இனவாத கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஆர்ச்சர், ஸ்டோக்ஸ்!

England Cricket

681
 

இங்கிலாந்து கால்பந்து அணியின் மார்கஸ் ரஷ்பர்ட், ஜேடன் சென்கோ மற்றும் புகாயோ சகோ ஆகியோருக்கு எதிரான இனவாத கருத்துக்களை பகிர வேண்டாம் என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜொப்ரா ஆர்ச்சர் தெரிவித்துள்ளார்.

2020 யூரோ கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் இத்தாலி அணிக்கு எதிராக விளையாடிய இங்கிலாந்து அணி 3-2 என பெனால்டி கோல்கள் அடிப்படையில் தோல்வியை தழுவியது. இதில், ஹரி கேன் மற்றும் ஹரி மெகுயைர் ஆகியோர் முதலிரண்டு பெனால்டிகளை அடித்த போதும், மார்கஸ் ரஷ்போர்ட், ஜேடன் சென்கோ மற்றும் புகாயோ சகோ ஆகியோர் பெனால்டிகளை தவறவிட்டிருந்தனர்.

யூரோ 2020 சம்பியன் கிண்ணம் இத்தாலிக்கு

குறித்த இந்த வீரர்கள் பெனால்டிகளை தவறவிட்டதால், சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் இனவாத தாக்குதல்களை ஏற்படுத்தும் கருத்துகளை பகிர்ந்துவந்தனர். இவற்றை அவதானித்த இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜொப்ரா ஆர்ச்சர்,

“குறித்த வீரர்களை இன்றிரவு இனரீதியாக துஷ்பிரயோகம் செய்ய வேண்டாம்” என தன்னுடைய உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

ஜொப்ரா ஆர்ச்சர் வெளியிட்டிருந்த இந்த கருத்தை, பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் தலைவராக செயற்பட்டுவரும் பென் ஸ்டோக்ஸ், ரீடுவீட் செய்திருந்ததுடன், குறித்த கருத்தினை மக்களும் ரீடுவீட் செய்யுமாறு கோரியிருந்தார்.

அதேநேரம், குறித்த இந்த இனவாத விமர்சனங்கள் தொடர்பில் இங்கிலாந்து கால்பந்து அணியும் தங்களுடைய கருத்தை டுவிட்டரில் பதிவுசெய்துள்ளது. இதில், “இந்த பருவகாலத்தில் எமது அணிக்காக வீரர்கள் எல்லாவற்றையும் கொடுத்துள்ளனர். எனினும், இன்றைய போட்டிக்கு (நேற்றைய) பின்னர், வீரர்கள் துஷ்பிரயோகப்படுத்தப்படுவதை எண்ணி வெறுப்படைகிறோம். நாம் எப்போதும் வீரர்களுடன் இருப்போம்” என பதிவிடப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரித்தானியாவின் பிரதமர் போரிஸ் ஜோன்ஸன், “இந்த இங்கிலாந்து வீரர்கள் ஹீரோக்கள் என்ற பாராட்டை பெறக்கூடியவர்கள். இனரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்படவேண்டியவர்கள் அல்ல. சமுகவலைத்தளங்களில் இனரீதியாக இவர்களை துஷ்பிரயோகப்படுத்துபவர்கள், தங்களை நினைத்து வெட்கப்பட வேண்டும்” என சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமாத்திரமின்றி, சர்வதேசத்தில் உள்ள பல்வேறு முன்னணி விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வாளர்களும் இவ்வாறான இனரீதியான கருத்துக்களுக்கு எதிராக தங்களுடைய விமர்சனத்தை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<