சச்சினைப் போல அறிமுக ரஞ்சி போட்டியில் சதமடித்த அர்ஜுன்

117

சச்சின் டெண்டுல்கரை போலவே அவரது மகன் அர்ஜுன் டெண்டுல்கரும் அறிமுக ரஞ்சி கிண்ண கிரிக்கெட் போட்டியில் சதமடித்து சாதனை படைத்துள்ளார்.

இந்தியாவின் பிரதான உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கிண்ண கிரிக்கெட் தொடர் நேற்றுமுன்தினம் (13) ஆரம்பமாகியது. இதில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜூன் டெண்டுல்கர், கோவா அணிக்காக விளையாடி வருகின்றார்.

கோவா அணி தனது முதல் போட்டியில் ராஜஸ்தானை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. 13ஆம் திகதி ஆரம்பமாகிய இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த கோவா அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான சுமிரன் அமோன்கர் 9 ஓட்டங்களிலும், சுனில் தேசாய் 27 ஓட்டங்களிலும் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும், மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய சுயஸ் பிரபுதேசாய் மிக மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 416 பந்துகளில் 212 ஓட்டங்களை எடுத்தார்.

தொடர்ந்து நான்காவது விக்கெட்டிற்கு களமிறங்கிய ஸ்னேகல் சுஹாஸ் 59 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தாலும், அடுத்தடுத்து களமிறங்கிய சித்தேஸ் லாட் 17 ஓட்டங்களிலும், எக்னாத் கெர்கர் 3 ஓட்டங்களிலும் விக்கெட்டை இழந்து வெளியேறினர்.

இதனையடுத்து பிரபு தேசாய் உடன் ஜோடி சேர்ந்த அர்ஜுன் டெண்டுல்கர் மிக நேர்த்தியாக ஓட்டங்களைக் குவித்தனர். பிரபு தேசாய் மிகச் சிறப்பாக விளையாடி இரட்டைச் சதமடிக்க, மறுமுனையில் அர்ஜுன் டெண்டுல்கரும் தனது கன்னி முதல்தர சதத்தை அடித்து அசத்தினார்.

மொத்தம் 207 பந்துகளில் 120 ஓட்டங்களைக் குவித்த அர்ஜூன் டெண்டுல்கர், அவரது தந்தையை போலவே தனது கிரிக்கெட் பயணத்தை சதத்துடன் ஆரம்பித்துள்ளார்.

கடந்த 1988ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் ஜாம்பவானும், இவரது தந்தையுமான சச்சின் டெண்டுல்கர் குஜராத் அணிக்கு எதிரான தனது அறிமுக ரஞ்சி போட்டியில் சதமடித்திருந்தார். அதேபோலவே 34 ஆண்டுகளுக்குப் பிறகு இவரும் தற்போது அறிமுகப் போட்டியில் சதமடித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<