துடுப்பாட்டத்தில் அதிரடி காட்டிய பபசர வதுகே, தனன்ஜய லக்ஷான்

180

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் டயலொக்-SLC தேசிய சுப்பர் லீக் தொடரில் இன்றைய தினம் ஒரு போட்டி மாத்திரம் நடைபெற்றிருந்த நிலையில், வேகமான ஓட்டக்குவிப்பின் மூலம் காலி அணி அதிசிறந்த வெற்றியை பதிவுசெய்துள்ளது.

தம்புள்ளயில் நடைபெறவிருந்த கண்டி மற்றும் தம்புள்ள அணிகளுக்கு இடையிலான போட்டி மழைக்காரணமாக முழுமையாக நிறுத்தப்பட, கண்டி பல்லேகலையில் நடைபெற்ற போட்டியில் ஜப்னா மற்றும் காலி அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

சாமிக்க கருணாரத்னவை வாங்கியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

இந்தப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஜப்னா அணி, தனன்ஜய டி சில்வாவின் இரண்டாவது சதத்தின் உதவியுடன், 46 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 272 ஓட்டங்களை குவித்துக்கொண்டது. அணித்தலைவர் தனன்ஜய டி சில்வா இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று, 3 சிக்ஸர்கள் மற்றும் 11 பௌண்டரிகள் அடங்கலாக 106 பந்துகளில் 109 ஓட்டங்களை குவித்தார்.

இவருக்கு அடுத்தப்படியாக அனுபவ துடுப்பாட்ட வீரர் லஹிரு திரிமான்ன 85 ஓட்டங்களை குவிக்க, காலி அணியின் பந்துவீச்சில் அகில தனன்ஜய 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் காலி அணியின் இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முதல் ஆட்டத்தில் மழை குறுக்கிட்டிருந்தது. எவ்வாறாயினும் மீண்டும் ஆரம்பித்த இந்த போட்டியில் காலி அணிக்கு வெறும் 25 ஓவர்களில் 197 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது. குறிப்பாக இந்த போட்டியின் வெற்றியானது இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை தக்கவைப்பதற்கு காலி அணிக்கு முக்கியமான ஒன்றாக இருந்தது.

இந்தநிலையில் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய காலி அணி சார்பில், பபசர வதுகே மற்றும் தனன்ஜய லக்ஷான் அதிரடியாக துடுப்பெடுத்தாட வெறும் 21.3 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரரான பபசர வதுகே 70 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 10 பௌண்டரிகள் அடங்கலாக 92 ஓட்டங்களை குவிக்க, தனன்ஜய லக்ஷான் 44 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 11 பௌண்ரிகள் அடங்கலாக 70 ஓட்டங்களை குவித்தார்.

இதன்மூலம் போட்டியில் வெற்றிபெற்ற காலி அணி 17 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தை பிடித்துள்ளதுடன், ஜப்னா அணி 18 புள்ளிகளுடன் 2வது இடத்தை பிடித்துள்ளது. இரண்டு அணிகளுக்கும் தலா ஒவ்வொரு போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில், குறித்த போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை தக்கவைத்துக்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<