நடுவரிடம் பௌண்டரி வேண்டாம் என்ற பென் ஸ்டோக்ஸ்

2686
© AFP

இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று, கன்னி உலகக் கிண்ணத்தை கைப்பற்றியிருந்தது.

உலகளாவிய ரீதியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த இந்த இறுதிப் போட்டி சுப்பர் ஓவர் வரை சென்றும் சமனிலையாகியதில், இன்னிங்ஸின் பௌண்டரிகள் அடிப்படையில் வெற்றி இங்கிலாந்து அணிக்கு வழங்கப்பட்டிருந்தது. 

உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் தவறான தீர்ப்பு வழங்கப்பட்டது – முன்னாள் நடுவர்

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் ….

பௌண்டரிகளால் வழங்கப்பட்ட இந்த போட்டி முடிவு மற்றும் குறித்த இறுதிப் போட்டியில் வழங்கப்பட்டிருந்த நடுவர்களின் சில தீர்ப்புகள் குறித்தும் காரசாரமான விவாதங்கள் இடம்பெற்று வந்தன. 

குறித்த விவாதங்களில் ஒன்றுதான் பென் ஸ்டோக்ஸின் துடுப்பு மட்டையில் பட்டு, பந்து பௌண்டரி எல்லையை அடைந்தமையும், அதற்காக 6 ஓட்டங்கள் நடுவர்களால் வழங்கப்பட்டதுமாகும். இதில், நடுவர் 6 ஓட்டங்கள் வழங்கியிருக்க கூடாது. அதற்கு 5 ஓட்டங்கள் மாத்திரமே வழங்கப்பட்டிருக்க வேண்டும் என அவுஸ்திரேலியாவின் முன்னாள் நடுவர் சைமன் டொஃப்ல் கருத்து வெளியிட்டிருந்தார்.

இப்படி விமர்சனங்களும், விவாதங்களும் இடம்பெற்று வருகின்ற சந்தர்ப்பத்தில் பென் ஸ்டோக்ஸ் கூறியிருக்கின்ற கருத்தொன்று அனைவராலும் பாராட்டப்பட்டு வருகின்றது. குறிப்பாக, எந்தவொரு போட்டியிலும் களத்தடுப்பாளர் வீசும் பந்து ஒன்று துடுப்பாட்ட வீரரின் மீது பட்டுச்சென்றால், கிரிக்கெட்டின் மகத்துவத் தன்மையை வெளிப்படுத்தும் வகையில் துடுப்பாட்ட வீரர்கள் ஓட்டங்களை பெற மாட்டார்கள். 

ஆனால், துடுப்பாட்ட வீரர் அறியாமல் பந்து அவர்கள் மீது அல்லது அவரது துடுப்பு மட்டையில் பட்டு பௌண்டரி எல்லையை அடைந்தால் ஐசிசி விதிமுறைப்படி அது பௌண்டரியாகவே கருதப்படும். இதன் அடிப்படையிலேயே இங்கிலாந்து அணிக்கு உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் பௌண்டரி வழங்கப்பட்டிருந்தது. 

ஆனால், குறித்த தருணத்தில் இடம்பெற்ற சம்பவமொன்று இதுவரையில் வெளிப்படாமல் இருந்துள்ளது. இந்தநிலையில், பிபிசி இணைய வானொலியில் நடைபெற்ற “டெய்லெண்டர்ஸ்” என்ற நிகழ்ச்சியில் இங்கிலாந்து அணியின் வீரர் ஜிம்மி எண்டர்சன் சுவாரஷ்யமான விடயமொன்றை பகிர்ந்திருக்கிறார்.

அதாவது, ஸ்டோக்ஸின் துடுப்பாட்ட மட்டையில் பட்ட பந்து பௌண்டரியை அடைந்த பின்னர், நடுவர் அதற்கு ஆறு ஓட்டங்கள் வழங்கியிருந்தார். இதன் போது நடுவரிடம் சென்ற ஸ்டோக்ஸ் குறித்த பௌண்டரி வேண்டாம் எனவும், முடிவை மாற்றிக்கொள்ள முடியுமா? எனவும் கேட்டிருக்கிறார். ஆனாலும், ஐசிசி விதிமுறைப்படி நடுவர் பௌண்டரியை வழங்கயிருக்கிறார்.

இதுதொடர்பில் ஜிம்மி எண்டர்சன் குறிப்பிடுகையில். “கிரிக்கெட்டில் பந்து (களத்தடுப்பாளரிடம் வீசும் பந்து) ஒன்று துடுப்பாட்ட வீரரை தாக்கிச் சென்றால் அதன் பின்னர் ஓட்டங்கள் ஓடிப்பெறுவதில்லை என்பது கிரிக்கெட் மரபு. ஆனால், அதுவே பௌண்டரி எல்லையை அடைந்தால் விதிமுறைப்படி பௌண்டரிதான்.

சம்பியன் அணியை கௌரவிக்கும் இங்கிலாந்து

கடந்த வாரம் நிறைவுற்ற உலகக் கிண்ண ….

 “பென் ஸ்டோக்ஸ் போட்டியின் பின்னர் மைக்கல் வோகனை சந்தித்து பேசியுள்ளார். இதன் போது, நடுவரிடம் சென்று ‘மேலதிகமாக வழங்கப்பட்ட அந்த நான்கு ஓட்டங்களை மீள எடுத்துக்கொள்ள முடியுமா? எனவும் குறித்த ஓட்டங்கள் எமக்கு வேண்டாம்’ எனவும் கேட்டுக்கொண்டதாக கூறியுள்ளார்” இந்த விடயத்தினை ஜிம்மி எண்டர்சன் பிபிசி இணைய வானொலியில் வெளிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை, நியூசிலாந்தின் க்ரிஸ்சேர்ச்சை பிறப்பிடமாகக் கொண்ட பென் ஸ்டோக்ஸ் குறித்த நான்கு ஓட்டங்களுக்காக வாழ்நாள் முழுவதும் கேன் வில்லியம்சனிடம் மன்னிப்பு கேட்பேன் என பகிரங்கமான மன்னிப்பு கோரியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<