டயலொக் ரக்பி லீக் போட்டிகளின் 2ஆம் சுற்றுப் போட்டிகளில், CR & FC அணியுடனான போட்டியில் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்து இராணுவ அணியானது 24-20 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்றது.

CR & FC மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இராணுவ அணியானது வெற்றிபெற திட்டத்துடனேயே களமிறங்கியது என கூறலாம். போட்டி ஆரம்பித்ததிலிருந்து இராணுவ அணியானது CR & FC அணிக்கு அழுத்தம் கொடுத்து சிறந்த ஒரு போட்டியை வெளிப்படுத்தியது. மறுமுனையில் CR & FC அணியானது பந்தை சிறப்பாக பரிமாறி, விங் நிலை வீரர்களினூடாக ட்ரை வைக்க முயற்சித்தது.

CR & FC அணிக்கு சில வாய்ப்புகள் கிடைத்த பொழுதும், அவற்றை புள்ளிகளாக மாற்றிக்கொள்ள CR & FC அணி தவறியது. அதே வேளை இராணுவ அணியானது நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் CR & FC அணியின் 22 மீட்டர் எல்லைக்குள் நுழைந்த இராணுவ அணியானது, ஒரு சில கட்டங்களின் பின்னர் பலம் மிக்க சம்பத் ரோசா மூலமாக கம்பத்தின் அடியிலே ட்ரை வைத்தது. கயான் சாலிந்த உதையை வெற்றிகரமாக உதைத்தார். (CR & FC 00 – இராணுவப்படை 07)

CR & FC அணியானது அதிகமாக பந்தை தம் வசம் வைத்திருந்தாலும், அவ் அணியால் புள்ளிகளை பெற்றுக்கொள்ள முடியவில்லை. 25ஆவது நிமிடத்தில் CR & FC அணிக்கு கிடைத்த வாய்ப்பின் மூலம் கம்பத்தை நோக்கி உதைய முடிவெடுத்தாலும், பிரின்ஸ் சாமர அதனை வெற்றிகரமாக உதைக்க தவறினார்.

அதன் பின்னர் CR & FC அணிக்கு அழுத்தம் கொடுத்த இராணுவ அணியானது, தமது ப்ரொப் நிலை வீரரான அஷோக் ஜெயலால் மூலம் 2ஆவது ட்ரையை வைத்தது. கயான் சாலிந்த இலகுவான உதையை தவறவிடவில்லை. (CR & FC 00 – இராணுவப்படை 14)

முதற் பாதி முடியவடைவதற்கு முன்னர், CR & FC அணியின் சஷான் மொகமட் தமது அணிக்காக ட்ரை வைத்து CR & FC அணிக்கு நம்பிக்கை கொடுத்தார். இம்முறை பிரின்ஸ் சாமர உதையை தவறவிடவில்லை. (CR & FC 07- இராணுவப்படை 14)

முதற் பாதி: CR & FC கழகம் 07 – இராணுவப்படை விளையாட்டு கழகம் 14

இரண்டாம் பாதியின் ஆரம்பத்தில் CR & FC அணியானது ஆதிக்கம் செலுத்தியது. உத்வேகமாக விளையாடிய CR & FC அணியானது 45ஆவது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பொன்றினை பெற்றுக்கொண்டது. 3 புள்ளிகளை பெற்றுக்கொள்வதற்காக கம்பத்தினை நோக்கி உதைய முடிவெடுத்த CR & FC அணியானது, பிரின்ஸ் சாமர மூலம் அதை வெற்றிகரமாக நிறைவேற்றியது. (CR & FC 10 – இராணுவப்படை 14)

CR & FC அணியானது ஆதிக்கம் செலுத்திய பொழுதும், ஒரு தவறினால் இராணுவ அணிக்கு புள்ளிகளை பெற்றுக்கொள்ள வாய்ப்பளித்தது. CR & FC அணி வீரர்களை கடந்து சென்ற இராணுவ அணியின் தனுஷ்க தலவத்த, பந்தை அஷோக் ஜயலாலிற்கு பரிமாற, அஷோக் ஜயலால் இப்போட்டியில் இரண்டாவது ட்ரையினை வைத்தார். கயான் சாலிந்த இன்று எந்த ஒரு உதையையும் தவறவிடவில்லை. (CR & FC 10 – இராணுவப்படை 20)

இராணுவ அணியின் சமீர சில்வா மஞ்சள் அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட, 5 நிமிடங்கள் கழித்து CR & FC அணியின் நட்சத்திர வீரர் ஓமல்க குணரத்னவும் மஞ்சள் அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதன் மூலம் கிடைக்கப்பெற்ற பெனால்டி வாய்ப்பினை பயன்படுத்திய இராணுவ அணியானது, 25 மீட்டர்கள் தூரத்தில் இருந்து கயான் சாலிந்த மூலமாக வெற்றிகரமாக கம்பத்தின் நடுவே உதைத்து 3 புள்ளிகளை பெற்றுக்கொண்டது. (CR & FC 10 – இராணுவப்படை 24)

போட்டியை வெற்றிகொள்வதற்காக கடினமாக முயன்ற CR & FC அணியானது இறுதி சில நிமிடங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மஞ்சள் அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்ட ஓமல்க தமது வழமையான பலத்தின் மூலம் ட்ரை வைத்து அசத்தினார். கவிந்து டி கொஸ்தா முக்கியமான உதையை வெற்றிகரமாக உதைத்தார். 5 நிமிடங்களின் பின்னர், இராணுவ அணி ஓப் சைட் காணப்பட்டதனால் கிடைக்கப்பெற்ற பெனால்டியை வெற்றிகரமாக உதைத்து, CR & FC அணியின் கவிந்து டி கொஸ்தா தமது அணிக்கு மேலும் 3 புள்ளிகளை பெற்றுக்கொடுத்தார். (CR & FC 20 – இராணுவப்படை 24)

போட்டியில் வெற்றி பெறுவதற்கு மேலதிகமாக 5 புள்ளிகள் தேவையான நிலையில் CR & FC அணியானது கடுமையாக முயற்சி செய்த பொழுதிலும், இராணுவ அணியானது சிறப்பாக தடுத்து வெற்றியை உறுதி செய்து கொண்டது.

முழு நேரம்: CR & FC கழகம் 20 – இராணுவப்படை விளையாட்டு கழகம் 24

ThePapare.com போட்டியின் சிறந்த வீரர் – அசோக் ஜயலால் (இராணுவப்படை அணி)

புள்ளிகள் பெற்றோர்

CR & FC கழகம்

ட்ரை – மொகமட் சஷான், ஓமல்க குணரத்ன
கொன்வெர்சன் – கவிந்து டி கொஸ்தா, பிரின்ஸ் சாமர
பெனால்டி – கவிந்து டி கொஸ்தா, பிரின்ஸ் சாமர

இராணுவப்படை விளையாட்டு கழகம்

ட்ரை – அசோக் ஜயலால் 2, சம்பத் ரோசா 1
கொன்வெர்சன் – கயான் சாலிந்த 3
பெனால்டி – கயான் சாலிந்த

WATCH MATCH REPLAY