அவுஸ்திரேலிய ஒரு நாள், T20 அணிகளுக்கு புதிய தலைவர்கள்

688

மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான (ஒரு நாள், T20) அவுஸ்திரேலிய அணிகளின் தலைவர்களாக டிம் பெய்ன் மற்றும் ஆரோன் பின்ச் ஆகியோரை தேர்வு செய்திருப்பதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இன்று (8) அறிவித்திருக்கின்றது.

ஆஸியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக ஜஸ்டின் நியமனம்

டெரன் லீமனின் பதவி விலகலையடுத்து அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின்..

கடந்த மார்ச் மாதம் கேப் டவுனில் தென்னாபிரிக்க அணியுடன் இடம்பெற்றிருந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பந்தினை சேதப்படுத்திய விடயத்தில் அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித், உப தலைவர் டேவிட் வோர்னர் மற்றும் கெமரோன் பான்க்ரோப்ட் ஆகியோர் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டனர். எனவே, ஸ்மித், வோர்னர் ஆகியோருக்கு தலா ஒரு வருட போட்டித் தடையும் பான்க்ரோப்ட்டிற்கு 9 மாத போட்டித் தடையும் விதிக்கப்பட்டது.

அணித் தலைவர், உபதலைவர் ஆகியோருக்கு தடை விதிக்கப்பட்ட காரணத்தினால் தென்னாபிரிக்காவுடன் எஞ்சியிருந்த டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா, தற்காலிக தலைவரான டிம் பெயினினால் வழிநடாத்தப்பட்டிருந்தது.    

தென்னாபிரிக்க அணியுடனான டெஸ்ட் போட்டிகளை அடுத்து இதுவரையில் எந்த சர்வதேசப் போட்டிகளிலும் விளையாடாது இருக்கும் அவுஸ்திரேலிய அணி, அடுத்த இரண்டு மாதங்களிலும் இங்கிலாந்து மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஒரு நாள் மற்றும் T20 போட்டிகள் கொண்ட தொடர்களில் ஆடவிருக்கின்றது. இத் தொடர்களின் போது அவுஸ்திரேலிய அணியினை யார் வழிநடாத்துவர்? என்கிற கேள்விகள் பரவலாக எழுந்த நிலையிலேயே அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் டிம் பெயின் மற்றும் ஆரோன் பின்ச் ஆகியோரின் பெயர்களினை அணித்தலைவர் பதவிக்காக வெளியிட்டிருக்கின்றது.

இந்த சுற்றுப் பயணங்களின் போது நடைபெறப் போகும் ஒரு நாள் போட்டிகளில் அவுஸ்திரேலிய அணியினை, ஏற்கனவே டெஸ்ட் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்த டிம் பெய்ன் தலைமை தாங்கவுள்ளார். அதேபோன்று, ஆரோன் பின்ச் T20 போட்டிகளுக்கான அவுஸ்திரேலிய அணித் தலைவராக செயற்படவிருக்கின்றார். இதேவேளை, பின்ச் இற்கு T20 போட்டிகள் தவிர  அவுஸ்திரேலிய அணியின் ஒரு நாள் போட்டிகளுக்கான உப தலைவர் பதவியும் வழங்கப்பட்டிருக்கின்றது.

இலங்கை அணியுடன் மீண்டும் பணியாற்ற வரும் அவுஸ்திரேலிய உளவியலாளர்

இலங்கை கிரிக்கெட் அணியுடன் கடந்த ஜனவரி மாதம் பணி புரிந்த..

இந்த இரண்டு சுற்றுப் பயணங்களில் முதலாவதாக அவுஸ்திரேலிய அணி ஜூன் மாதம் இங்கிலாந்து சென்று அந்நாட்டு அணியுடன் 5 ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஒரு T20 போட்டி கொண்ட தொடர் என்பவற்றில் ஆடுகின்றது. பின்னர், இங்கிலாந்தில் இருந்து  ஜூலை மாதம் ஜிம்பாப்வேயிற்கு பயணிக்கும் ஆஸி. அணியினர் அங்கு பாகிஸ்தான், ஜிம்பாப்வே ஆகிய அணிகள் பங்குபெறும் முக்கோண T20 தொடரில் விளையாடவுள்ளனர்.

இந்த வெளிநாட்டு சுற்றுப் பயணங்களின் போது  ஒரு நாள் போட்டிகளுக்கான தலைவராக டிம் பெய்ன் நியமிக்கப்பட்ட விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்திருந்த அவுஸ்திரேலிய அணியின் சிரேஷ்ட தேர்வாளர்களின் ஒருவரான ட்ரவர் ஹோன்ஸ், டிம் மிகவும் வலிமையான ஒரு தலைவர். எனவே, இத் தொடரின் போதான (ஒரு நாள்) போட்டிகளில் அவர் அணியினை வழிநடாத்தவுள்ளதோடு அவருக்கு துணையாக ஆரோன் பின்ச் இருப்பார்.“  எனக் குறிப்பிட்டிருந்தார். எனினும், டிம் பெயினினை அவுஸ்திரேலிய அணிக்கு நிரந்தர தலைவராக மாற்றுவதற்கான முடிவுகள் எதனையும் இதுவரை எடுக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய அணி புதிய அணித்தலைவர்களின் அறிவிப்போடு சேர்த்து தமது வெளிநாட்டு சுற்றுப் பயணங்களில் முதலாவதாக இங்கிலாந்தில் இடம்பெறவிருக்கும் ஒரு நாள் (15 பேர்), T20  (14 பேர்) தொடர்களுக்கான குழாம்களினையும் அறிவித்திருக்கின்றது. இந்த இங்கிலாந்து சுற்றுப் பயணத்திலிருந்து காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர்களான பெட் கம்மின்ஸ், மிச்செல் ஸ்டார்க் மற்றும் சகலதுறை வீரர் மிச்செல் மார்ஷ் ஆகியோர் விலகிக் கொள்கின்றனர்.

இதேவேளை, டெஸ்ட் போட்டிகளில் அவுஸ்திரேலிய அணியின் நட்சத்திர சுழல் வீரராகத் திகழும் நதன் லயன் இரண்டு வருடங்களின் பின்னர் ஒரு நாள் போட்டிகளுகளில் விளையாட அழைக்கப்பட்டிருக்கின்றார். லயனோடு சேர்த்து இளம் சுழல் வீரர்களான அஷ்டன் எகார் மற்றும் மிச்செல் ஸ்வெப்சன் ஆகியோருக்கும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் வாய்ப்புத் தரப்பட்டிருக்கின்றது.

நதன் லயன் எங்களிடம் இருக்கின்ற முதன்மையான சுழல் வீரர், சிவப்பு பந்து பயன்படும் போட்டிகளில் சிறப்பாக செயற்படும் அவருக்கு வெள்ளைப் பந்து பயன்படும் போட்டிகள் புதிதானவை அல்ல. இதன் மூலம் அவருக்கு (இங்கிலாந்தில் நடைபெறவுள்ள) உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பினை பெற சந்தர்ப்பம் ஒன்றிணையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றோம். “ என ட்ரவர் ஹோன்ஸ் குறிப்பிட்டிருந்தார்.

இளம் விக்கெட் காப்புத் துடுப்பாட்ட வீரரான அலெக்ஸ் கேரி இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள இரண்டு வகைப் போட்டிகளுக்குமான அவுஸ்திரேலிய அணியில் இணைக்கப்பட்டிருப்பதோடு T20 போட்டிகளுக்கான அவுஸ்திரேலிய அணியின் உப தலைவராகவும் செயற்பட பணிக்கப்பட்டிருக்கின்றார். மறுமுனையில் டெஸ்ட் துடுப்பாட்ட வீரரான ஷோன் மார்ஷ் இற்கும் ஒரு நாள் அணியில் விளையாட வாய்ப்பு தரப்பட்டிருக்கின்றது. எனினும், உஸ்மான் கவாஜா மற்றும் கிரிஸ் லின் ஆகியோருக்கு இங்கிலாந்து தொடரின் எந்தவகைப் போட்டிகளிலும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.  

பிக் பாஷ் T20 தொடரின் துடுப்பாட்ட நட்சத்திரங்களில் ஒருவரான டி. ஆர்சி சோர்ட் இங்கிலாந்து சுற்றுப் பயணத்தின் மூலம் ஒரு நாள் போட்டிகளில் முதல் தடவையாக ஆஸி அணிக்காக விளையாடும் சந்தர்ப்பத்தினை பெறவுள்ளதோடு, சகலதுறை வீரரான ஜேக் வில்டர்மத் இற்கும் T20 போட்டிகளில் அவுஸ்திரேலிய அணியினை முதல் தடவையாக பிரதிநிதித்துவம் செய்யும் வாய்ப்பு கிடைத்திருக்கின்றது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் பார்வையிட <<

காயத்தில் இருக்கும் அவுஸ்திரேலிய அணியின் வேகப்புயல்களான மிச்செல் ஸ்டார்க் மற்றும் பெட் கம்மின்ஸ் ஆகியோர் ஒக்டோபர் மாதம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் பாகிஸ்தானுடன் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரில் அவுஸ்த்திரேலிய அணிக்கு மீண்டும் விளையாட எதிர்பார்க்கப்படுகின்றனர்.

அவுஸ்திரேலிய ஒரு நாள் அணி    

டிம் பெய்ன் (தலைவர்), ஆரோன் பின்ச் (உபதலைவர்), அஷ்டன் எகார், அலேக்ஸ் கேரி, ஜோஸ் ஹெசல்வூட், ட்ராவிஸ் ஹெட், நதன் லயன், கிளேன் மெக்ஸ்வெல், ஷோன் மார்ஷ், ஜை ரிச்சர்ட்சன், கேன் ரிச்சர்ட்சன், டி.ஆர்சி சோர்ட், பில்லி ஸ்டேன்லேக், மார்கஸ் ஸ்டோனிஸ், அன்ட்ரூ டை

அவுஸ்திரேலிய T20 அணி

ஆரோன் பின்ச் (தலைவர்), அலெக்ஸ் கேரி (உப தலைவர்), அஷ்டன் எகார், ட்ராவிஸ் ஹெட், நிக் மடின்சன், கிளேன் மெக்ஸ்வேல், ஜை ரிச்சர்ட்சன், கேன் ரிச்சர்ட்சன், டி. ஆர்சி சோர்ட், பில்லி ஸ்டேன்லேக், மார்க்ஸ் ஸ்டோனிஸ், மிச்செல் ஸ்வெப்சன், அன்ட்ரூ டை, ஜேக் வில்டர்மத்

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<