில் தேர்வுக் குழுவின் தலைவர் மொஹமட் வசீமும் கலந்துகொண்டார்.

சுமார் 3 மணித்தியாலங்கள் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிரான படுதோல்வி குறித்து விவாதிக்கப்பட்டதுடன், தலைவர் பதவி, அணித் தேர்வு, பயிற்சியாளர் பங்கு, அணியின் ஒவ்வொரு அம்சமும் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதில் குறிப்பாக இங்கிலாந்து-பாகிஸ்தான் இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் தோல்வி குறித்து அணித்தலைவர் பாபர் அசாம் மற்றும் பயிற்சியாளர் சக்லைன் முஷ்டாக் ஆகியோரிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் முன்னாள் தலைவர் ரமிஸ் ராஜா அதிருப்தி வெளியிட்டார்.

இந்த சந்திப்பு குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் உயர் அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,

பாபர் அசாம் மட்டுப்;படுத்தப்பட்ட ஓவர்களைக் கொண்ட போட்டிகளுக்கு தலைவராக இருப்பதே சிறந்தது என்றும், டெஸ்ட் அணியின் தலைவர் பதவியை ஷான் மசூத் அல்லது மொஹமட் ரிஸ்வானுக்கு அளிக்க வேண்டும் என்று கிரிக்கெட் சபை கருதுவதாகவும், டெஸ்ட் தலைவராக பாபர் அசாமின் எதிர்காலம் குறித்து விவாதங்கள் நடத்தப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார். அதேநேரம், பாபர் அசாம் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் டெஸ்ட் தலைவர் பதவியில் இருந்து மாற்றப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், கடந்த செவ்வாய்கிழமை வரை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தலைவராக இருந்த ரமிஸ் ராஜா, புதன்கிழமை அந்தப் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இதனையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் இடைக்கால தலைவராக நஜாம் சேதி நியமிக்கப்பட்டார்.

அதன் பின்னர், எதிர்வரும் 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நியூசிலாந்துடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான 16 பேர் கொண்ட பாகிஸ்தான் குழாம் அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்ததுடன், தலைவர் பதவி பாபர் அசாமுக்கு வழங்கப்பட்டது.

எனவே, பாபர் அசாமின் தலைவர் பதவி தொடர்பில் நஜாம் சேதி தலைமையிலான இடைக்கால நிர்வாகக் குழு இதுவரை எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<