திறந்த பிரிவில் விமானப்படைக்கு இரட்டை சம்பியன் பட்டங்கள்

38

நீர்கொழும்பு கடற்கரை விளையாட்டரங்கில் கடந்த மூன்று நாட்களாக இடம்பெற்ற Sunquick தேசிய கடற்கரை கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடர் ஞாயிற்றுக்கிழமை (21) வெற்றிகரமாக நிறைவடைந்தது.

கடந்த 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் தடவையாக நடைபெற்ற இம்முறை போட்டித்தொடரில் 217 அணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 400 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீர வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

அதுமாத்திரமின்றி, முதன் தடவையாக 16 வயதின்கீழ் மற்றும் 19 வயதின்கீழ் ஆகிய 2 பிரிவுகள் இம்முறை சேர்க்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

போட்டிகளின் முதல் இரண்டு நாட்டிகள் ஆரம்பச் சுற்று மற்றும் தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்ற நிலையில், போட்டியின் கடைசி நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) இறுதிப்போட்டிகள் நடைபெற்றன.

நேற்று காலை நடைபெற்ற 16 வயதின்கீழ் பெண்களுக்கான இறுதிப் போட்டியில் பிடுலின்க் சி வீராங்கனைகள் 21-07, 21-08 என்ற செட் கணக்கில் கந்தங்கமுவ வீராங்கனைகளை வீழ்த்தினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற 16 வயதின்கீழ் ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் நாத்தாண்டிய ஜனாதிபதி கல்லூரி A அணி வீரர்கள் 22-20 மற்றும் 21-12 என்ற செட் கணக்கில் நாத்தாண்டிய ஜனாதிபதி கல்லூரி B அணியை தோற்கடித்து சம்பியன் பட்டத்தை வென்றனர்.

19 வயதின்கீழ் பெண்கள் பிரிவில் பிடுலின்க் B பெண்கள் அணி (21-11, 21-08) சங்கமித்தா பெண்கள் கல்லூரி மாணவிகளை தோற்கடிக்க, ஆண்கள் பிரிவில் சிலாபம் சென்ட் மேரிஸ் அணியை வீழ்த்தி தவிசமர தேசிய பாடசாலை அணி (14-21, 21-14, 15-14) சம்பியன் பட்டத்தை வென்றது.

பிடுலின்க் B பெண்கள் அணியை (21-17, 21-16) தோற்கடித்து மஹமெருவ B பெண்கள் அணி 22 வயதின்கீழ் பெண்கள் பிரிவில் சம்பியனாகத் தெரிவாக, பலத்த போட்டிக்கு மத்தியில் ஹுங்கம விஜயபா வீரர்கள் 21-19, 19-21 மற்றும் 15-10 என்ற செட் கணக்கில் ஸ்ரீ லக் அணியை வீழ்த்தி 22 வயதின்கீழ் ஆண்கள் பிரிவில் சம்பியனானது.

இம்முறை போட்டித்தொடரில் அதிக கவனத்தை ஈர்த்த பெண்களுக்கான திறந்த பிரிவில் விமானப்படை வீராங்கனைகள் கடற்படை வீராங்கனைகளுக்கு எதிராக 21-06, 21-11 என்ற செட் கணக்கில் இலகு வெற்றியைப் பதிவுசெய்தனர்.

ரசிகர்களின் பலத்த ஆதரவிற்கு மத்தியில் நடைபெற்ற ஆண்களுக்கான திறந்த பிரிவு இறுதிப்போட்டியில் இராணுவ அணியை (21-19 மற்றும் 21-17) 2-0 என்ற செட் கணக்கில் தோற்கடித்து விமானப்படை அணி ஆண்கள் பிரிவு சம்பியன் பட்டத்தை வென்றனர்.

>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<