நேற்றைய போட்டியில், 42 பந்துகளில் 51 ஓட்டங்கள் தேவை என்கிற நிலையில் மத்திய வரிசை வீரராக களம் நுழைந்திருந்த அசேல குணரத்ன, களத்தில் ஆடிக்கொண்டிருந்த அணித்தலைவர் அஞ்சலோ மெதிவ்ஸ் உடன் முதற்தடவையாக சர்வதேசப் போட்டியொன்றில் கைகோர்த்திருந்ததார். அத்தோடு இரண்டு வீரர்களும் போட்டியை மிகவும் பிரமாதமாக நிறைவு செய்திருந்தனர்.
“துரதிஷ்டவசமாக, எம்மிடம் மேலதிகமாக நிறைய விக்கெட்டுகள் இருந்த போதிலும் குசல் (பெரேரா) தனது ஆட்டத்தினை இடைநிறுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகியிருந்தது. அஞ்சலோ மெதிவ்ஸ் என்னிடம் பதற்றம் கொள்ளாது செயற்படுமாறு தெரிவித்திருந்தார். அத்தோடு, என்னுடைய வழமையான ஆட்டத்தினை மாத்திரம் வெளிப்படுத்தி இறுதி ஓவர் வரையில் முயற்சி செய்யுமாறும் கூறியிருந்தார். அஞ்சலோ மெதிவ்ஸ் உடன், இணைந்து துடுப்பாடியமையே எனக்கு மிகவும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது.“ என போட்டியின் பின்னர் குணரத்ன கருத்து தெரிவித்திருந்தார்.
முரளிதரனுக்கு ஐ.சி.சி. இன் அதி உயரிய கௌரவ விருது
அழுத்தமான தருணங்களை மிகவும் சாதுர்யமாக எதிர்கொள்வதற்கு பெயர் போன வீரர்களில் ஒருவரான மெதிவ்சிற்கு, இலங்கை இராணுவப்படை வீரரான அசேல குணரத்னவிடம் இருந்து போட்டியை வெற்றிகொள்ள மகத்தான உதவி கிட்டியிருந்தது. அதேபோன்று, போட்டியின் சிறந்த சொட் (Best shot) எனக்கருதப்படும் அடியினையும் குணரத்ன தான் எதிர்கொண்ட முதல் பந்துகளில் ஒன்றில் பெற்றிருந்தார். குணரத்ன அந்த சிறந்த அடியினை ஓட்டமற்ற ஓவர்களை கடைசி ஓவர்களில் (Death Overs) வீசுவதில் கைதேர்ந்த பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஜஸ்பிரிட் பும்ராவின் பந்து வீச்சில் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மணிக்கு 138 கிலோமீட்டர் வேகத்தில் விக்கெட்டுக்கு வெளித் திசையில் வந்திருந்த பந்தினை குணரத்ன தனது முழங்கால் ஒன்றினை பணித்து லாவகமாக தூக்கி அடித்திருந்தார். அடிக்கப்பட்ட பந்தானது லெக் திசையில் 94 மீட்டர் தூர பவுண்டரி எல்லையை கடந்து ஆறு ஓட்டங்களாக பதிவாகியிருந்தது. மேலும், குணரத்ன போட்டியின் இறுதி வரை ஆட்டமிழக்காமல் நின்றிருந்ததோடு வெறும் 21 பந்துகளில் 161.90 விகித ஓட்ட சராசரியுடன் 34 ஓட்டங்களையும் பெற்று, இலங்கை அணியின் வரலாற்று சிறப்பு மிக்க நேற்றைய வெற்றியில் உதவியிருந்தார்.
“நான் ஐ.பி.எல் போட்டிகளில் பங்குபெற்றாது இருப்பினும், பயிற்சி ஆட்டங்களின் போது ஜஸ்ப்ரிட் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரின் பந்து வீச்சுக்களை எதிர்கொண்டிருக்கின்றேன். எனவே, எவ்வகையான பந்து வீச்சுக்கள் பும்ராவிடம் இருந்து வரும் என்பது எனக்குத் தெரிந்திருந்தது. எனவே, இது அந்த குறிப்பிட்ட அடியினை அடிப்பதற்கும் எனது ஆட்டத்திற்கும் உதவியாகக் காணப்பட்டிருந்தது. அத்தோடு பும்ராவின் பந்து வீச்சு தொடர்பான அறிவுரை ஒன்றினை மலிங்கவும் எனக்கு வழங்கியிருந்தார். எனவே, அவரை எவ்வாறு தடுத்தாடுவது என்பதினை சரியாகப் புரிந்து வைத்திருந்தேன்.“ என குணரத்ன தனது ஆட்டம் பற்றி குறிப்பிட்டிருந்தார்.
[rev_slider ct17-dsccricket]
குணரத்ன இது போன்று, அவுஸ்திரேலிய அணியுடன் இரண்டு மாதங்களுக்கு முன்னர் கீலோங் நகரில் இடம்பெற்றிருந்த T20 போட்டியொன்றிலும் சிறப்பாக செயற்பட்டு 84 ஓட்டங்களை விளாசியிருந்ததோடு, அதன் மூலம் அப்போட்டியில் இலங்கை அணியை வெற்றி பெறச்செய்து அத்தொடரினையும் கைப்பற்ற உதவியாக இருந்திருந்தார். அதன் பிறகு, அவர் தற்போது இடம்பெற்று முடிந்த ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தமாகியிருந்த போதிலும், சம்பியன்ஸ் கிண்ணத்திற்கு தயராகுவதற்கு இலங்கை கிரிக்கெட் வாரியத்தினால் அழைக்கப்பட்டிருந்த காரணத்தினால் அத்தொடரில் விளையாட முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.
தற்போது, மெதிவ்ஸ் மற்றும் குணரத்ன ஆகியோரைக் கொண்டிருக்கும் இலங்கை அணியானது போட்டியின் வெற்றி வாகையினை சாதுர்யமாக தொடும் ஒரு சிறப்பான மத்திய வரிசையினை கொண்டிருப்பதாக அவதானிக்கப்பட்டுள்ளது.
“பொதுவாக, நான் மெதுவான ஆட்டம் ஒன்றினை ஆரம்பித்து வாய்ப்பு கிடைக்கும் போதே அடித்தாடுவேன். ஆனால், ஒரு ஓவரிற்கு 7 இற்கு மேலாக ஓட்டங்கள் தேவைப்பட்டிருந்த நிலையில் இந்திய அணியுடனான போட்டியில் நான் ஆரம்பத்திலேயே அடித்தாடத் தொடங்கியிருந்தேன். ஆம், எனக்கு போட்டியின் இறுதிவரை நின்று போட்டியினை சிறப்பாக முடித்து தரும் ஒரு விதமான ஆற்றல் இருக்கின்றது.“ என குணரத்ன மேலும் தனது கருத்தினை வெளியிட்டிருந்தார்.
31 வயதாகும் குணரத்ன கட்டுகஸ்தோட்டை ஸ்ரீ ராகுல கல்லூரியில் தனது கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்திருந்தார். அத்தோடு குணரத்ன, இலங்கை அணியின் மூத்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ஓப்ரேய் குருப்பு மூலம் பயிற்றுவிக்கப்பட்ட வீரர்களில் ஒருவராகக் காணப்படுகின்றார். 2008 ஆம் ஆண்டு முதல்தர போட்டிகளில் கால்பதித்த குணரத்ன 2016 ஆம் ஆண்டில் தேசிய அணியில் விளையாடும் வாய்ப்பினை பெறும் வரை, இலங்கை இராணுவப்படை விளையாட்டு கழகத்தில் அஜந்த மெண்டிஸ் மற்றும் சீக்குகே பிரசன்ன ஆகிய வீரர்களுடன் இணைந்து கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றியிருந்தார்.
“அசேல ஒரு சிறந்த வீரர், அத்தோடு அவரைப் பற்றிய இன்னொரு நல்ல விடயம் என்னவெனில் தனது திறமை மீது அதிக நம்பிக்கை கொண்ட வீரர்களில் ஒருவராகக் காணப்படுகின்றார். பாடசாலை காலங்களில் அவர் நான்காம் இலக்க வீரராக துடுப்பெடுத்தாடுவதோடு, மித வேகப் பந்து வீச்சாளராகவும் காணப்பட்டிருந்தார். பின்னைய காலங்களில் நான் அவர் போட்டிக்காக கடுமையாக உழைத்து ஒரு சிறந்த தரத்தினை அடைய முயற்சி செய்வதை அவதானித்திருந்தேன். அத்தோடு, தற்போது அவரினால் சுழல் பந்து வீச்சினையும் வெளிப்படுத்த முடிகின்றது.“ என ஒப்ரேய் குருப்பு, அசேல குணரத்ன பற்றி கருத்துத் தெரிவித்திருந்தார்.