இலங்கை தேசிய கரப்பந்து அணியில் மலையக வீராங்கனை திலக்ஷனா

315

மத்திய அசிய கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் (CAVA) மகளிருக்கான கரப்பந்தாட்ட சவால் கிண்ண தொடருக்கான இலங்கை தேசிய அணியில் மலையக வீராங்கனை ஜெயராமன் திலக்ஷனா உள்வாங்கப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டுக்கான CAVA மகளிர் கரப்பந்தாட்ட சவால் கிண்ண தொடர் எதிர்வரும் 22ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரையில் நேபாளத்தின் கத்மண்டு நகரில் இடம்பெறவுள்ளது. இந்த தொடரில் இலங்கையுடன் வரவேற்பு நாடான நேபாளம், கஸகஸ்தான், மாலைத்தீவுகள், இந்தியா, கிர்கிஸ்தான், உஸ்பகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய எட்டு நாடுகள் பங்கேற்கவுள்ளன.

தொடருக்கான இலங்கை குழாம் தெரிவு செய்யப்பட்டு கடந்த சில வாரங்களாக பயிற்சிகளைப் பெற்று வருகின்றது. இம்முறை தொடரில் இலங்கை அணியின் தலைவியாக திலினி வாசனா கடமையாற்றவுள்ளதுடன், துணைத் தலைவியாக கவீஷா லக்ஷானி பெயரிடப்பட்டுள்ளார்.

மொத்தம் 14 பேரைக் கொண்ட இந்த குழாத்தில் பதுளை Springvalley பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் திலக்ஷனா இடம்பிடித்துள்ளார். இதன்மூலம் இலங்கை தேசிய கரப்பந்தாட்ட அணியில் இடம்பிடிக்கும் முதலாவது மலையக பெண் என்ற சாதனையையும் இவர் படைத்துள்ளார்.

இலங்கை கடற்படை மகளிர் கரப்பந்தாட்ட அணிக்காக விளையாடி வரும் இவர் அண்மைக் காலங்களில் வெளிப்படுத்திய சிறந்த திறமையின் காரணமாக தேசிய அணிக்கு இணைக்கப்பட்டுள்ளார்.

இம்முறை இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக அனுபவம் மிக்க பயிற்றுவிப்பாளரான சார்ல்ஸ் திலகரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். துணைப் பயிற்றுவிப்பாளராக சந்திமா அகரவிடவும், முகாமையாளராக துஷார பெரேராவும் கடமையாற்றுகின்றனர்.

தற்போது உள்நாட்டில் பயிற்சிகளைப் பெற்று வரும் இலங்கை மகளிர் குழாம் எதிர்வரும் 20ஆம் திகதி நேபாளம் பயணமாகும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

தொடரில் B குழுவில் இடம்பெற்றுள்ள இலங்கை அணி 22ஆம் திகதி இடம்பெறவுள்ள முதல் போட்டியில் உஸ்பகிஸ்தான் அணியையும், 23ஆம் திகதி கஸகஸ்தானையும், இறுதி லீக் போட்டியில் 24ஆம் திகதி மாலைதீவுகள் அணியையும் எதிர்கொள்ளவுள்ளது. தொடரின் இறுதிப் போட்டி 28ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இலங்கை குழாம்

திலினி வாசனா (அணித் தலைவி), கவீஷா லக்ஷானி (துணைத் தலைவி), திலூஷா சன்ஜீவனி, பிரீதிகா பிரமோதனி, ஜெயராமன் திலக்ஷனா, அப்சரா செவ்மாலி, இரேஷா உமயங்கனி, பியுமி பாஷினி, சன்ஜீவனி கருணாரத்ன, அயேஷா மதுரிகா, அருன வசன்தி, கான்ஷணா ஷதுரானி, ஹதுனி நிமன்சலா, சஷினி ஷாருனா

போட்டி அட்டவணை

>> மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க <<