பெண்களுக்கான 800 மீற்றரில் இலங்கை சாதனை படைத்தார் டில்ஷி குமாரசிங்க

226
Dilshi Kumarasinghe

இலங்கையின் இளம் மெய்வல்லுனர் வீராங்கனையான டில்ஷி குமாரசிங்க, கொழும்பில் நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் தகுதிகாண் போட்டியில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் புதிய தேசிய சாதனை படைத்துள்ளார்.

பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையின் முன்னாள் தேசிய சம்பியன்களான கயன்திகா அபேரட்ன, நிமாலி லியனாரச்சி ஆகிய வீராங்கனைகளை பின்தள்ளி அவர் இந்த சாதனையை படைத்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த வருடத்தின் முதலாவது தேசிய மெய்வல்லுனர் தகுதிகாண் போட்டிகள் நேற்று (09) கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நிறைவுக்கு வந்தது.

>> தேசிய தகுதிகாண் மெய்வல்லுனரில் தங்கம் வென்றார் சண்முகேஸ்வரன்

இதில் நேற்றுக் காலை நடைபெற்ற பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப்  போட்டியில் பங்குகொண்ட டில்ஷி குமாரசிங்க தங்கப் பதக்கம் வென்றார்.  

குறித்த போட்டியை 2 நிமிடங்கள் 02.52 செக்கன்களில் நிறைவு செய்த அவர், புதிய இலங்கை சாதனை படைத்தார்.

இதன்படி, கடந்த 2017இல் கயன்திகா அபேரட்னவினால் நிலைநாட்டிய (2 நிமிடங்கள் 02.55 செக்.) சாதனையை முறியடித்த அவர், குறித்த போட்டியில் தனது அதிசிறந்த நேரப் பெறுமதியையும் பதிவு செய்தார்.

2019இல் நேபாளத்தில் நடைபெற்ற 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் ஹெட்ரிக் தங்கம் வென்ற டில்ஷி, வியாழக்கிழமை (08) நடைபெற்ற பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் தங்கப் பதக்கம் வென்றார்

>> பெண்களுக்கான 800 மீற்றரில் ஆசியாவின் ஆதிக்கத்தை கைப்பற்றிய இலங்கை

போட்டியை 53.43 செக்கன்களில் நிறைவுசெய்து தனது அதிசிறந்த காலத்தைப் பதிவுசெய்த அவர், பெண்களுக்கான 400 மீற்றரில் நடப்பு தேசிய சம்பியனான நடீஷா ராமநாயக்கவை தோற்கடித்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்

இதனிடையே, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கான அடைவுமட்டத்தினை டில்ஷி குமாரசிங்க பூர்த்தி செய்யாவிட்டாலும், அடுத்த மாதம் நடைபெறவுள்ள தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் தனது திறமையை மீண்டும் நிரூபித்து ஒலிம்பிக் போட்டிகளுக்கான வாய்ப்பை பெற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது

இது இவ்வாறிருக்க, பெண்களுக்கான 800 மீற்றரில் இதுவரை காலமும் தேசிய சம்பியனாக வலம்வந்த கயன்திகா அபேரட்னவுக்கு, இம்முறை தேசிய மெய்வல்லுனர் தகுதிகாண் போட்டியில் மூன்றாவது இடத்தையே பெற்றுக்கொள்ள முடிந்ததுடன், நிமாலி லியனாரச்சி இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

>> சித்திரரைப் புத்தாண்டு மரதன், சைக்கிளோட்டப் போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் கோரல்

இதேவேளை, குறித்த போட்டியில் பங்குகொண்ட கனிஷ் பிரிவு வீராங்கனையான (20 வயதுக்குட்பட்ட) ஷானிக்கா லக்ஷானி, போட்டியை 2 நிமிடங்கள் 07.02 செக்கன்களில் நிறைவுசெய்து 5ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்

இதன்மூலம், எதிர்வரும் ஜுலை மாதம் கென்யாவில் நடைபெறவுள்ள உலக கனிஷ் மெய்வல்லுனர் போட்டிகளில் பங்குபற்றும் வாய்ப்பையும் அவர் உறுதிசெய்தார்

இது இவ்வாறிருக்க, நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் முதல் நான்கு இடங்களையும் பெற்றுக்கொண்ட வீராங்கனைகளும் தமது தனிப்பட்ட அதிசிறந்த காலத்தைப் பதிவுசெய்து புதிய மைல்கல்லையும் எட்டியிருந்தனர்

>> மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க <<