இலங்கை கிரிக்கெட் சபையின் உயர் செயற்திறன் மையம் பல்லேகலயில் ஆரம்பம்

834

கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் அரங்கில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆறு பகுதிகளைக் கொண்ட உள்ளக கிரிக்கெட் பயிற்சி மையம் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆரம்ப நிகழ்வு இடம்பெற்ற நேற்றைய தினம், அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் பங்கெடுக்கவுள்ள இலங்கை வீரர்களுக்கான 06 நாள் பயிற்சி முகாமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பயிற்சி நிலைய அங்குரார்ப்பண நிகழ்வில் மெதிவ்ஸ்
பயிற்சி நிலைய அங்குரார்ப்பண நிகழ்வில் மெதிவ்ஸ்

புதிதாக நிறுவப்பட்டுள்ள இந்த உள்ளக பயிற்சி நிலையமானது, இலங்கை கிரிக்கெட் சபையின் கனவுத்திட்டங்களுள் ஒன்றான நாடு தழுவிய ரீதியில் வீரர்களின் தரத்தினை முன்னேற்றுவதற்காக, நான்கு சிறப்பு மாகாண மத்திய நிலையங்களை நிறுவுதல் எனும் திட்டத்தின் முதற்கட்டம் பூர்த்தியடைந்துள்ளதைக் காட்டுகின்றது.

நான்கு மத்திய நிலையங்களாக கொழும்பு (R.பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் அரங்கு), காலி (காலி சர்வதேச கிரிக்கெட் அரங்கு), தம்புள்ள (ரங்கிரி தம்புள்ள சர்வதேச கிரிக்கெட் அரங்கு) மற்றும் கண்டி (பல்லேகல சர்வதேச கிரிக்கெட் அரங்கு) ஆகியன அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையங்கள், குறித்த மாவட்டங்களில் இடம்பெறும் கிரிக்கெட் அபிவிருத்தி செயற்பாடுகள் மற்றும் பயிற்சிகளுக்கு ஊக்கமளிக்கும் பிரதான காரணியாக தொழிற்படும். இந்நிலையங்கள் குறித்த மாகாணங்களினால் நிர்வகிக்கப்படும்.

ஒவ்வொரு கிரிக்கெட் அரங்குகளிலும் கணனி இணைப்புடன் கூடிய உயர் தரத்திலான உள்ளக பயிற்சி நிலையம், நீச்சல் தடாகம், மீளுருவாக்க மற்றும் ஆற்றுப்படுத்தல் நிலையம் ஆகிய வசதிகளுடன் கூடிய உயர் செயற்திறன் நிலையங்களை நிறுவுவதற்கான திட்டமும் ஆலோசனையில் உள்ளது.

மத்திய நிலையத்தின் அங்குரார்ப்பண வைபவம் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.

அங்குரார்ப்பண நிகழ்வின் புகைப்படங்கள்

இலங்கை கிரிக்கெட் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு இது போன்ற உயர் செயற்திறன் மத்திய நிலையங்களை கிரிக்கெட் வளர்ந்துவரும் பிரதேசங்களிலும் பரவலாக நிறுவுவது, நாடு முழுவதிலும் கிரிக்கெட் அபிவிருத்திக்கு பங்காற்றும் ஒரு செயலாக அமையும். அதேவேளை, நாட்டின் சகல பாகங்களிலிருந்தும் தேசிய அணிக்கு வீரர்களை உள்வாங்கும் முயற்சிக்கும் அது  மேலும் பலம் சேர்க்கும்.

இலங்கை தேசிய குழாமினர் நேற்றைய தினத்தில் புனித ஸ்தலமான தலதா மாளிகைக்கு சென்று, தாம் எதிர்கொள்ளவுள்ள சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் வெற்றிக்கான பிரார்த்தனை நிகழ்வுகளிலும் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.