பிரேசிலை வீழ்த்திய பெல்ஜியம் அரையிறுதியில் பிரான்ஸுடன் பலப்பரீட்சை

700
Image Courtesy - AP

திறமையான ஆட்டத்தை வெளிக்காட்டிய பெல்ஜியம் அணி ஐந்து முறை சம்பியனான பிரேசில் அணியை 2-1 என்ற கோல்கள் கணக்கில் வென்று 1986 இற்கு பின் முதல் முறை உலகக் கிண்ண அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

போட்டியின் ஆரம்பத்திலேயே இரண்டு கோல்களை போட்டு முன்னிலை பெற்ற பெல்ஜியம் அணி கடைசி நேரத்தில் தற்காப்பு அரண் அமைத்து போட்டியை காத்துக் கொண்டது. இதன் மூலம் 2018 உலகக் கிண்ண போட்டியின் அரையிறுதியில் நான்கு ஐரோப்பிய அணிகள் முன்னேறுவது உறுதியாகியுள்ளது.

உலகக் கிண்ணத்தில் முதல் அணியாக பிரான்ஸ் அரையிறுதிக்கு முன்னேற்றம்

உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் வெள்ளிக்கிழமை (06) நடந்த இரண்டு காலிறுதிப் போட்டிகளிலும் பிரேசில் மற்றும் உருகுவே அணிகள் தோற்று வெளியேறிய நிலையில் தென் அமெரிக்க நாடுகள் அனைத்தும் வெளியேறியுள்ளன. கடைசியாக 2006 ஆம் ஆண்டு ஐரோப்பிய நாடுகள் மாத்திரம் அரையிறுதிக்கு முன்னேறியதோடு, அதற்கு முன் 1934, 1966 மற்றும் 1982 உலகக் கிண்ண தொடர்களிலேயே இவ்வாறு நிகழ்ந்துள்ளது.

இதன்படி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (10) செயின்ட் பீட்டர்ஸ்பேர்க் அரங்கில் நடைபெறவிருக்கும் முதல் அரையிறுதிப் போட்டியில் பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

கசானில் நடைபெற்ற போட்டியின் ஆரம்பத்தில் பிரேசில் அணி அடிக்கடி எதிரணி கோல் கம்பத்தை ஆக்கிரமித்து நெருக்கடி கொடுத்தபோதும் 13 ஆவது நிமிடத்தில் விழுந்த ஓன் கோல் (Own goal) போட்டியை முழுமையாக திசை திருப்ப காரணமானது. நாசர் சாட்லி அடித்த கோனர் கிக்கை தடுக்க முயன்றபோது பந்து பெர்னாண்டின்ஹோவின் கையில்பட்டு சொந்த வலைக்குள் சென்றது.

இது இம்முறை உலகக் கிண்ணத்தில் பெறப்பட்ட 11 ஆவது ஓன் கோலாக இருந்தது. அத்துடன் உலகக் கிண்ண வரலாற்றில் பிரேசில் அணியில் ஓன் கோல் போட்ட இரண்டாவது வீரர் பெர்னாண்டின்ஹோ ஆவார். இதற்கு முன் 2014 உலகக் கிண்ணத்தில் மார்சலோ இவ்வாறு சொந்த வலைக்குள் பந்தை செலுத்தி இருந்தார்.  

இதன் மூலம் போட்டியில் முன்னிலை பெற்ற பெல்ஜியம் உற்சாகம் பெற்று பிரேசிலுக்கு பதில் தாக்குதல்கள் மூலம் கோல் திருப்பும் முயற்சியில் ஈடுபட்டது.

இதன்போது பிரேசில் பின்கள வீரர்களை முடிறியடித்து வேகமாக பந்தை கடத்திச் சென்ற ரொமெலு லுகாகு அதனை கெவின் டி ப்ருய்ன் இடம் பரிமாற்றினார். அப்போது அவர் 20 யார் தூரத்தில் இருந்து மின்னல் வேகத்தில் உதைத்து பெல்ஜியம் அணியை 2-0 என முன்னிலை பெறச்செய்தார். போட்டியின் 31 ஆவது நிமிடத்திலேயே பெல்ஜியம் வெற்றி வாய்ப்பை அதிகரித்துக் கொண்ட நிலையில் பிரேசில் கோல் போட அவசரம் காட்டியதை பார்க்க முடிந்தது.

முதல் பாதி: பெல்ஜியம் 2 – 0 பிரேசில்

பெல்ஜியம் அணி தனது கால்பந்து வரலாற்றில் பல திறமையான வீரர்களை கொண்ட பொற்கால தலைமுறையுடனேயே இம்முறை உலகக்  கிண்ணத்தில் களமிறங்கியது. அந்த அணிக்கு முதல் ஆயுதம் பதில் தாக்குதல் தொடுத்து பந்தை எதிரணி கோல் கம்பத்தை நோக்கி வேகமாக கடத்திச் செல்வதாகும். ப்ருய்ன், லுகாகுவுடன் தனித்த ஆட்டத்திறமை படைத்த எடென் ஹசார்ட் ஆகியோர் பிரேசிலுக்கு எதிராகவும் இந்த உத்தியை கச்சிதமாக பயன்படுத்தினர். இதனால் எதிரணிக்கு ஒரு கோலை மாத்திரம் விட்டுக் கொடுத்து காலிறுதி வரை முன்னேறிய பிரேசில் அணியின் பின்களம் சற்று ஆட்டம் கண்டதை காணலாம்.

எனினும் இரண்டாவது பாதி ஆட்டத்தின் பெரும்பாலான நேரம் பந்து பிரேசில் வீரர்களின் கால்களிலேயே இருந்தது. எனினும் பெல்ஜியம் அணியின் பின்களம் உறுதியாக இருந்த நிலையில் நெய்மார் மற்றும் சகாக்களால் அதனை முறியடிப்பது கடினமாக இருந்தது. பிரேசில் அணி வீரர்கள் கோலை நோக்கி அடிக்கும் பந்துகள் தடுக்கப்பட்டது அல்லது முறியடிக்கப்பட்டது.

இறுதி நேரத்தில் எழுச்சி பெற்ற பெல்ஜியம் பிரேசிலுடனான காலிறுதிக்கு முன்னேற்றம்

எனினும் ரேனாடோ அகஸ்டோ மாற்று வீரராக மைதானத்திற்கு வந்த விரைவில் 76 ஆவது நிமிடத்தில் அபாரமாக தலையால் முட்டி பிரேசில் அணிக்கு கோல் ஒன்றை பெற்றுக்கொடுத்தது அந்த அணிக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது. அரங்கில் இருந்த 48 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்களில் பிரேசில் ஆதரவாளர்களின் கரகோசம் பெரிதாக எழுந்தது.  

மற்றொரு கோலை பெற பிரேசில் அவசரப்பட்ட நிலையில் பெல்ஜியம் 32 ஆண்டுகளின் பின் உலகக் கிண்ண அரையிறுதிக்கு முன்னேற காலத்துடன் போராடியது.

இந்நிலையில் போட்டி முடிவதற்கு இரண்டு நிமிடங்கள் மாத்திரமே இருக்கும்போது நட்சத்திர வீரர் நெய்மார் தனது கடைசி முயற்சியாக பெனால்டி எல்லைக்கு வெளியில் இருந்து உதைத்த பந்து கோலை நோக்கி மேலால் வந்தபோது பெல்ஜியம் கோல்காப்பாளர் திபவுட் கோர்டொயிஸ் (Thibaut COURTOIS) துள்ளிக் குதித்து தனது இடது கையால் பந்தை வெளியே தட்டிவிட்டார்.  

இதன்படி பிரேசில் அணி தொடர்ந்து நான்கு உலகக் கிண்ண போட்டிகளில் ஐரோப்பிய அணிகளால் வீழ்த்தப்பட்டு உலகக் கிண்ண போட்டிகளிலிருந்து வெளியேறியுள்ளது. 2006இல் பிரான்ஸிடமும், 2010இல் நெதர்லாந்திடமும் 2014இல் ஜெர்மனியிடமும் அந்த அணி தோற்று வெளியேறியது.

அத்துடன் கால்பந்து போட்டி ஒன்றில் பெல்ஜியம் அணி பிரேசிலை வீழ்த்துவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன் 1963 ஆம் ஆண்டிலேயே அந்த அணி பிரேசிலை வென்றுள்ளது.  

உலகக் கிண்ண போட்டியில் தற்போது பெரும் எதிர்பார்ப்பு கொண்ட பிரேசில், ஜெர்மனி, ஆர்ஜன்டீனா அணிகள் வெளியேறியுள்ள நிலையில் பிரான்ஸ் (1998) மற்றும் இங்கிலாந்து (1966) ஆகிய இரு முன்னாள் சம்பியன்கள் மாத்திரமே மீண்டும் கிண்ணத்தை வெல்லும் வாய்ப்புக்கொண்ட அணிகளாக எஞ்சியுள்ளன.

முழு நேரம்: பெல்ஜியம் 2 – 1 பிரேசில்

கோல் பெற்றவர்கள்

பெல்ஜியம் – பெர்னாண்டின்ஹோ 13′ (ஓன் கோல்), கெவின் டி ப்ருய்ன் 31′

பிரேசில் – ரேனாடோ அகஸ்டோ 76′

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<