ஜமைக்கா தலவாஸ் அணியிலிருந்து விலகும் சர்வான்

163

கரீபியன் ப்ரீமியர் லீக் (CPL) அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள நிலையில், ஜமைக்கா தலவாஸ் அணியின் உதவி பயிற்றுவிப்பாளர் ராம்நரேஷ் சர்வான் திடீரென அணியிலிருந்து விலகியுள்ளார்.

ராம்நரேஷ் சர்வான் தனிப்பட்ட காரணங்களுக்காக அணியின் உதவி பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகியுள்ளதாகவும், அவருக்கு பதிலாக மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர்களான ரெயன் அஸ்டின் மற்றும் வினோத் மஹாராஜ் ஆகியோரை தலைமை பயிற்றுவிப்பாளர் ப்ளொய்ட் ரெய்பரின் உதவி பயிற்றுவிப்பாளர்களாக தலவாஸ் அணி நியமித்துள்ளது.

மேஜர் லீக்கில் துடுப்பாட்டத்தில் அசத்திய மெதிவ்ஸ், சந்திமால், மெண்டிஸ்

சர்வானின் விலகல் குறித்து கருத்து வெளியிட்ட ஜமைக்கா தலாவாஸ் அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜெப் மில்லர், “சர்வான் அணியிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலக வேண்டும் என கேட்டுக்கொண்டார். எனவே, அதனை நாம் செய்துள்ளோம். இதுவொரு பாரிய இழப்பாகும். 

சர்வான் தனது அளவுக்கதிகமான அனுபவத்தை கிரிக்கெட்டுக்கு தந்துள்ளார். அவரது ஆற்றல் மற்றும் அனுபவம் என்பன வீரர்களுக்கு பெரிதும் உதவியுள்ளது. எனவே, இதுவொரு மிகப் பாரிய இழப்பாக இருக்கும்” என்றார்.

அதேநேரம், உதவி பயிற்றுவிப்பாளரான ராம்நரேஷ் சர்வான் மற்றும் அந்த அணியின் முன்னாள் வீரர் க்ரிஸ் கெயில் ஆகியோருக்கு இடையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர், கடும் வாக்குவாதங்கள் இடம்பெற்றிருந்தன. க்ரிஸ் கெயில் வெளியிட்ட ஒரு காணொளியில், அவர் அணியிலிருந்து வெளியேறியதற்கான காரணம், சர்வான் என குறிப்பிட்டு அவரை கடுமையாகவும் விமர்சித்திருந்தார்.

அத்துடன், க்ரிஸ் கெயில் ஜமைக்கா டளவாஸ் அணியிலிருந்து வெளியேறி, சென்.லூசியா ஷூக்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

குறித்த இந்த சம்பவம் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், அணியானது தங்களுடைய மூன்றாவது கிண்ணத்தை வெற்றிக்கொள்வதற்குமான எண்ணத்தில் உள்ளதாக ஜெப் மில்லர் குறிப்பிட்டார். ஜமைக்கா அணி 2013ம் ஆண்டு நடைபெற்ற முதல் CPL கிண்ணத்தை வென்றதுடன், 2016ம் ஆண்டு இரண்டாவது முறையாக கிண்ணத்தை கைப்பற்றியது.

Video – LPL இல் களமிறங்கும் நட்சத்திரங்கள்|Sports RoundUp – Epi 127

“நாம் முன்னேற்ற பாதையை நோக்கி சென்றுக்கொண்டுள்ளோம்.  எமது  அணியை மீள்கட்டமைப்பு செய்யவேண்டிய வருடம் இது. ஆனால், மீள்கட்டமைப்பு மாத்திரமின்றி, கிண்ணத்தை வெல்வதற்காகவும் நாம் இங்கு வந்திருக்கிறோம். எம்மிடம் சிறந்த வீரர்கள் உள்ளனர். அதனால், எம்மால் முன்னேற முடியும். எம்மால் என்ன செய்ய முடியும் என்பதை பொருத்திருந்து பார்க்க முடியும். அதேநேரம், இந்த ஆண்டு போட்டிக்காக காத்திருக்கிறோம்” என ஜெப் மில்லர் குறிப்பிட்டார்.

ஜமைக்கா தலவாஸ் அணி எதிர்வரும் 19ம் திகதி சென்.லூசியா ஷூக்ஸ் அணியுடன் தங்களுடைய இந்தவருட CPL தொடரை ஆரம்பிக்கவுள்ளதை குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க