டி20 அரங்கில் சதங்களில் சாதனை படைத்த கிறிஸ் கெய்ல்

98
CPL Twitter

கரீபியன் பிரீமியர் லீக் 20 ஓவர் போட்டியில் சென்ட். கிட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கிறிஸ் கெய்ல் சதம் அடித்து அசத்தியதுடன், டி-20 அரங்கில் முக்கியமான ஒரு சில சாதனைகளை புதுப்பித்தார்.

எனினும், விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் எதிரணி 242 ஓட்டங்களை துரத்தியடித்து சாதனை படைத்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். 

கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது. இதன் 7 ஆவது லீக் ஆட்டத்தில் ஜமைக்கா தலவாஸ் -செயின்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் பேட்ரியட்ஸ் அணிகள் மோதின.

டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஸ்டீவ் ஸ்மித்

அவுஸ்திரேலிய அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் ஸ்டீவ் ஸ்மித், டெஸ்ட் …

நாணய சுழற்சியில் வென்ற சென்ட். கிட்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஜமைக்கா தலவாஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 241 ஓட்டங்களைக் குவித்தது. 

இதில் 36 ஆவது பந்தில் அரைச் சதம் கடந்த கிறிஸ் கெய்ல், 54 பந்துகளில் சதத்தை எட்டினார். தோடர்ந்து துடுப்பாட்டத்தில் அசத்திய அவர் 62 பந்துகளில் 7 பவுண்டரிகள், 10 சிக்ஸர்களுடன் 116 ஓட்டங்களை எடுத்து ஆட்டம் இழந்தார். 

பின்னர் 242 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்ட் கிட்ஸ் அணி தொடக்க ஆட்டக்காரர்களான டெவோன் தோமஸ், எவின் லுவிஸ் ஆகியோரயது இணைப்பாட்டத்தால் 18.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 242 ஓட்டங்களை எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இது டி20 கிரிக்கெட் போட்டி வரலாற்றில் வெற்றிகரமாக துரத்தியடிக்கப்பட்ட 2 ஆவது அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கை இதுவாகும். இதற்கு முன்பு கடந்த ஆண்டில் (2018) ஆக்லாந்தில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 245 ஓட்டங்களை துரத்தியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

மேலும், இந்தப் போட்டியில் ஒட்டுமொத்தமாக 37 சிக்ஸர்கள் விளாசப்பட்டது, இதுவும் டி20 கிரிக்கெட்டின் சாதனை சமன் ஆகும்.

இதேநேரம், இலக்கை விரட்டும் போது எவின் லூவிஸ் 17 பந்துகளில் அரைச் சதம் கடந்து கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் அதிவேக அரைச் சதத்தைப் பதிவுசெய்து சாதனை படைத்தார்.

அதுமாத்திரமின்றி, இப்போட்டியில் சதமடித்து அசத்திய கிறிஸ் கெய்ல் தனது ஒரு சில சொந்த சாதனைகளையும் புதுப்பித்தார். கடந்த 14 வருடங்களாக உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகின்ற டி20 போட்டிகளில் அதிரடி ஆட்டக்காரர்களில் ஒருவராக விளையாடிய வருகின்ற கிறிஸ் கெய்லின் இந்த சாதனை மற்றுமொரு டி20 மைல்கல்லாக கருதப்படுகின்றது.

அதிக சதங்கள்

டி20 போட்டியில் ஒட்டுமொத்தமாக கிறில் கெய்ல் அடித்த 22 ஆவது சதம் இதுவாகும். அவருக்கு அடுத்தபடியாக அவுஸ்திரேலியாவின் மைக்கல் கிலின்ஜர் 8 சதங்கள் அடித்து 2 ஆவது இடத்திலும், ஆரொன் பின்ஞ், டேவிட் வோர்னர், லூக்கி ரைட் மற்றும் பிரெண்டன் மெக்கலம் ஆகிய வீரர்கள் 7 சதங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.

அத்துடன். கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் தலா 4 சதங்களுடன் கிறிஸ் கெய்லு மற்றும் டுவைன் பிராவோ உள்ளனர்.

மேலும், டி20 போட்டிகளில் அடிக்கப்பட்ட 30 ஆவது அதிவேக சதமாகவும் இது பதிவாகியது. 

சிக்ஸ்ர்களில் முதலிடம்

இப்போட்டியில் 10 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் ஒட்டுமொத்த டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் கிறிஸ் கெய்ல் முதலிடத்தில் உள்ளார். இதுவரை 388 போட்களில் விளையாடிய அவர் 956 சிக்ஸர்களை அடித்துள்ளார். 

இதில் கிரென் பொல்லார்ட் 622 சிக்ஸர்களுடன் இரண்டாவது இடத்திலும், பிரெண்டன் மெக்கலம் 485 சிக்ஸர்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். 

அத்துடன், கரிபியன் பிரீமியர் லீக் போட்டியில் கிறிஸ் கெய்ல் இதுவரை 158 சிக்ஸர்கள் விளாசி முதலிடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் உள்ள எவின் லூவிஸ் 99 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.

குறைந்த வயதில் ஏழாயிரம் ஓட்டங்களைக் கடந்து ஜோ ரூட் சாதனை

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் குறைந்த வயதில் 7 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த 3 ஆவது வீரர் …

இதேநேரம், ஒட்டுமொத்த டி20 அரங்கில் அதிக சிக்ஸர்கள் (37 சிக்ஸர்கள்) அடிக்கப்பட்ட போட்டிகள் வரிசையில் இது முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டது. இதற்கு முன் கடந்த ஒக்டோபர் மாதம் சார்ஜாவில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடரில் பால்கா மற்றும் காபூல் அணிகளுக்கு இடையிலான போட்டியில் 37 சிக்ஸர்கள் விளாசப்பட்டன.

அதிக ஓட்டங்கள்

டி20 போட்டிகள் அரங்கில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்கள் பட்டியலில் 12631 ஓட்டங்களுடன் கிறிஸ் கெய்ல் முதலிடத்தில் உள்ளார். 

இப்பட்டியில் நியூசிலாந்து அணியின் பிரெண்டன் மெக்கலம் (9922) இரண்டாவது இடத்திலும், கிரென் பொல்லார்ட் (9537) மூன்றாவது இடத்திலும் உள்ளனர். 

கிறிஸ் கெய்ல் பங்குபற்றிய போட்டித் தொடர்களின் புள்ளி விபரங்கள்

போட்டிகள் ஆட்டங்கள் ஓட்டங்கள் சராசரி சதங்கள்
IPL 125 4484 41.13 6
CPL 70 2294 43.36 4
BPL 38 1338 41.81 5
BBL 22 649 30.90 1

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…