நடைபெறவுள்ள ஆசிய கால்பந்து சம்மேளன கிண்ணத்திற்கான தகுதிகான் போட்டிகளுக்காக, கொழும்பு கால்பந்து கழகம் தமது குழாத்தில் மேலும் பல முன்னணி வீரர்களை இணைத்துக்கொண்டுள்ளது.

ஆசிய கால்பந்து சம்மேளன கிண்ணத்திற்கான தகுதிகான் போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ள கொழும்பு கால்பந்து கழகம், குறித்த போட்டியின் முதல் கட்டமாக இம்மாதம் 31ஆம் திகதி இந்தியாவின் மோஹன் பகன் அணியுடன் மோதவுள்ளது.

இந்நிலையில் இந்த போட்டிகளுக்காக தமது அணியைப் பலப்படுத்தும் முகமாக, புதிய வீரர்கள் 8 பேரை அவ்வணி தம்முடன் இணைத்துள்ளது. அதன்படி ஷரித் ரத்னாயக, டிலான் கௌஷல்ய, ருவன் அறுனசிறி, நசீரு ஒபயேமி, ஈ.பி. ஷன்ன, மொஹமட் இஸ்ஸதீன், ஷலன சமீர மற்றும் தேசிய அணியின் துணைத் தலைவர் மொஹமட் ரிப்னாஸ் ஆகியோர் கொழும்பு கால்பந்து கழகத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.

ரொட்ரிகோ – டி சில்வா கூட்டணி உடைந்தது : கால்பந்து சம்மேளன தேர்தலில் நான்கு வேட்பாளர்கள்?

இவ்வருடம் மே மாதமளவில் இடம்பெறவுள்ள இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைமை பதவிக்கான தேர்தலுக்காக…

தமது அணியின் பின்களத்தை மேலும் வலுவடையச் செய்யும் வகையில் ஷரித் ரத்னாயக, நசீரு ஒபயேமி மற்றும் ஷலன சமீர ஆகியோரை அவ்வணி இலக்கு வைத்துள்ளது. அதேபோன்று இலங்கை விமானப்படை அணி மற்றும் தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் கோல் காப்பாளர் ருவன் அறுனசிறியும் கொழும்பு அணியில் உள்வாங்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் thepapare.com இடம் பிரத்யேகமாகக் கருத்து தெரிவித்த கொழும்பு கால்பந்து கழகத்தின் பிரதான பயிற்றுவிப்பாளர் மொஹமட் ரூமி, ”நாம் எதிர்கொள்ளவுள்ள மோஹன் பகன் அணி மிகவும் சிறந்த ஒரு அணி. அவர்களை எதிர்கொள்ள வலுவான பின்களம் மற்றும் சிறந்த உத்திகளை கையாளவுள்ளோம். நாம் இலக்கு வைத்துள்ள 3 பின்கள வீரர்களும் எமக்கு சிறந்த பலத்தைப் பெற்றுத் தருவார்கள்” என்றார்.  

கொழும்பு கால்பந்து கழகம் இணைத்துக்கொண்டுள்ள ஷரித் ரத்னாயக, கிறிஸ்டல் பலஸ் அணியின் முன்னாள் வீரராவார். அவ்வணி, டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடரின் முதல் சுற்றுடன் வெளியேறியதைத் தொடர்ந்து, ஷரித் எந்தவித கழகங்களிலும் அங்கம் பெறாமல் உள்ளார். கடந்த காலங்களில் பின்களத்தின் மத்தியில் விளையாடி வந்த அவர், கொழும்பு அணியில் தனது நிலையான இடமான பின்களத்தின் வலது புறத்தில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆட்டத்தின்போது, களுத்துறை புளு ஸ்டார் அணியை ஒழுங்கு செய்யும் முக்கிய வீரரான நசீரு ஒபயேமி, பின்களத்தின் மத்தியை வலுப்படுத்தவுள்ள அதேவேளை, இலங்கை கடற்படை அணி வீரர் ஷலன சமீர பின்களத்தின் இடது புறத்திற்காக தனது பங்களிப்பை வழங்குவார்.

அதேபோன்று, தமது முன்களத்தை சிறப்பிப்பதற்காக இலங்கை அணியின் முன்னாள் வீரர்களான ஈ.பி. ஷன்ன (புளு ஸ்டார்) மற்றும் மொஹமட் இஸ்ஸதீன் (இலங்கை ராணுவப்படை) ஆகியோரைப் பயன்படுத்தவுள்ளது கொழும்பு அணி.  

இவர்கள் இருவரது கடந்த கால சர்வதேச போட்டிகளின் அனுபவங்கள் கொழும்பு அணிக்கு சிறந்த அனுகூலங்களை ஏற்படுத்திக் கொடுக்கும்.

அதற்கு மேலதிகமாக, இளம் வீரர்களான டிலான் கௌஷல்ய மற்றும் மொஹமட் ரிப்னாஸ் ஆகியோரும் குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளமை, அணிக்கு மேலும் வலு சேர்க்கவுள்ளது.

பயிற்றுவிப்பாளர் ரூமி மேலும் கருத்து தெரிவிக்கையில், ”இஸ்ஸதீன் மற்றும் ஷன்ன ஆகியோர் 30 வயதைக் கடந்த நிலையிலும் தமது திறமையை மிகவும் சிறந்த முறையில் வெளிப்படுத்தி வருகின்றனர். முக்கியமாக கோல்களைப் பெறுவதில் இஸ்ஸதீன் முன்னிலையில் உள்ளார்.

எனினும் அவர் இன்னும் ராணுவப்படை அணியில் இருந்து எமது அணிக்காக விடுவிக்கப்படவில்லை. அவர் விரைவில் விடுவிக்கப்படுவார் என்று நம்புகின்றோம். அதுபோன்றே ரிப்னாசும் அணிக்காக சிறப்பாகப் பங்காற்றுவார்” என்றார்.

பின்னர் கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, இஸ்ஸதீன் குறித்த போட்டிகளுக்காக கொழும்பு அணியில் விளையாடுவதற்கு ராணுவப்படை அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

சௌன்டர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் திலான் கௌஷல்யவும், ஷரித் ரத்னாயகவைப் போன்றே இந்த பருவகாலத்தில் எந்த கழகத்திற்கும் இன்றி இருந்தார்.

கொழும்பு ஸாஹிராக் கல்லூரி அணிக்காக ஒன்றாக விளையாடிய ரிப்னாஸ் மற்றும் கொழும்பு கால்பந்து கழகத்தின் முன்னணி வீரர் சர்வான் ஜோஹர் ஆகியோர் மீண்டும் ஒன்றாக ஒரே அணிக்கு விளையாடுகின்றமையும் முக்கிய விடயமாக உள்ளது.

இந்த வீரர்கள் கொழும்பு கால்பந்து கழகத்திற்காக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளமை ஆசிய கால்பந்து சம்மேளன கிண்ணத்திற்கான போட்டிகளுக்காக மாத்திரமே என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான சிறந்த வீரர்களை தம்வசம் கொண்டுள்ள கொழும்பு கால்பந்து கழகம், எதிர்வரும் 31ஆம் திகதி கொழும்பு ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் இடம்பெறவுள்ள மோஹன் பகன் அணியுடனான முதல் கட்ட தகுதிகான் போட்டியில் விளையாடத் தயாராகி வருகின்றது.

இந்தப் போட்டியை இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையதளமான thepapare.com ஊடாக நேரடியாகப் பார்வையிடலாம்.