த்ரில் வெற்றியோடு பிளே ஒப் வாய்ப்பினை உறுதி செய்த லக்னோவ் சுபர் ஜயன்ட்ஸ்

54

இந்த ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) T20 தொடரின் 68ஆவது லீக் போட்டியில் லக்னோவ் சுபர் ஜயன்ட்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்களை ஒரு ஓட்டத்தினால் வீழ்த்தி த்ரில்லர் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

பிளே-ஓஃப் சுற்றுக்கு முன்னேறியது சென்னை சுபர் கிங்ஸ்!

மேலும் இந்த வெற்றியுடன் லக்னோவ் சுபர் ஜயன்ட்ஸ் அணி இந்தப் பருவத்திற்கான IPL தொடரில் தமது லீக் போட்டிகள் அனைத்தினையும் நிறைவு செய்து அதில் மொத்தமாக 8 வெற்றிகளோடு பிளே ஒப் சுற்றுக்கு தெரிவாகும் மூன்றாவது அணியாக மாறுவதுடன், இப்போட்டியில் தோல்வியினைத் தழுவிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் IPL தொடரிலிருந்து வெளியேறுகின்றது.

லக்னோவ் சுபர் ஜயன்ட்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையிலான IPL போட்டி நேற்று (20) கொல்கத்தா நகரில் ஆரம்பமாகியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை லக்னோவ் சுபர் ஜயன்ட்ஸ் அணிக்கு வழங்கியது.

அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய லக்னோவ் சுபர் ஜயன்ட்ஸ் அணியினர் போட்டியில் முதலில் துடுப்பாடி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 176 ஓட்டங்கள் எடுத்தனர்.

லக்னோவ் சுபர் ஜயன்ட்ஸ் துடுப்பாட்டத்தில் முன்வரிசை வீரர்கள் சொதப்பிய போதும் மத்திய வரிசையில் களமிறங்கிய நிகோலஸ் பூரான் அதிரடி ஆட்டத்துடன் 30 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 58 ஓட்டங்கள் எடுத்தார்.

ஆப்கானிஸ்தான் தொடரில் விளையாடவுள்ள சகீப்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்துவீச்சில் வைபவ் ஆரோரா, சர்துல் தாக்கூர் மற்றும் சுனீல் நரைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 177  ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது ஆரம்பத்தில் இருந்தே தடுமாறிய போதும், ரிங்கு சிங் தனது அபார ஆட்டம் மூலம் கொல்கத்தா அணியின் வெற்றிக்காக இறுதிவரை போராட்டம் காண்பித்திருந்தார்.

போட்டியின் இறுதி இரண்டு ஓவர்களுக்கும் வெற்றிக்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு வெற்றி பெறுவதற்கு 41 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், இறுதி இரண்டு ஓவர்களிலும் கொல்கத்தா ரிங்கு சிங்கின் போராட்டத்தினால் கொல்கத்தா அணி 39 ஓட்டங்களையே எடுத்தது. அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 175 ஓட்டங்களுடன் போட்டியில் வெறும் ஒரு ஓட்ட வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் இறுதிவரை ஆட்டமிழக்காது நின்ற ரிங்கு சிங் வெறும் 33 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 67 ஓட்டங்கள் எடுத்தார். அதேவேளை ஜேசன் ரோய் 28 பந்துகளுக்கு 45 ஓட்டங்களை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

லக்னோவ் சுபர் ஜயன்ட்ஸ் அணியின் பந்துவீச்சில் ரவி பிஸ்னோய் மற்றும் யாஷ் தாக்கூர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்து தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்தார். போட்டியின் ஆட்டநாயகன் விருது லக்னோவ் சுபர் ஜயன்ட்ஸ் அணியின் வீரர் நிகோலஸ் பூரானிற்கு வழங்கப்பட்டது.

போட்டியின் சுருக்கம்

லக்னோவ் சுபர் ஜயன்ட்ஸ் – 176/8 (20) நிகோலஸ் பூரான் 58(30), சுனீல் நரைன் 28/2(4), வைபவ் ஆரோரா 30/2(4)

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – 175/7 (20) ரிங்கு சிங் 67(33)*, ரவி பிஸ்னோய் 23/2(4)

முடிவு – லக்னோவ் சுபர் ஜயன்ட்ஸ் 1 ஓட்டத்தினால் வெற்றி

இம்முறை இடம்பெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் சகல போட்டிகளையும் இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com ஊடாக (இலங்கையில் மாத்திரம்) நேரடியாகப் பார்வையிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<