இந்தியாவின் மோஹன் பகன் அணியை எவ்வாறு எதிர்கொள்ளவுள்ளது கொழும்பு கால்பந்து கழகம்?

3297
Colombo FC and Moham Bagan Priview

ஆசிய கால்பந்து சம்மேளன கிண்ணத்திற்கான தகுதிகாண் போட்டிகளின் முதல் கட்டப் போட்டிகளில் ஒன்றாக கொழும்பு கால்பந்து கழகம் மற்றும் இந்தியாவின் மோஹன் பகன் கழக அணிகளுக்கு இடையிலான மிகவும் எதிர்பார்ப்பு மிக்க போட்டி 31ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) மாலை 3.30 மணிக்கு கொழும்பு ரேஸ் கொர்ஸ் சர்வதேச மைதானத்தில் இடம்பெறவுள்ளது.  

இந்நிலையில் இந்த போட்டி தொடர்பில் சூடு பிடித்துள்ளமையினால், நாம் இந்த இரு அணிகள் தொடர்பிலான ஒரு முன்னோட்டத்தை உங்களுடன் பகிந்துகொள்கின்றோம்.

கொழும்பு கால்பந்து கழகம் 

இலங்கையில் கழகங்களுக்கிடையில் நடைபெறும் டயலொக் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின்  நடப்புச் சம்பியனான கொழும்பு கால்பந்து கழகம் தற்பொழுது இடம்பெறும் டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடரின் தர வரிசையிலும் முன்னிலையில் உள்ளது. அதேபோன்று, 2014-15ஆம் ஆண்டுக்கான FA கிண்ண போட்டிகளிலும் இவ்வணி சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

மேலும் பல பிரபல வீரர்களுடன் அணியைப் பலப்படுத்தும் கொழும்பு கால்பந்து கழகம்

எனினும், இந்த பருவகால டயலொக் சம்பியன்ஸ் லீக்கின் குழு மட்ட போட்டிகளின்போது கடும் போராட்டங்களுக்கு மத்தியிலேயே கொழும்பு கால்பந்து கழகம் விளையாடியது. இவ்வாறான ஒரு நிலையில், 19ஆம் நுற்றாண்டின் இறுதிப் பகுதியில் இந்தியாவில் ஸ்தாபிக்கப்பட்ட மிகவும் பழமையான மற்றும் வலிமைமிக்க அணியாக உள்ள மோஹன் பகன் மெய்வல்லுனர் கழக அணிக்கு எதிராக கொழும்பு கழகம் குறித்த தகுதிகாண் போட்டிகளில் விளையாட உள்ளது.

மீண்டும் சிறந்த நிலைக்குத் திரும்பியுள்ள கொழும்பு கால்பந்து கழகம்

நீண்ட இடைவெளியின் பின்னர் ஜனவரி மாதம் 6ஆம் திகதி ஆரம்பமாகிய டயலொக் சம்பியன்ஸ் லீக்கின் சூப்பர் 8 சுற்றுப் போட்டிகளில், கொழும்பு கால்பந்து கழக அணி சிறந்த வெற்றிகளைப் பெற்று அனைவரும் திருப்தியடையும் நிலையில் உள்ளது.

முதலில், அதிகளவான புள்ளிகளைப் பெற்று தர வரிசையில் முன்னிலையில் இருந்த சொலிட் விளையாட்டுக் கழகத்தை, கொழும்பு அணி 3-0 என்ற கோல்கள் அடிப்படையில் வீழ்த்தியது. பின்னர், விமானப்படை அணியுடனான போட்டியை 2-1 என்ற கோல்கள்  கணக்கில் வெற்றிபெற்றது.

அதனைத் தொடர்ந்து கடந்த வாரம், FA கிண்ணத்தின் நடப்புச் சம்பியனான வலிமை மிக்க ராணுவப்படை விளையாட்டுக் கழக அணியை 2-1 என்ற கோல்கள் வீதத்தில் வெற்றிகொண்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த போட்டிகளில் பெற்ற வெற்றிகளை விட முக்கியமாகக் கவனிக்க வேண்டியம், கொழும்பு கழக அணி தனது வழமையான அதிரடி ஆட்டத்துக்கு மீண்டும் திரும்பியுள்ளமையாகும். மொமஸ் யபோ, சர்வான் ஜோஹர், நாகூர் மீரா  ஆகியோர் ஈர்க்கத்தக்க வகையில் கடந்த போட்டிகளில் திறமைகளை  வெளிப்படுத்தி இருந்தனர். அதேபோன்று, எதிர்வரும் போட்டியிலும் தமது அதியுச்ச திறமைகளை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய வரவுகளுடன் மேலும் வலுவடைந்துள்ள அணி

இந்த போட்டிகளுக்காக தமது அணியைப் பலப்படுத்தும் முகமாக, புதிய வீரர்கள் 8 பேரை கொழும்பு அணி தம்முடன் இணைத்துள்ளது. அதன்படி ஷரித் ரத்னாயக, டிலான் கௌஷல்ய, ருவன் அறுனசிறி, நசீரு ஒபயேமி, ஈ.பி. ஷன்ன, மொஹமட் இஸ்ஸதீன், ஷலன சமீர மற்றும் தேசிய அணியின் துணைத் தலைவராக செயற்பட்ட மொஹமட் ரிப்னாஸ் ஆகியோர் கொழும்பு கால்பந்து கழகத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு கால்பந்து கழகத்தின் முக்கிய நிலையாக, போட்டிகளின்போது களுத்துறை புளு ஸ்டார் அணியை ஒழுங்கு செய்யும் முக்கிய வீரரான நசீரு ஒபயேமி பின்களத்தின் மத்தியை வலுப்படுத்தவுள்ள அதேவேளை, இலங்கை கடற்படை அணி வீரர் ஷலன சமீர பின்களத்தின் இடது புறத்திற்காக தனது பங்களிப்பை வழங்குவார். இவர்கள் கொழும்பு அணியின் பின்கள முக்கிய வீரர்களான ரமீஸ் மற்றும் அபீல் ஆகியோர் மேற்கொண்ட பணியை மேற்கொள்ளவுள்ளனர்.

ரொட்ரிகோடி சில்வா கூட்டணி உடைந்தது : கால்பந்து சம்மேளன தேர்தலில் நான்கு வேட்பாளர்கள்?

அதுபோன்று அணிக்கு புதிதாக உள்வாங்கப்பட்டுள்ள ஷரித் ரத்னாயக மற்றும் டிலான் கௌஷால்ய ஆகியோரும் பின்களத்திற்கு சிறந்த வலு சேர்க்கும் வீரர்களாக உள்ளனர். மேலும், சிறந்த கோல் காப்பாளர்களான ருவன் அறுனசிறி மற்றும் இம்ரான் ஆகியோரும் குழாமில் உள்ளனர்.

அதேபோன்று, தமது முன்களத்தை சிறப்பிப்பதற்காக இலங்கை அணியின் முன்னாள் வீரர்களான ஈ.பி. ஷன்ன (புளு ஸ்டார்) மற்றும் மொஹமட் இஸ்ஸதீன் (இலங்கை ராணுவப்படை) ஆகியோரில் ஒருவர் முதல் பதினொருவரில் உள்வாங்கப்படுவர்.

இவர்கள் இருவரது கடந்த கால சர்வதேச போட்டிகளின் அனுபவங்கள் கொழும்பு அணிக்கு சிறந்த அனுகூலங்களை ஏற்படுத்திக் கொடுக்கும். அதற்கு மேலதிகமாக, இளம் வீரர்களான டிலான் கௌஷல்ய மற்றும் மொஹமட் ரிப்னாஸ் ஆகியோரும் குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளமை, அணிக்கு மேலும் வலு சேர்க்கவுள்ளது.

கொழும்பு ஸாஹிராக் கல்லூரி அணிக்காக ஒன்றாக விளையாடிய ரிப்னாஸ் மற்றும் கொழும்பு கால்பந்து கழகத்தின் முன்னணி வீரர் சர்வான் ஜோஹர் ஆகியோர் மீண்டும் ஒன்றாக ஒரே அணிக்கு விளையாடுகின்றமையானது, சிறந்த இணைப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

நடைபெறவுள்ள போட்டிகள் குறித்து கொழும்பு கால்பந்து கழக அணித் தலைவர் ரவ்மி மொஹிடீன் கருத்து தெரிவிக்கையில்,

”எங்கள் எல்லோருக்கும் தெரியும் மோஹன் பகன் அணி எங்களை விட தர வரிசையில் முன்னிலையில் உள்ளது. எங்களுடைய பின்களத் தடுப்பு வீரர்களுடன் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். அத்துடன், புதிதாக எங்களுடன் இணைந்துள்ள மொஹமட் இஸ்ஸதீன், ஷலன சமீர மற்றும் சரித் ஆகியோர் மிகவும் அனுபவம் உள்ள முக்கியமான வீரர்கள்.

முதல் கட்டப் போட்டி சொந்த மண்ணில் நடைபெறுவதால், கட்டாயம் குறைந்தபட்சம்  1-0 என்ற கோல்  அடிப்படையிலாவது வெற்றி பெறுவது முக்கியமாகும். அவ்வாறு செய்தால் இரண்டாவது கட்ட போட்டியை சமநிலையில் முடித்துக்கொள்ள எதிர்பார்த்துள்ளோம்” என்றார்.

கொழும்பு கால்பந்து கழக பயிற்றுவிப்பாளர் முஹமட் ரூமி கருத்து தெரிவிக்கையில்,

”எமது தரம் மற்றும் திறமைகளை வெளிப்படுத்த இது எமக்கு கிடைத்துள்ள நல்லதொரு சந்தர்ப்பம். ஆகவே, இந்த போட்டியில் நன்றாக விளையாடி எமது திறமைகளை சிறப்பான முறையில் வெளிப்படுத்த வேண்டும். இளம் மற்றும் மூத்த வீரர்களை கொண்ட மிகச் சிறந்த அணி எம்மிடம் உள்ளது. வலிமைமிகுந்த அவ்வணியுடன் வெற்றி பெறக்கூடிய வாய்ப்புக்கள் குறைவாக இருந்தாலும், முழு திறமைகளையும் வெளிப்படுத்தி வெற்றி பெறவே முயற்சி செய்வோம்” என்றார்.

கொழும்பு கால்பந்து குழாம்

ரவ்மி மொஹிடீன் (அணித்தலைவர்) – மொஹமட் ரமீஸ் – மொஹமட் இம்ரான் – பிரபாத் ருவன் அறுனசிறி – ஆசிக் மொஹமட் – நசீரு ஒபயேமி – அபீல் மொஹமட் – ஷலன சமீர – சரித் ரத்னாயக  – மொமஸ் யாபோ  – மொஹமட் முபீஸ் – சர்வான் ஜோஹர் – மொஹமட் ரிப்னாஸ் – மொஹமட் இஸ்ஸதீன் – ஈ.பி. ஷன்ன – டிலான் கௌசல்ய – அபிஸ் ஒலைமி – துவான் ரிஸ்னி – டேவிட் ஒசாஜி – ஷப்ரன் சதார் – நாகூர் மீரா – நிரான் கனிஷ்க – விக்கும் குமாரசிறி – மொஹமட்  ஷிபான் – சிராஜ் மொஹமட் – தனுஷ்க மதுஷங்க

மோஹன் பகன் மெய்வல்லுனர் கழகம் 

இந்தியாவின் மட்டுமன்றி ஆசிவின் மிகப் பழமையான  கால்பந்து கழகங்களில் ஒன்றான மோஹன் பகன் மெய்வல்லுனர் கழகம் 1889ஆம் ஆண்டு மோஹன் பகன் விளையாட்டுக் கழகம் என்ற பெயரில் ஸ்தாபிக்கப்பட்டது.

இந்தியாவின் மிகச் சிறந்த அணிகளில் ஒன்றாகக் காணப்படுகின்ற இவர்கள் கடந்த 127 வருடங்களில் 240 வெற்றிக் கிண்ணங்களை சுவீகரித்துள்ளனர்.

அண்மைய காலங்களில் இவ்வணி பெற்ற வெற்றிகளாக, 2014/15 ஆம் பருவகால ஐ-லீக் தொடரில் சம்பியனாகியதுடன், 2015/16 ஆம் பருவகாலத்திற்கான ஐ-லீக் தொடரின் வெற்றியை மயிரிழையில் தவறவிட்டிருந்தது. இந்த தொடரில் அவ்வணி பெங்களூர் கால்பந்து கழகத்திற்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டது.

இந்நிலையிலேயே ஆசிய கால்பந்து சம்மேளன கிண்ணத்திற்கான தகுதிகாண் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றுள்ள மோஹன் பகன் அணி, ஆரம்பத்தில் கொழும்பு கால்பந்து கழகத்துடன் மோதவுள்ளது.

சிறந்த நிலையிலுள்ள மோஹன் பகன் அணி

மோகுன் பகன் அணி, ஐ-லீக்  தொடரில் ஒரு சிறந்த ஆரம்பத்தை பெற்றிருக்கிறது. ஆகக் கூடுதலாக பெறமுடிந்த 15 புள்ளிகளில் 13 புள்ளிகளை தன்வசமாக்கிக் கொண்டுள்ளது. இவர்கள் முறையே சாஷில் பிரதர்ஸ் (1–0), சில்லொங் லஜொங் (2-0), மினெர்வா பஞ்சாப் (4-0) மற்றும் சென்னை சிட்டி (2-1) ஆகிய அணிகளை வெற்றி கொண்டனர்.

ஆசிய கால்பந்து சம்மேளன கிண்ணத்திற்கான தகுதிகாண் போட்டிகளில் விளையாட முன்னர் இறுதியாக இடம்பெற்ற DSK சிவாஜியன்ஸ் அணியுடனான போட்டியை இவர்கள எந்தவித கோல்களும் இன்றி சமநிலையில் நிறைவு செய்தனர். எனவே, தற்பொழுது அத்தொடரின் தர வரிசையில் மோஹன் பகன் அணி முன்னிலையில் உள்ளது.

முக்கிய வீரர்கள்

ஐ லீக் போட்டிகளில் மோஹன் பகன் கால்பந்து கழகம் திறமையான இந்திய வீரர்களையும், வெளிநாட்டு வீரர்களையும் உள்வாங்கியுள்ளது. பின்கள தடுப்பு வீரரான  பிரேசில் நாட்டின் எட்வர்டோ பெரெய்ராவையும், நடுக்கள வீரர்களான ஹெய்ட்டி நாட்டின் சன்னி நோர்த் மற்றும் ஜப்பானிய வீரர் கட்சுமி யுசா ஆகியோரையும் முக்கிய வீரர்களாகக் கொண்டுள்ளனர்.

சன்னி நோர்த், அண்மையில் இடம்பெற்ற இந்தியன் சுப்பர் லீக் போட்டித் தொடரின் முக்கிய வீரராக இருந்ததுடன், கடந்த கால ஐ லீக் பொட்டிகளில் சிறந்த வீரராகவும் தெரிவாகியுள்ளார்.

அதே நேரம் உள்ளூர் நட்சத்திர கால்பந்து வீரரான ஜேஜே லல்பேக்லுவ மற்றும் ஸ்காட்மன் டர்ரில் டப்பி ஆகியோர் முன்களத்தை பலபடுத்தவுள்ளனர். குறித்த வீரர்கள் இந்த பருவகால ஆரம்ப போட்டிகளில் அதிக கோல்களை பெற்றுள்ளனர்.

விளையாட்டு உத்திகள்

பயிற்சியாளர் சஞ்சய், வழமையாக 4-4-2 என்ற ஒழுங்கு முறையிலேயே தனது அணி வீரர்களை போட்டிக்கு களமிறக்குவார். எனினும் எதிர்வரும் போட்டிகளில் அதில் மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் நம்பப்படுகின்றது.

மோஹன் பகன்  அணி

கட்சுமி யூசா(அணித் தலைவர் ) – தேப்ஜித் மஜும்டர் – ஷில்டன் பௌல் –  ஷிபின்ராஜ் குன்னியில் – ப்ரிடம் கொடல் – ஷோவிக் கோஷ் – சுபாசிஷ் போஸே – பிரபிர் தாஸ் – பிக்ரமஜித் சிங்   – செவிக் சக்ரபோடி  – அசாருடின் மல்லிக் – பிக்ரம்ஜித் சிங் – சென்ஹாஜ் சிங் – பல்வான்ட் சிங்– அனஸ் – கேன் லெவிஸ் – டர்ரில் டப்பி – ஜேஜே லல்பேக்லுவ

இந்தப் போட்டி ஜனவரி  31ஆம் திகதி பிற்பகல் 3.30 மணிக்கு கொழும்பு ரேஸ் கோஸ் சர்வதேச மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையதளமான thepapare.com ஊடாக இப்போட்டியை நேரடியாகப் பார்வையிடலாம்.

போட்டியை நேரடியாகப் பார்வையிடலாம்.