உலகக் கிண்ணத்தில் முதல் அணியாக பிரான்ஸ் அரையிறுதிக்கு முன்னேற்றம்

216
Image Courtesy - EPA

உருகுவேயின் அனுபவ கோல்காப்பாளர் பெர்னாண்டோ முஸ்லேரா இழைத்த தவறு மற்றும் ரபாயேல் வாரன் தலையால் முட்டி பெற்ற கோலின் உதவியோடு உருகுவே அணியை 2-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த பிரான்ஸ் அணி இம்முறை உலகக் கிண்ணத்தில் முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றது.  

பிரான்ஸ் அணி உலகக் கிண்ண அரையிறுதிக்கு முன்னேறுவது இது ஆறாவது முறை என்பதோடு அந்த அணி 2006 இற்குப் பின்னர் கடைசி நான்கு இடங்களை தொட்டது இதுவே முதல் முறையாகும். இரண்டு முறை உலக சம்பியனான உருகுவே கடைசியாக 2010 ஆம் ஆண்டு உலகக் கிண்ண அரையிறுதிக்கு முன்னேறி இருந்தது.

உலகக் கிண்ணத் தொடரில் வழங்கப்படும் விருதுகள்

இதன்படி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (10) செயின்ட் பீட்டர்ஸ்பேர்க்கில் நடைபெறவிருக்கும் முதல் அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணி பெல்ஜியம் அல்லது பிரேசிலுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

நிஸ்னி நொவ்கிரோட் அரங்கில் வெள்ளிக்கிழமை (06) முதல் காலிறுதிப் போட்டியாக நடைபெற்ற ஆட்டத்தில் உருகுவே அணி அதன் முன்கள வீரர் எடிசன் கவானி இன்றியே களமிறங்கியது. கவானி கெண்டைக்கால் பகுதியில் உபாதைக்கு உள்ளான நிலையில் உருகுவே ஆரம்ப வரிசையில் லுவிஸ் சுவாரெஸுடன் கிறிஸ்தியன் ஸ்டுவானி இடம்பெற்றார்.

இந்த இருவரும் போட்டியின் ஆரம்பத்தில் எதிரணிக்கு குறிப்பிடத்தக்க அளவில் நெருக்கடி கொடுத்தனர். எனினும் இம்முறை உலகக் கிண்ணத்தில் 3 கோல்களைப் பெற்ற கவானி இல்லாதது உருகுவே அணிக்கு குறையாகவே இருந்தது.

நொக் அவுட் சுற்றில் ஆர்ஜன்டீன அணியை தோற்கடிக்க பங்காற்றி இருந்த பிரான்ஸ் வீரர் கைலியான் ம்பாப்பே சிறந்த சந்தர்ப்பம் ஒன்றை ஆரம்பத்திலேயே வீணடித்தார். 15 ஆவது நிமிடத்தில் ஒலிவியர் கிரவுட் தலையால் முட்டி பந்தை பெனால்டி எல்லைக்குள் செலுத்தியபோதும் ம்பாப்பே அதனை தலையால் முட்டி கம்பத்திற்கு வெளியே செலுத்தினார்.  

எனினும் 40 ஆவது நிமிடம் வரை போட்டி சற்று அமைதியாகவே நீடித்தது. அப்போது ப்ரீ கிக் மூலம் கிரிஸ்மன் உதைத்த பந்து வரானை நோக்கி செல்ல அவர் தலையால் முட்டி கச்சிதமாக கோலாக மாற்றினார்.  

சில நிமிடங்களின் பின் உருகுவே அணிக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பை பிரான்ஸ் கோல்காப்பாளர் ஹுகோ ல்லொரிஸ் தடுத்தார். மார்டின் கசரஸ் தலையால் முட்டிய பந்து வலைக்குள் செல்வதை அவர் பாய்ந்து ஒற்றை கையால் தடுத்தார். இதனைத் தொடர்ந்து வெளியே வந்த பந்தை டியாகோ கோடின் கோலுக்குள் செலுத்த முயன்றபோதும் அது இலக்கு தவறியது.   

முதல் பாதி: பிரான்ஸ் 1 – 0 உருகுவே

முதல் பாதியில் பிரான்ஸ் கோல்காப்பளரின் சிறப்பான ஆட்டத்திற்கு மாறாக உருகுவே கோல்காப்பாளர் இழைத்த மோசமான தவறு அந்த அணி பின்னடைவை சந்திக்க காரணமானது.

61 ஆவது நிமிடத்தில் கிரிஸ்மன் உதைத்த பந்து நேராக கோல்காப்பாளர் முஸ்லேராவின் கைகளுக்கு சென்றபோது அவர் அதனை சாதாரணமாக பிடித்தார். ஆனால் அந்த பந்து அவரது கைகளில் இருந்து நழுவி தலைக்கு மேலால் வலைக்குள் சென்றது. இதன் மூலம் 2-0 என முன்னிலை பெற்ற பிரான்ஸ் கடைசி நிமிடங்களில் தற்காப்பு ஆட்டம் ஒன்றுக்கு திரும்பியது.

இலங்கை தேசிய கால்பந்து அணியின் இறுதிக் குழாம் அறிவிப்பு

கோல்காப்பாளரின் தவறால் போட்டியில் வெற்றிபெற கடுமையாக போராட வேண்டும் என்ற நிலையில் கடைசி நிமிடங்களில் களைப்படைந்த உருகுவே அணி எதிரணி பெனால்டி எல்லையை முறியடிப்பதற்கு சிரமப்பட்டது.

இதன்போது உருகுவேயின் கிறிஸ்டியன் ரொட்ரிகுவஸுடன் மோதிய ம்பாப்பே கீழே விழுந்தார். இரு அணிகளும் குழப்பத்தில் இருக்க அங்கே மோதலும் ஏற்பட்டது. கடைசியில் ரொட்ரிகுவஸ் மற்றும் ம்பாப்பே இருவரும் மஞ்சள் அட்டை பெற்றனர்.  

இம்முறை உலகக் கிண்ணத்தில் முதல் முறையாக கோல் பெற தவறிய உருகுவே அணிக்கு எட்டு வீரர்கள் பந்தை வலைக்குள் செலுத்தும் முயற்சியில் ஈடுபட்டபோதும் எதுவும் வெற்றி அளிக்கவில்லை. எனினும் பார்சிலோனா முன்கள வீரரான சுவாரெஸ் கோல் முயற்சியில் ஈடுபடவில்லை அவர் அதற்கான வாய்ப்பை பெருவதிலேயே அதிக கவனம் செலுத்தியதை காண முடிந்தது.  

பிரான்ஸ் அணி இதுவரை அரையிறுதிக்கு முன்னேறிய ஆறு தடவைகளில் இரண்டு (1998, 2006) முறைகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முழு நேரம்: பிரான்ஸ் 2 – 0 உருகுவே

கோல் பெற்றவர்கள்

பிரான்ஸ் – ரபாயேல் வாரன் 40′, அன்டனியோ கிரிஸ்மன் 61′  

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க