இங்கிலாந்து பயிற்சியாளர் குழாத்தில் இணைந்த அசார் மஹ்மூத்

120

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பந்துவீச்சை பலப்படுத்தும் நோக்கில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் சகலதுறை வீரரான அசார் மஹ்மூத் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கான பயிற்சியாளர் குழாத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.  

பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 போட்டிகளைக் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டி எதிர்வரும் 28ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த தொடருக்கான இங்கிலாந்து அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

>>பாகிஸ்தானுடன் மோதும் இங்கிலாந்து டி20 குழாம் அறிவிப்பு

கொவிட் – 19 வைரஸ் தொற்று காரணமாக டெஸ்ட் தொடரில் இடம்பெற்றுள்ள வீரர்கள் பாகிஸ்தான் அணியுடனான டி20 தொடரில் இடம்பெற மாட்டார்கள் என்று கூறப்பட்டுள்ள நிலையில், புதிய வீரர்களுக்கு இந்த தொடரில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மன்செஸ்டரின் ஓல்ட் ட்ரபோர்டில் நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர் குழாத்தில் மேலதிக பயிற்சியாளர்களில் ஒருவராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான அசார் மஹ்மூத் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன்படி, இங்கிலாந்து அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளரான ஜோன் லீவிசிற்கு அவர் பயிற்சிகளின் போது உதவி செய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் தற்போது வாழ்ந்து வருகின்ற 45 வயதான அசார் மஹ்மூத், முன்னதாக மிக்கி ஆர்தரின் தலைமையிலான பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக செயற்பட்டிருந்ததுடன், சர்ரே கழகத்தில் வீரராக விளையாடி பயிற்சியாளராகவும் கடமையாற்றினார்.

>>துடுப்பாட்ட தரவரிசையில் புதிய சாதனை படைத்த பாபர் அஸாம்

இதனிடையே, T20i தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து அணியில் இயன் மோர்கன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் டொம் பேன்டன், சாம் பில்லிங்ஸ் உள்ளிட்ட வீரர்களுக்கு இந்தத் தொடரில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதில் அயர்லாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்த ஜேம்ஸ் வின்ஸுக்குப் பதிலாக டேவிட் மாலன் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

அத்துடன், பாகிஸ்தான் அணியுடனான டி20 தொடரில் க்றிஸ் சில்வர்வூட்டுக்குப் பதிலாக க்ரஹம் தோப் பிரதான பயிற்சியாளராக செயற்படவுள்ளார். அவருக்கு போல் கொலிங்வூட் உதவி செய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக மார்கஸ் ட்ரெஸ்கொதிக் செயற்படவுள்ளதுடன், எசெக்ஸ் கழகத்தின் முன்னாள் விக்கெட் காப்பாளரான ஜேம்ஸ் போஸ்டர் விக்கெட் காப்பு பயிற்சியாளராகவும் செயற்படவுள்ளார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<