ஒருநாள் உலகக் கிண்ணம்: 9 போட்டிகளின் திகதிகள் மாற்றம்

ICC Men's Cricket World Cup 2023

135

இந்தியாவில் நடைபெறவுள்ள ICC ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி உட்பட 9 போட்டிகளுக்கான அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடர் இந்தியாவில் ஒக்டோபர் 5ஆம் திகதி முதல் நவம்பர் 19ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.

இத்தொடரில், இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் போட்டி அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் ஒக்டோபர் 15ஆம் திகதி நடைபெறுவதாக இருந்தது. எவ்வாறாயினும். ஒக்டோபர் 15ஆம் திகதி நவராத்திரி விழாவின் முதல் நாள் கொண்டாட்டம் என்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகளில் முழு கவனம் செலுத்துவது சிரமம் எனவும் குறித்த போட்டியை வேறொரு நாளில் நடத்த வேண்டும் என அஹமதாபாத் பொலிஸார் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இது குறித்து தீவிரமாக ஆலோசித்து வந்த சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC), இந்தியா – பாகிஸ்தான் போட்டி உட்பட மொத்தம் 9 போட்டிகளுக்கான அட்டவணையில் மாற்றம் செய்து புதிய அட்டவணையை நேற்று (09) வெளியிட்டது.

அதன்படி, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி முதலில் ஒக்டோபர் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அஹமதாபாத்தில் நடைபெறும் என்று திட்டமிடப்பட்டது, ஆனால் ஒருநாள் முன்னதாக மாற்றப்பட்டு தற்போது ஒக்டோபர் 14ஆம் திகதி சனிக்கிழமை அதே மைதானத்தில் நடைபெறும்.

ஒக்டோபர் 12ஆம் திகதி ஹைதரபாத்தில் நடைபெறவிருந்த பாகிஸ்தான் – இலங்கை அணிகள் இடையிலான போட்டி ஒக்டோபர் 10ஆம் திகதிக்கும், ஒக்டோபர் 12இல் அவுஸ்திரேலியா – தென்னாப்பரிக்கா அணிகள் லக்னோவில் விளையாட இருந்த போட்டி ஒக்டோபர் 13ஆம் திகதிக்கும் மாற்றப்பட்டுள்ளது.

நியூசிலாந்து – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டி ஒக்டோபர் 14இல் சென்னையில் நடைபெற இருந்த நிலையில், அந்தப் போட்டி ஒக்டோபர் 13ஆம் திகதிக்கு பகல் – இரவு ஆட்டமாக மாற்றப்பட்டுள்ளது.

அதோபோல, இங்கிலாந்து – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே ஒக்டோபர் 10ஆம் திகதி தரம்சாலாவில் நடைபெற இருந்த பகலிரவுப் போட்டி, பகல் ஆட்டமாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் இந்த போட்டியானது காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இதனிடையே, நவம்பர் 12ஆம் திகதி அவுஸ்திரேலியா – பங்களாதேஷ்; மோதும் போட்டி பகல் ஆட்டமாக புனேவிலும், இங்கிலாந்து – பாகிஸ்தான் போட்டி மதியம் 2 மணிக்கு கொல்கத்தாவிலும் நடைபெறுவதாக இருந்த நிலையில், அந்தப் போட்டி ஒருநாள் முன்னதாக நவம்பர் 11ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது போட்டி நடப்புச் சம்பியன் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கு இடையே ஒக்டோபர் 5ஆம் திகதி அஹமதாபாத்தில் உள்ள நரேந்திhகும்ர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

முதலாவது அரையிறுதிப் போட்டி நவம்பர் 15ஆம் திகதி மும்பையிலும், நவம்பர் 16ஆம் திகதி இரண்டாவது அரையிறுதிப் போட்டி கொல்கத்தாவிலும் நடைபெறுகிறது. நவம்பர் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டி அஹமதாபாத்தில் நடைபெறுகிறது.

இதற்கிடையே இம்முறை ஒருநாள் உலகக் கிண்ணத் தொடருக்கான டிக்கெட்டுகள் ஆகஸ்ட் 25ஆம் திகதி ஆரம்பம என ICC அறிவித்துள்ளது. இதன்படி, ஆகஸ்ட் 15ஆம் திகதி ரசிகர்கள் ICC இன் இணையத்தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, டெல்லி, புனே நகரில் நடைபெறும் இந்தியா விளையாடும் போட்டிகளின் டிக்கெட் விற்பனை ஆகஸ்ட் 31ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதன்பின்னர் செப்டம்பர் முதலாம் திகதி தரம்சாலா, லக்னோ, மும்பை நகரங்களில் நடைபெறும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனையும் நடைபெறுகிறது.

செப்டம்பர் 2ஆம் திகதி பெங்களூர், கொல்கத்தா போட்டிகளுக்கான டிக்கெட்டுகளும், செப்டம்பர் 3ஆம் தேதி அஹமதாபாத்தில் நடைபெறும் இந்திய போட்டிகளுக்கான டிக்கெட்டுகளும், செப்டம்பர் 15ஆம் திகதி அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்படவுள்ளன.

இதேவேளை, ஆகஸ்ட் 25ஆம் திகதி மற்ற அணிகளுக்கான பயிற்சிப் போட்டி மற்றும் லீக் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை ஆரம்பமாகவுள்ளது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<