முதல் போட்டியில் இலங்கை தோல்வி; அபார வெற்றிபெற்ற இந்தியா!

CAVA Women's Volleyball Challenge Cup 2023

34

நேபாளத்தில் இன்று திங்கட்கிழமை (22) ஆரம்பித்த மத்திய ஆசிய கரப்பந்தாட்ட சம்மேளன (CAVA) மகளிர் கரப்பந்தாட்ட சவால் கிண்ணத்தின் முதல் போட்டியில் இலங்கை மகளிர் அணி 3-0 என உஸ்பெகிஸ்தானிடம் தோல்வியை சந்தித்துள்ளது.

உஸ்பெகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற இந்தப் போட்டியின் (குழு B) முதல் செட்டில் இரண்டு அணிகளும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தின. செட்டின் முதல் பாதியில் 14-10 என்ற புள்ளிகள் கணக்கில் இலங்கை அணி முன்னிலை வகித்தது. அதன் பின்னர் உஸ்பெகிஸ்தான் கடுமையான போட்டியை கொடுத்தது.

எனவே, இலங்கை 19 புள்ளிகளை பெற்றிருந்த போது ஆட்டத்தை சமனிலைப்படுத்திய உஸ்பெகிஸ்தான் அணி தொடர்ந்தும் அற்புதமாக ஆடியது. இலங்கை அணி மீண்டும் கடுமையான போட்டியை கொடுத்த போதும் 27-25 என்ற புள்ளிகள் கணக்கில் உஸ்பெகிஸ்தான் அணி முதல் செட்டை வெற்றிகொண்டது.

பின்னர் ஆரம்பித்த இரண்டாவது செட்டிலும் இலங்கை அணி 8-3 என்ற புள்ளிகள் கணக்கில் சிறந்த முன்னிலையை பெற்றுக்கொண்டது. ஆனாலும் 11 புள்ளிகளை இலங்கை மகளிர் அணி பெற்ற போது ஆட்டத்தை சமப்படுத்திய உஸ்பெகிஸ்தான் அணி தொடர்ந்தும் முன்னிலையை தக்கவைக்க ஆரம்பித்தது. இறுதியில் 25-20 என்ற புள்ளிகள் கணக்கில் உஸ்பெகிஸ்தான் வெற்றிபெற்றது.

முதல் இரண்டு செட்களிலும் இலங்கை மகளிர் அணி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும், மூன்றாவது செட்டில் முழுமையாக தடுமாற தொடங்கியது. எனவே 25-14 என்ற புள்ளிகள் கணக்கில் குறித்த செட்டையும் இழந்த இலங்கை மகளிர் 3-0 என முதல் போட்டியில் தோல்வியை சந்தித்தது.

முதல் போட்டியில் தோல்வியடைந்துள்ள இலங்கை மகளிர் அணி தங்களுடைய இரண்டாவது போட்டியில் நாளையதினம் (23) கஸகஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

ஏனைய போட்டிகளின் முடிவுகள்

இந்தியா எதிர் பங்களாதேஷ் (குழு A)

பங்களாதேஷ் மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் அற்புதமாக விளையாடிய இந்திய மகளிர் அணி 3-0 என மிகவும் இலகுவான வெற்றியை பெற்றுக்கொண்டது.

ஆட்டத்தின் முதல் செட்டில் பங்களாதேஷ் அணிக்கு வெறும் 3 புள்ளிகளை மாத்திரமே விட்டுக்கொடுத்த இந்திய அணி முறையே 25-03, 25-09 மற்றும் 25-06 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றியீட்டியது.

நேபாளம் எதிர் கிரிகிஸ்தான் (குழு A)

கிரிகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற குழு A யிற்கான போட்டியில் தொடரை நடத்தும் நேபாளம் அணி 3-0 என இலகுவாக வெற்றிபெற்றது.

முதல் செட்டை 25-11 என கைப்பற்றிய நேபாளம் அணி அடுத்த இரண்டு செட்களையும் முறையே 25-19 மற்றும் 25-19 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிகொண்டது.

கஸகஸ்தான் எதிர் மாலைத்தீவுகள் (குழு B)

இன்றைய தினம் நடைபெற்ற இறுதி லீக் போட்டியில் மாலைத்தீவுகள் அணியை எதிர்கொண்ட கஸகஸ்தான் அணி 3-0 என்ற செட்கள் கணக்கில் வெற்றியை பதிவுசெய்தது.

முதல் செட்டில் 25-16 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்ற கஸகஸ்தான் அணி, இரண்டாவது செட்டை 25-14 மற்றும் மூன்றாவது செட்டை 25-06 என்ற புள்ளிகள் கணக்கிலும் கைப்பற்றி தங்களுடைய முதல் வெற்றியை பதிவுசெய்தது.

முதல் நாள் போட்டிகளில் குழு Aயில் வெற்றிபெற்ற இந்தியா மற்றும் நேபாளம் அணிகள் முறையே முதலிரண்டு இடங்களையும், குழு Bயில் கஸகஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் அணிள் முறையே முதலிரண்டு இடங்களையும் பிடித்துள்ளன.

CAVA மகளிர் கரப்பந்தாட்ட சவால் கிண்ணத்தில் இலங்கை, இந்தியா, உஸ்பெகிஸ்தான், கஸகஸ்தான், பங்களாதேஷ், கிரிகிஸ்தான், மாலைத்தீவுகள் மற்றும் நேபாளம் ஆகிய 8 அணிகள் மோதி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<