இந்தியாவை வீழ்த்தும் வாய்ப்பை கோட்டை விட்டோம்: குல்படின் வேதனை

136
AFP

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நேற்று (22) நடைபெற்ற லீக் போட்டியில் இந்தியாவை வீழ்த்துவதற்கான அரிய வாய்பை ஆப்கானிஸ்தான் அணி கோட்டை விட்டாலும், அனுபவமில்லாத தனது அணி நாளுக்கு நாள் தோல்விகளில் இருந்து கற்றுக் கொண்டு வருவதாக அவ்வணியின் தலைவர் குல்படின் நைப் தெரிவித்தார்.  

உலகக் கிண்ணத் தொடரில் தோல்வியடையாத அணியாக முன்னேறும் இந்தியா

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் 29………

இரண்டாவது தடவையாகவும் உலகக் கிண்ணத்தில் பங்கேற்று விளையாடி வருகின்ற ஆப்கானிஸ்தான் அணி, விராட் கோஹ்லி தலைமையிலான பலமிக்க துடுப்பாட்ட வரிசையை கொண்ட இந்தியாவை பந்துவீச்சில் மிரட்டி 224 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தியிருந்தது. இதனால், அந்த அணிக்கு தான் வெற்றி என கருதப்பட்டது.

எனினும், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. இறுதியில் மொஹமட் ஷமியின் ஹெட்ரிக் விக்கெட்டின் உதவியினால் 11 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்தது. இதன்மூலம், இம்முறை உலகக் கிண்ணத்தில் 6ஆவது தொடர் தோல்வியையும் அந்த அணிக்கு சந்திக்க நேரிட்டது.

இந்த நிலையில் போட்டியின் பிறகு தோல்வி குறித்து குல்படின் நைப் கருத்து வெளியிடுகையில்,

”இந்த ஆடுகளமானது போட்டியின் முதல் பாதியில் துடுப்பாட்டத்திற்கு சாதகமாக இருந்தது. எமது திட்டத்தில் சுழல் பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து செயற்பட்டிருந்தனர். அவர்கள் நன்றாகவே செயல்பட்டார்கள். ஷித் கான் மற்றும் முஜிபுர் ரஹ்மானைத் தவிர எங்களுக்கு மாற்று வழிகள் இருந்தன. ஆனால், போட்டியின் பிற்பாதியில் அப்தாப்புடன் சேர்ந்து நானும் நன்றாக பந்து வீசினோம்.

இங்கிலாந்தை வீழ்த்த முடியும் என்ற தன்னம்பிக்கையோடு பந்து வீசினோம் – மாலிங்க

இங்கிலாந்ததை வீழ்த்த முடியும் என்ற ……..

ஆனால் இந்தியா ஒரு நல்ல அணி. அவர்களால் நிர்ணயிக்கப்பட்ட ஓட்ட எண்ணிக்கையை இலகுவாக துரத்தியடித்து இருக்கலாம். எனினும், மத்திய வரிசையில் நாங்கள் ஓட்டங்களை பெற தவறிவிட்டோம். நாங்கள் 100, 80 ஓட்டங்களைக் குவித்திருக்க வேண்டும். ஆனால் இந்தியா போன்ற அணியுடன் 20 அல்லது 30 ஓட்டங்களைப் பெற்றுக்கொள்வது வெற்றிக்கு போதாது. 220 என்ற ஓட்ட இலக்கை துரத்தும் போது பொறுப்புடன் நீண்ட நேரம் துடுப்பெடுத்தாடுகின்ற வீரர் ஒருவர் இருக்க வேண்டும்.

நாங்கள் முன்னதாக நடைபெற்ற நான்கு போட்டிகளை மிக மோசமாக தோல்வியைத் தழுவினோம். ஆனால் கடந்த இரண்டு போட்டிகளில் நாங்கள் நன்றாக விளையாடியுள்ளோம். இந்த தொடர் உலகில் உள்ள முன்னணி கிரிக்கெட் அணிகளுக்கு எதிராக விளையாடுகின்ற கடுமையான போட்டி. எனவே இதில் வெற்றிபெற வேண்டுமானால் முடிந்தவரை போராட வேண்டும்” என தெரிவித்தார்.


தாம் இப்போது நாளுக்கு நாள் முன்னேற்றம் அடைந்து வருகிறோம் என்று தெரிவித்த குல்படின்,உண்மையில் இதுபோன்ற அணியைத் தான் நான் விரும்பினேன். அதேபோல, இவ்வாறான பலமிக்க அணிகளுடன் விளையாடினால் தான் நிறைய விடயங்களை கற்றுக் கொள்ளவும் முடியும். எனவே, எமது அடுத்த கட்ட நகர்வுக்கு இதுவொரு நல்ல அறிகுறியாகும்.

இந்தியா போன்ற அணிகள் எமக்கு எந்தவொரு வாய்ப்பையும் தரமாட்டாது. எனவே அனைத்து கௌரவமும் இந்தியாவையே சாரும். அவர்கள் பந்துவீசிய விதம், களத்தடுப்பில் ஈடுபட்ட விதம் பாராட்டுக்குரியது. கடைசி மூன்று ஓவர்களில் பும்ரா அபாரமாக பந்துவீசி நெருக்கடி கொடுத்தார்.

உண்மையில் அனைத்து கௌரவங்களும் அவரை சாரும். அதேபோல, நாங்களும் நிறைய நல்ல விடயங்களைச் செய்தோம். ஆனால், இறுதியில் நாங்கள் அதை தவறவிட்டோம்.

இந்த இலக்கை துரத்தியடித்து இருக்கலாம். ஆனால் நாங்கள் பொறுப்புடன் விளையாடவில்லை என்று நினைக்கிறேன். குறிப்பாக, துடுப்பாட்டத்தில் ஏமாற்றிவிட்டோம்.

இந்தியா போன்ற அணியொன்றை தோற்கடிக்க கிடைத்த வாய்ப்பை தவறிட்டமை குறித்து மிகவும் கவலைப்படுகிறோம். உலகக் கிண்ணத்தில் இந்தியாவை வீழ்த்துவது எந்தவொரு அணிக்கும் ஒரு பெரிய சாதனையாக இருக்கும். ஆனால் பெரிய அணிகள் ஒருபோதும் வாய்ப்பு வழங்காது” என கூறினார்.

இந்தியா மிகவும் வலுவான அணிகளில் ஒன்று. அதேபோல எனக்கு விருப்பமான அணியும் இந்தியா தான். இந்தியா விளையாடும் போது நான் அந்த அணிக்குத்தான் ஆதரவளிப்பேன். அதேபோல, விராத் கோஹ்லி தான் என்னுடைய விருப்பமான வீரர். இன்று நான் அவருக்கு எதிராக விளையாடினேன், ஆனால் அவர்களை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டேன். ஆனால் இந்தியா இப்போது சிறந்த அணிகளில் ஒன்றாகும் என அவர் தனது விருப்பம் குறித்து தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தான் அணி தனது அடுத்த லீக் போட்டியில் எதிர்வரும் 24ஆம் திகதி பங்களாதேஷ் அணியுடன் மோதுகிறது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<