இவ்வருடம் மே மாதமளவில் இடம்பெறவுள்ள இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைமை பதவிக்கான தேர்தலுக்காக, முன்னாள் தலைவர் திரு. ரஞ்சித் ரொட்ரிகோ மற்றும் தற்போதைய தலைவர் திரு. அனுர டி சில்வா ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

அத்துடன் கால்பந்து சம்மேளனத்தின் தற்போதைய செயலாளர் திரு. பாலேந்திரா அந்தனி அவர்களும் இத்தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிகின்றது.

ரொட்ரிகோடி சில்வா கூட்டணி கடந்த காலத்தில் இணைந்து செயலாற்றி வந்த நிலையில், இருவரும் தேர்தலில் போட்டியிடவுள்ளதால் அவர்களின் கூட்டணி உடைந்துள்ளது. 2015ஆம் ஆண்டு தேர்தலின்போது திரு. ரஞ்சித் ரொட்ரிகோவின் ஆதரவுடன் திரு. அனுர டி சில்வா போட்டியிட்டு, வெற்றிகரமாக தலைவர் பதவியையும் பெற்றுக் கொண்டார். இவ்வாறான ஒரு நிலையிலேயே, தற்போதைய செயலாளர் திரு. பாலேந்திரா அந்தனியும் தேர்தலில் களமிறங்க ஆர்வம் காட்டி வருவதாகக் கூறப்படுகின்றது.

இதுவரையில் திரு. ரஞ்சித் ரொட்ரிகோ தேர்தலுக்கான தனது பிரசாரத்தை ஆரம்பிக்காத போதிலும், அவரது எதிரணியாளரான திரு. அனுர டி சில்வா அதற்கான ஆயத்த நடவடிக்கைகளை தொடங்கியுள்ளார். நான்காவது வேட்பாளர் ஒருவர் களமிறங்கவுள்ளதாக வதந்திகள் காணப்படுகின்றன. எனினும், அவ்வேட்பாளர் யார் என்பது தொடர்பில் எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை. இதன் காரணமாக தற்போதைய இம்மூன்று வேட்பாளர்கள் மீதே அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

கடந்த வருட இறுதியில் இடம்பெற்ற FA கிண்ணத்திற்கான அறிமுக செய்தியாளர் சந்திப்பின்போது, தான் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடவுள்ளமை தொடர்பாக திரு. ரஞ்சித் ரொட்ரிகோ கருத்து வெளியிட்டிருந்தார்.

நாம் இலங்கையில் கால்பந்தை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் எமது நேரத்தையும் உழைப்பையும் செலவழித்து வருகின்றோம். நான் மீண்டும் தலைமை பதவிக்கு முயற்சிக்கின்றேனா என பலர் என்னிடம் கேட்கின்றனர். ஆம், நான் மீண்டும் தலைவர் பதவிக்காக போட்டியிடவுள்ளேன். விளையாட்டு தொடர்பிலான அரசியலமைப்புச் சட்டத்தில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டதால் என்னால் அடுத்த தேர்தலில் போட்டியிட முடியும் என அவர் அங்கு தெரிவித்திருந்தார்.

குறித்த செய்தியாளர் சந்திப்பில் இருந்து ஒரு பகுதி

திரு. அனுர டி சில்வா இது தொடர்பாக கருத்து வெளியிடுகையில், பல உயர்மட்ட அதிகாரிகளின் வேண்டுகோள்களுக்கு அமைவாக தான் இவ்வருட தேர்தலில் போட்டியிட இருப்பதாகக் கூறினார். திரு. ரஞ்சித் ரொட்ரிகோவை எதிர்த்து தான் போட்டியிடுகின்ற போதிலும், அவருடன் எவ்வித முரண்பாடும் கிடையாது எனவும் அவர் தெரிவித்தார்.

கடந்த காலத்தில் எனது நிர்வாகத்தில் திரு. ரஞ்சித் ரொட்ரிகோ செல்வாக்கு செலுத்தி வருவதாக பலர் குற்றம் சாட்டியிருந்தனர். எதிர்வரும் காலப்பகுதியில் என்னால் பிறரது உதவிகளின்றி சுதந்திரமாக செயற்பட முடியும் என்பதையும், நான் ஒரு சுயாதீனமான தலைவன் என்பதனையும் தெளிவாக காண முடியும். இம்முறை நான் தேர்தலில் போட்டியிடுவதற்கு அது ஒரு முக்கிய காரணியாகும் என்றார்.

அத்துடன் கடந்த காலப்பகுதியில் கால்பந்து சம்பந்தமான செலவினங்கள் தொடர்பில் பல பிரச்சினைகள் எழுந்திருந்தன. எதிர்காலத்தில் இப்பிரச்சினைகள் மீண்டும் ஏற்படாமலிருப்பதை என்னால் உறுதி செய்ய முடியும். பல லீக் தொண்டர்கள் தற்போது எம்முடன் கைகோர்த்து செயல்படுகின்றதுடன், நான் அவர்களது ஆதரவையும் கேட்டுக் கொள்கின்றேன். லீக்களிற்காகவும் நான் அயராது உழைத்திருந்தேன்,” என அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த தேர்தலின்போது விளையாட்டு தொடர்பான சட்டமூலத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, தனது வழிகாட்டலுக்கமைய ஜனநாயக முறையில் நடாத்தப்படும் தேர்தலில் போட்டியிடுவது குறித்து முன்னாள் தலைவரும் தற்போதைய நிதி மற்றும் ஊடக பொறுப்பதிகாரியுமான திரு. ரஞ்சித் ரொட்ரிகோ மகிழ்ச்சி தெரிவித்தார்.

தலைவரின் முடிவுகளில் நான் தலையிட்டேன் என்பது பொய்யான குற்றச்சாட்டாகும். சட்டங்களுக்கு அமைவாகவே அனைத்து முடிவுகளும் எடுக்கப்பட்டன. தலைமைப் பதவிக்கான தேர்தலின்போது அவர்கள் இழைத்த தவறுகளை நான் சுட்டிக்காட்டியதன் காரணமாகவே இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. பொறுப்புக்களை சரிவர நிறைவேற்ற ஆற்றல் இல்லை என்றால் அவர்கள் ராஜினாமா செய்திருக்க வேண்டும். அதனை விடுத்து தனிப்பட்ட முறையில் பழிபோடாமல், தேர்தலின்போது என்னுடன் நேருக்கு நேர் போட்டியிடுமாறு கேட்டுக் கொள்கின்றேன் என அவர் கருத்து வெளியிட்டார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், விளையாட்டு அமைச்சர், சர்வதேச கால்பந்து சம்மேளன உயர் அதிகாரிகள் (FIFA), ஆசிய மற்றும் தெற்காசிய கால்பந்து சம்மேளனங்களின் தலைவர்கள் ஆகியோரின் முன்னிலையில், நான் இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவராக பதவியேற்க எதிர்பார்த்து உள்ளேன் என்பதனையும் திரு. அனுர டி சில்வாவை செயலாளராக நியமிக்கலாம் எனவும் தெரிவித்திருந்தேன்.

இலங்கையில் கால்பந்திற்கு அனுசரணை வழங்கும் அனைவரும் இதனை அறிந்திருந்ததுடன், அவர்கள் ஆதரவும் வழங்கியிருந்தார்கள். அனால் தற்போது நிலைமை மாறியுள்ளது. தேசிய மற்றும் சர்வேதேச கால்பந்து சங்கங்களில் பதவி வகித்தவர் என்ற வகையில், 20 வருடங்களாக நிர்வாக குழுக்களில் செயலாற்றி பல தடவைகள் எனது சொந்த செலவினில் கால்பந்து விளையாட்டிற்கு உதவி புரிந்துள்ளேன்,” என்றார்.

ThePapare.com இது தொடர்பாக திரு. அனுர டி சில்வாவை தொடர்புகொள்ள முற்பட்ட போதும், அது முடியாமல் பொனது.