ஆசியக் கிண்ண Super 4 போட்டிகள் எங்கு நடைபெறும்?

Asia Cup 2023

311

ஆசியக் கிண்ணத் தொடரின் Super 4 சுற்றின் 5 போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி என்பன திட்டமிட்டபடி கொழும்பிலேயே நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் பேரவை உறுதிசெய்துள்ளது.

ஆசியக் கிண்ணத் தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கண்டி, கொழும்பு உள்ளிட்ட இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் பெய்து வருகின்ற மழை காரணமாக கொழும்பில் நடைபெறவுள்ள Super 4 சுற்றுப் போட்டிகளை கொழும்புக்கு வெளியில் நடத்துவது பற்றி ஆசிய கிரிக்கெட் பேரவை ஆலோசித்து வந்தது.

இதனால் ஆசிய கிண்ணத் தொடரின் Super 4 சுற்றுப் போட்டிகளையும், இறுதிப் போட்டியையும் தம்புள்ளை அல்லது ஹம்பாந்தோட்டைக்கு மாற்றுவது குறித்து பாகிஸ்தான் மற்றும் இலங்கை கிரிக்கெட் சபைகள் ஆராய்ந்து வந்தன.

குறிப்பாக, கொழும்பில் தொடர் மழை நீடித்தால் ஆசியக் கிண்ணத் தொடரின் எஞ்சிய போட்டிகளை ஹம்பாந்தோட்டையில் நடத்த முடிவெடுக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

இருப்பினும், ஆசியக் கிண்ணத் தொடரின் Super 4 சுற்றுப் போட்டிகள் நடைபெறுகின்ற மைதானத்தை மாற்றுவது தொடர்பாக ஆசிய கிரிக்கெட் பேரவைக்கும், பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கும் பரஸ்பர உடன்பாட்டை எட்ட முடியாததால் ஆசிய கிரிக்கெட் பேரவை தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டனர்.

இதன்படி, ஆசியக் கிண்ணத் தொடரின் Super 4 சுற்றின் 5 போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி என்பன திட்டமிட்டபடி கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்திலேயே நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது. இதனை இலங்கை கிரிக்கெட் சபையும் உறுதிப்படுத்தியுள்ளது.

இதனால் அதிருப்தியடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் சபை ஆசிய கிரிக்கெட் பேரவையின் நிர்வாக குழுக் கூட்டத்தை உடனடியாக கூட்டவேண்டும் எனத் தெரிவித்துள்ளது. மேலும், இதுகுறித்து ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவரான ஜெய் ஷாவிற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கடிதமும் எழுதியுள்ளது.

எவ்வாறாயினும், இதுதொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா கருத்து தெரிவிக்கையில், ”நிறைய ரசிகர்கள் கொழும்பில் போட்டிகளைப் பார்ப்பதற்கான ஏற்பாடுகளை ஏற்கனவே செய்துள்ளனர். மேலும், கடந்த சில நாட்களாக கொழும்பில் மழை பெய்யவில்லை. இதன் காரணமாக திட்டமிட்டபடி கொழும்பில் போட்டிகளை நடத்த ஆசிய கிரிக்கெட் பேரவை முடிவெடுத்துள்ளது” என்றார்.

கடந்த 10 ஆண்டுகளில், இலங்கையில் நடைபெற்ற 84 ஒருநாள் போட்டிகளில் 79 போட்டிகள் முழுமையாக நடைபெற்றதாக ஏஷ்லி டி சில்வா தெரிவித்துள்ளார். மேலும், கைவிடப்பட்ட 5 போட்டிகளில், செப்டம்பர் மாதத்தில் கைவிடப்பட்ட ஒரே போட்டி சனிக்கிழமை நடைபெற்ற போட்டி தான் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஆசியக் கிண்ணத் தொடரின் லீக் போட்டிகள் அனைத்தும் நேற்று (05) நிறைவுக்கு வந்த நிலையில், இன்று லாகூரில் நடைபெறவுள்ள Super 4 சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தான் – பங்களாதேஷ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>  மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<