காலி அணியை சுழலால் சுருட்டிய தம்புள்ளை அணிக்கு இரண்டாவது வெற்றி

573
Dambulla vs Galle

கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற SLC T-20 லீக்கின் இன்றைய (22) இரண்டாவது போட்டியில், காலி அணியை எதிர்கொண்ட தம்புள்ளை அணி 95 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று, தொடரின் இரண்டாவது வெற்றியை பதிவுசெய்துள்ளது.

முதல் போட்டியில் கண்டி அணியை வீழ்த்திய நிலையில் தம்புள்ளை அணி களமிறங்க, கொழும்பு அணியுடன் அடைந்த தோல்வியுடன் காலி அணி இன்று களமிறங்கியது.

>> கண்டியுடனான பரபரப்பான மோதலில் சுப்பர் ஓவரின் பின்னர் வென்ற கொழும்பு

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தம்புள்ளை அணித் தலைவர் இசுறு உதான முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். இதனடிப்படையில் களமிறங்கிய தம்புள்ளை அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 179 ஓட்டங்களை பெற்றது. ஆரம்பத்தில் 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த தம்புள்ளை அணி தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய தனுஷ்க குணதிலக 13 ஓட்டங்களுடனும், ரமித் ரம்புக்வெல்ல ஓட்டங்களின்றியும் வெளியேறினார். எனினும் முதல் போட்டியில் சதமடித்து அசத்திய அஷான் பிரியன்ஜன் மற்றும் சதீர சமரவிக்ரம ஜோடி 100 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக்கொடுக்க, அடுத்துவந்த இளம் வீரர் ஹசித போயாகொட மற்றும் அணித் தலைவர் இசுறு உதான சிறப்பான பங்களிப்பை வழங்கி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர்.

அஷான் பிரியன்ஜன் 41 பந்துகளுக்கு 57 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, சதீர சமரவிக்ரம 48 ஓட்டங்களை பெற்று, அரைச்சதத்தை தவறவிட்டார். இதனையடுத்து ஹசித போயாகொட ஆட்டமிழக்காமல்  29 ஓட்டங்களையும், இசுறு உதான 25 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர். காலி அணி சார்பில் தனன்ஜய டி சில்வா 11 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், கசுன் ராஜித 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

>> ஸ்டுவர்ட் புரோட்டுக்கு அபராதம் விதித்தது ஐசிசி

பின்னர், சவாலான வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த காலி அணி மிகவும் மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது. தங்களது முதல் போட்டியில் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறிய குசல் மெண்டிஸ் (4), நிரோஷன் டிக்வெல்ல (13), தனன்ஜய டிசில்வா (13) ஆகியோர் மீண்டும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்த, திமுத் கருணாரத்னவும், 17 ஓட்டங்களுடன் துரதிஷ்டவசமாக ரன்-அவுட் ஆனார்.

நேற்றைய போட்டியில் காலி அணிசார்பாக அரைச்சதம் விளாசிய அஞ்செலோ பெரேரா இன்றைய தினமும் அதிரடியை வெளிப்படுத்த முற்பட்டார். எனினும் லஹிரு மதுசங்க எல்லைக்கோட்டுக்கு அருகில் எடுத்த அற்புதமான பிடியெடுப்பின் மூலம் அவர் ஆட்டமிழந்து வெளியேறினார். இறுதியில், வந்த வேகத்தில் அசேல குணரத்ன ஆட்டமிழந்து அணியை முழுமையாக ஏமாற்றிச் சென்றார்.

பின்னர் அடுத்துவந்த வீரர்களும் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, காலி அணி 17.5 ஓவர்கள் நிறைவில் வெறும் 84 ஓட்டங்களுக்கு சுருண்டு, 95 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது. தம்புள்ளை அணிசார்பில் அபாரமாக பந்து வீசிய தனுஷ்க குணதிலக 21 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும்,வனிது ஹசரங்க 11 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

>> பிரியஞ்சனின் சதத்தோடு T20 லீக் தொடரை வெற்றியுடன் ஆரம்பித்த தம்புள்ளை

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்று வரும் SLC T-20 லீக்கின் நான்கு போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், கொழும்பு மற்றும் தம்புள்ளை அணிகள் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளதுடன், கண்டி மற்றும் காலி அணிகள் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

தம்புள்ளை – 179/6 (20) – அஷான் பிரியன்ஜன் 57(41), சதீர சமரவிக்ரம 48(37), தனன்ஜய டி சில்வா 11/2

காலி – 84 (17.5) – திமுத் கருணாரத்ன 17(22), தனுஷ்க குணதிலக  21/4, வனிது ஹசரங்க 11/3

முடிவு – தம்புள்ளை அணி 95 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<