T20 உலகக் கிண்ணம் 2024 எப்போது ஆரம்பமாகும்?

T20 World Cup 2024

219

மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரானது அடுத்தாண்டு ஜூன் 4ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

ICC இன் ஆடவருக்கான 9ஆவது T20 உலகக் கிண்ணத் தொடர் மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஐக்கிய அமெரிக்காவில் நடைபெற உள்ளதுடன், மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.

இதில் போட்டியை நடத்தும் மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஐக்கிய அமெரிக்கா அணிகள் நேரடியாகவும், இறுதியாக கடந்த ஆண்டு நடைபெற்ற T20 உலகக் கிண்ணத்தில் முதல் 8 இடங்களைப் பிடித்த அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகளும், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் T20 அணிகளுக்கான தரவரிசை அடிப்படையிலும் அடுத்த ஆண்டு T20 உலகக் கிண்ணத் தொடருக்கு தகுதி பெற்றுள்ளன.

எஞ்சியுள்ள 8 இடங்களை தேர்வு செய்ய நடைபெற்று வரும் தகுதிகாண் போட்டிகளில் இதுவரை ஸ்கொட்லாந்து, அயர்லாந்து, பப்புவா நியூ கினியா ஆகிய 3 அணிகள் தகுதி பெற்றுள்ளன. ஆசியா, ஆபிரிக்கா, அமெரிக்க பிராந்தியங்களில் இருந்து மேலும் 5 நாடுகள் T20 உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், 2024 T20 உலகக் கிண்ணத் தொடரானது ஜூன் மாதம் 4ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள இப்போட்டிகள் 10 மைதானங்களில் நடைபெறவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ள அமெரிக்காவில் உள்ள பல மைதானங்களை ICC அதிகாரிகள் குழு இந்த வாரம் ஆய்வு செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவை பொறுத்தமட்டில் லாடர்ஹில், புளோரிடா மற்றும் மோரிஸ்வில்லி, டல்லாஸ் மற்றும் நியூயோர்க்கில் ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், டல்லாஸில் உள்ள கிராண்ட் ப்ரேரி மைதானம், மோரிஸ்வில்லில் உள்ள சர்ச் ஸ்ட்ரீட் பார்க் மைதானம் மற்றும் நியூயோர்க்கில் உள்ள வான் கார்ட்லாண்ட் பார்க் மைதானம் ஆகிய 3 மைதானங்களும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்த இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை.

எனவே, T20 உலகக் கிண்ணப் போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் குறித்து, மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்க கிரிக்கெட் சபைகளுடன் கலந்துரையாடி அடுத்த சில வாரங்களில் ICC இறுதி முடிவுகளை எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<