திமுத், கௌஷாலின் சிறந்த துடுப்பாட்டத்தினால் இலங்கை அணி வலுவான நிலையில்

2422
South African Invitation XI v Sri Lankans

இலங்கை கிரிக்கெட் அணி மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் மாதம், 26ஆம் திகதி போர்ட் எலிசபெத்தில் ஆரம்பமாகவுள்ள நிலையில், தென் ஆபிரிக்க பதினொருவர் அணிக்கெதிரான 3 நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியில், இலங்கை அணி இன்று பங்குபற்றியது.

தென் ஆபிரிக்க கிரிக்கெட் அணிக்கு புதிய அணித் தலைவர் நியமனம்

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அந்த வகையில் களமிறங்கிய இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான திமுத் கருணாரத்ன மற்றும் கௌஷால் சில்வா முதல் விக்கெட்டுக்காக 159 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்ற நிலையில், இருவரும் ஒய்வு பெற்றனர்.

அதனை தொடர்ந்து களமிறங்கிய தில்ருவன் பெரேரா 25 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த போதிலும், குசல் மென்டிஸ் 10 பவுண்டரிகள் உள்ளடங்கலாக 51 ஓட்டங்களை இலங்கை அணி சார்பாக பெற்றுக்கொடுத்தார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட  நிலையில், நீண்ட இடைவேளைக்கு பின்னர் அணியில் இணைந்து கொண்ட அணித் தலைவர் எஞ்சலோ மெத்திவ்ஸ் ஓட்டம் எதுவும் பெறாத நிலையிலும், தினேஷ் சந்திமால் 25 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். அதனை தொடர்ந்து களமிறங்கிய தனஞ்சய டி சில்வா 57 ஓட்டங்களுடனும் உபுல் தரங்க 8 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

தென் ஆபிரிக்க முதல் தர அணி சார்பாக ஜார்ஜ் லின்ட் 72 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

முதலாம் நாள் ஆட்ட நிறைவின் போது இலங்கை அணி 87 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 328 ஓட்டங்களுடன் வலுவான நிலையிலுள்ளது.  

போட்டியின் சுருக்கம்

இலங்கை அணி (முதல் இன்னிங்ஸ்): 328/6 (87) – திமுத் கருணாரத்ன 71, கௌஷால் சில்வா 80, குசல் மென்டிஸ் 51, தனஞ்சய டி சில்வா 57*, தில்ருவன் பெரேரா 25, ஜார்ஜ் லின்ட் 72/2, ஜேசன் ஸ்மித் 26/1, டுவனோ ஒலிவியர் 33/1