உலகக் கிண்ணத்தை வெல்ல கொக்கா கோலாவுடன் கைகோர்க்கும் இலங்கை

293

இலங்கை அணி வீழ்ச்சி அடையும்போது விமர்சிக்க வேண்டாம். அதிலும் குறிப்பாக ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் எனத் தெரிவித்த இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரருமான அரவிந்த டி சில்வா, சமூக வலைத்தளங்கள் வாயிலாக வெளிவருகின்ற விமர்சனங்களை வீரர்கள் எவரும் கண்டுகொள்ளாமல் தமது ஆட்டத்தில் மாத்திரம் கவனம் செலுத்த வேண்டும் என குறிப்பிட்டார்.  

Photos : Cricket with Coke – Press conference

ThePapare.com | Kandula Yatawara | 09/04/2019 Editing and re-using images without permission…

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும் மே மாதம் 30ஆம் திகதி இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் ஆரம்பமாகவுள்ளது. இந்த நிலையில், உலகின் முன்னணி விளையாட்டுக்களில் ஒன்றாக கிரிக்கெட்டை பிரபல்யப்படுத்தும் நோக்கில் சர்வதேச கிரிக்கெட் பேரவையுடன் எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு கொக்கா கோலா நிறுவனம் கூட்டுப்பங்காண்மை உடன்படிக்கையில் அண்மையில் கைச்சாத்திட்டது.  

இதன் ஓர் அங்கமாக இலங்கை கிரிக்கெட் அணியை உற்சாகப்படுத்தும் நோக்கில் ஒற்றுமையின் பானம் (Drink of togetherness), மூடியிலிருந்து கிண்ணம் வரை (From cap to the Cup) என்ற தொனிப்பொருளில் அறிமுக நிகழ்வும், ஊடக சந்திப்பும் நேற்று (09) கொழும்பு ஷங்ரி லா ஹோட்டலில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் 1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்த இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரும், ஆட்ட நாயகனுமான அரவிந்த டி சில்வா கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில்,  

“உண்மையில் நான் வெளிநாட்டில் இருக்க வேண்டியவன். ஆனால் இளம் வீரராக இருந்தபோது எனக்கு கொக்கா கோலா நிறுவனம் தான் முதலில் அனுசரணை வழங்கியது. எனினும், அந்த அனுசரணையை எனது வேண்டுகோளுக்கு இணங்க வசதி குறைந்த இரண்டு வீரர்களுக்கு வழங்குமாறு எனது தந்தையிடம் தெரிவித்தேன்.

அதேபோல, இளம் வீரர்களின் எதிர்காலத்தை கருத்திக்கொண்டு 10 வருடங்களுக்கு முன் கொக்கா கோலா பாத்வே திட்டத்தை நானே முன்வந்து ஆரம்பித்தேன். இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை இடம்பெறுகின்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணப் போட்டித் தொடரை முன்னிட்டு 15 வயது மற்றும் 17 வயதுக்குட்பட்ட வீரர்களை இலக்காகக் கொண்டு கொக்கா கோலா பாத்வே திட்டத்தை ஆரம்பித்தோம். எனவே, அவர்கள் எனக்கு கடந்த 10 வருடங்களாக அளித்து வருகின்ற உதவிகள் தான் என்னை இந்த நிகழ்வில் பங்குபற்றச் செய்தது” என தெரிவித்தார்.

நாங்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் போது நீங்கள் விளையாடிய காலத்தைப் போல தற்போது நாங்கள் கிரிக்கெட்டை பார்ப்பதில்லை என பலர் என்னைக் கண்டால் சொல்வார்கள். அவர்கள் அப்படி சொல்வது தவறு. ஆனால் நாங்கள் விளையாடிய காலத்திலும் தோல்வி அடைந்துள்ளோம். மேடு பள்ளங்களை சந்தித்துள்ளோம். ஆனால் நாங்களும் போராடித் தான் உலகக் கிண்ணத்தை வென்றோம்.

பல இளம் வீரர்கள் என்னிடம் ஆலோசனை கேட்டு வருவார்கள். ஆனால் அவர்களிடம் முதலில் சமூகவலைத்தளங்களில் வெளிவரும் விமர்சனங்களை கண்டுகொள்ள வேண்டாம் என ஆலோசனை வழங்குவேன். அவற்றை நீங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. மனரீதியாக உறுதியாக இருக்கும்படி சொல்லிக் கொடுப்பேன் என்றார்.

ஆஸி. 1986ஆம் ஆண்டு பயன்படுத்திய ஜேர்சி மீண்டும் உலகக் கிண்ணத்தில்

இங்கிலாந்தில் அடுத்த மாதம் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில்…

அத்துடன், வெற்றி தோல்வி என்பது இதயத் துடிப்பைப் போன்றது. அதேபோன்று தான் கிரிக்கெட் விளையாட்டும். எனவே, வீரர்களின் மனநிலையை பாதிக்காமல், அவர்களுக்கு அழுத்தங்களைக் கொடுக்காமல் ஊடகங்கள் செயற்பட வேண்டும். ஏனெனில் அவர்கள் 21 மில்லியன் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டிகளில் களமிறங்குகின்றனர். இதனால் அவர்களுக்கு நிறைய அழுத்தங்கள் இருக்கும். அவர்கள் அவ்வாறு விளையாடி தோல்வியைத் தழுவினாலும் 100 சதவீத பங்களிப்பினை வழங்குகின்றர்கள் என்பதை அனைவரும் புரிந்து செயற்பட வேண்டும். எனவே, இலங்கை அணி வீழ்ச்சி அடையும்போது விமர்சிக்க வேண்டாம். அதிலும் குறிப்பாக ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என தெரிவித்தார்.  

இதேவேளை, கொக்கா கோலா ஸ்ரீலங்கா நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மூடியிலிருந்து கிண்ணம் வரை (From cap to the Cup)  அறிமுக நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ கருத்து வெளியிடுகையில்,

இலங்கையின் இதயத் துடிப்பே கிரிக்கெட்தான். உலக வரைபடத்தில் இலங்கை என்ற பெயர் முன்வருவதற்கு கிரிக்கெட்தான் முக்கிய காரணம். உலக சம்பியன் பட்டத்தை வென்ற பின்னர் இலங்கை அணி 2 தடவைகள் உலகக் கிண்ண இறுதிப் போட்டிகளில் விளையாடியிருந்ததுடன், உலகக் கிண்ண டி-20 சம்பியன் பட்டத்தையும் வென்றது.

உலகக் கிண்ணத்தில் காலநிலை முக்கிய செல்வாக்கு செலுத்தும் -பீடர்சன்

அடுத்த மாதம் இங்கிலாந்தில் ஆரம்பமாகும் ஒருநாள் உலகக் கிண்ணம், காலநிலையில் தங்கியிருக்கும் ஒரு கிரிக்கெட்…

எனினும், இலங்கை அணியின் அண்மைக்கால பெறுபேறுகள் அவ்வளவு நன்றாக இருக்கவில்லை. ஆனால் 1996ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு கொக்கா கோலா அனுசரணையாளராக இருந்தபோது எவ்வாறு இலங்கை அணி சம்பியன் பட்டத்தை வென்றதோ, அதேபோன்று இம்முறை உலகக் கிண்ணத்தில் கொக்கா கோலாவின் அனுசரணையின் கீழ் இலங்கை அணி சாதிக்கும் என தான் 100 சதவீதம் நம்புவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

உலகக் கிண்ணம் உட்பட சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு அனுசரணை வழங்குவதற்கு .சி.சியுடன் கொக்கா கோலா நிறுவனம் கைகோர்த்துள்ளமை பாராட்டுக்குரியதாகும். இதேநேரம், வீரர்கள் தொடர்பில் சமூகவலைத்தளங்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும். வெற்றி எப்போதும் இனிமையானது. எவரும் தோல்வி அடைய விரும்புவதில்லை. ஆனால் ஒருவர் தோல்வி அடையும்போது அந்த தோல்வி அவரை பலப்படுத்துவதுடன், வெற்றியின் அவசியத்தையும் அவருக்கு உணர்த்தி நிற்கின்றது. எனவே இலங்கை அணியை ஊக்குவிக்க, உற்சாகப்படுத்த அனைவரும் முன்வர வேண்டும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

30 பேருக்கு உலகக் கிண்ண டிக்கெட், 600 பேருக்கு ஸ்மார்ட் போன்கள்

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் மே மாதம் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள உலகக் கிண்ணப் போட்டிகளை நேரடியாகக் கண்டுகளிப்பதற்கு இலங்கையைச் சேர்ந்த 30 அதிஷ்டசாலிகளுக்கு தலா ஒரு நுழைவுச் சீட்டை வழங்குவதற்கு கொக்கா கோலா ஸ்ரீலங்கா நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதேபோல 600 அதிஷ்டசாலிகளுக்கு ஸ்மார்ட்போன்கள் வழங்குவதற்கும் அந்த நிறுவனம் முன்வந்துள்ளது.   

உள்ளூரில் பிரகாசித்த இவர்களுக்கு உலகக் கிண்ண வாய்ப்பு கிடைக்குமா?

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் 2018/2019 பருவகாலத்துக்கான இலங்கையின் பிரதான உள்ளூர்…

இதன்படி, கொக்கா கோலா, ஸ்ப்ரைட் அல்லது பென்டா குடிபானங்களை வாங்குவதன் மூலம் அவற்றிலுள்ள மூடிகளைக் கொண்டு நுகர்வோர் இந்தப் போட்டியில் கலந்துகொள்ள முடியும். மஞ்சள் நிறத்திலான மூடியின் கீழுள்ள பிரத்தியேகமான இலக்கத்தை 2343 என்ற இலக்கத்துக்கு எஸ்.எம்.எஸ் செய்து இப்போட்டியில் கலந்துகொள்ள முடியும். ஏப்ரல் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்தப் போட்டியானது எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி வரை நடைபெறவுள்ளது. அதன்பிறகு அதிஷ்டசாலிகள் டிஜிட்டெல் முறையில் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.

இந்த நிகழ்வில் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான அரவிந்த டி சில்வா, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உப செயலாளர் கிரிஷாந்த கப்புவத்த மற்றும் கொக்கா கோலா ஸ்ரீலங்கா தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் பங்கஜ் சின்ஹா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க