15 வயது ஆப்கான் வீரருடன், பிக் பாஷ் லீக்கில் களமிறங்கும் இம்ரான் தாஹிர்

181

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளரான இம்ரான் தாஹிர் மற்றும் ஆப்கானிஸ்தானின் இளம் சுழல் பந்துவீச்சாளரான நூர் அஹ்மட் ஆகிய இருவரும் அவுஸ்ரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் T20 தொடரில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் 41 வயதான இம்ரான் தாஹிரும், 15 வயதான நூர் அஹ்மட்டும் பிக் பாஷ் தொடரில் மெல்பேர்ன் ரெனெகேட்ஸ் அணிக்காக முதல் முறையாக விளையாடவுள்ளனர்.

பிக்பாஷ் தொடரிலிருந்து வெளியேறும் ஏ.பி.டி. வில்லியர்ஸ்

இது இவ்வாறிருக்க, கொரோனா பாதுகாப்பு வளையத்தினால் உண்டான மன அழுத்தம் காரணமாக இம்முறை பிக் பாஷ் தொடரிலிருந்து விலகுவதாக பிரபல அவுஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் அறிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 10 ஆவது பிக் பாஷ் ப்ரீமியர் லீக் டி20 தொடர், எதிர்வரும் டிசம்பர் 3 ஆம் திகதி முதல் நடைபெறவுள்ளது.

தற்போது ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வருகின்ற ஐ.பி.எல் தொடரில் பங்கேற்றுள்ள பல முன்னணி வீரர்கள் இம்முறை பிக் பாஷ் தொடரில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காகவும், உபாதை காரணமாகவும் விலகுவதாக அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில், உலகின் முன்னணி T20 லீக் தொடர்களில் தொடர்ந்து விளையாடி வருகின்ற தென்னாபிரிக்கா அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளரான இம்ரான் தாஹிர், இம்முறை பிக் பாஷ் T20 லீக்கில் முதல் முறையாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

மெல்போர்ன் ரெனேகேட்ஸ் இம்ரான் தாஹிரை ஒப்பந்தம் செய்துள்ளது. எனினும், அவர் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு பின்னர்தான் இந்தத் தொடரில் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுன்ளது.

Video – LPL தொடரில் விளையாடவுள்ள தமிழ் பேசும் வீரர்கள் யார்?|முழுமையான பார்வை..!

இதனால் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 15 வயதுடைய இடதுகை சுழல் பந்துவீச்சாளரான நூர் அஹ்மட், இம்ரான் தாஹிர் அணியில் இணைந்து கொள்ளும் வரை மெல்பேர்ன் அணிக்கு விளையாட ஒப்பந்தம் செய்ய்ப்பட்டுள்ளார்.

இதனிடையே, மெல்பேர்ன் ரெனேகேட்ஸ் அணிக்காக இம்ரான் தாஹிர் ஒப்பந்தம் செய்யப்பட்டமை குறித்து அதன் பயிற்சியாளர் மைக்கல் க்லிங்கர் கருத்து வெளியிடுகையில்,

”இம்ரான் உலகில் நடைபெறும் பெரும்பாலான T20 லீக்கில் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். மீண்டும் ஒருமுறை விக்கெட் வீழ்த்தும் நபராக இருப்பார் என தெரிவித்துள்ளார்.

அதேபோன்று, நாங்கள் கடந்த ஒரு வருடங்களாக நூர் அஹ்மட்டின் திறமை தொடர்பில் ஆராய்ந்து வந்தோம். கிரிக்கெட் விளையாட்டின் முதல் படியில் அவர் இருந்தாலும், துடுப்பாட்ட வீரர்களுக்கு நெருக்கடி கொடுக்கின்ற திறமை அவரிடம் உண்டு” என அவர் குறிப்பிட்டார்.

T20 போட்டிகளில் 1000 சிக்ஸர்களை கடந்த க்ரிஸ் கெயில்

இந்த நிலையில், பிக் பாஷ் தொடரில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டமை தொடர்பில் இம்ரான் தாஹிர் கருத்து தெரிவிக்கையில்,

”நான் தொடர்ந்து பிக் பாஷ் தொடரை பார்த்து வந்துள்ளேன். உண்மையில் மிகவும் போட்டித் தன்மை கொண்ட தொடராக இது காணப்படுகின்றது. 

எனவே, இம்முறை மெல்பேர்ன் அணியில் உள்ள எனது சக வீரர்களுடன் இணைந்து சிறப்பாக விளையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளேன்” என அவர் தெரிவித்தார்.

மறுபுறத்தில் இறுதியாக நடைபெற்ற ஆப்கானிஸ்தானின் உள்ளூர் T20 தொடரான Shpageeza League  தொடரில் சம்பியன் பட்டம் வென்ற Mis Ainak Knights அணியில் இடம்பெற்றிருந்த நூர் அஹ்மட், அந்தத் தொடரில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் 3 ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டார்.

அத்துடன், கடந்த ஆகஸ்ட் மாதம் நிறைவுக்கு வந்த கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரில் சென்ட். லூசியா சோக்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். எனினும், ஐக்கிய இராச்சியத்துக்கு செல்வதற்கு வீசா கிடைத்ததால் அவரால் அந்தத் தொடரில் பங்கேற்க முடியாமல் போனது.

Video – LPL தொடரிலிருந்து விலகும் வெளிநாட்டு வீரர்கள் | Sports Roundup – Epi 137

இது இவ்வாறிருக்க, இம்முறை பிக் பாஷ் T20 தொடரில் தான் விளையாடப் போவதில்லை என அவுஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார்.

இதுபற்றி நியூஸ் கோர்ப் என்ற ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது,

”உண்மையாகச் சொல்லவேண்டுமென்றால், இம்முறை பிக் பாஷ் தொடரில் நான் விளையாட வாய்ப்பே இல்லை. கொரோனா பாதுகாப்பு வளையத்தின் ஆரம்பக் காலக்கட்டங்களில் உள்ளோம். 

இது எவ்வளவு நாள் செல்லும் எனத் தெரியவில்லை. பயிற்சியாளர், முகாமையாளர் போன்றவர்களிடம் இதுபற்றி வெளிப்படையாகப் பேசவேண்டும். 

அணியில் வீரர்களைத் தேர்வு செய்வது குறித்து கேள்வி எழும். ஒருவர் நீண்ட நாள் கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இருப்பதால் சிறிது நாள் ஓய்வு எடுத்துக்கொண்டால், அவருக்குப் பதிலாக விளையாடுபவர் நன்றாக விளையாடினால் என்ன ஆகும்? அந்த வீரருடைய இடத்தை இவர் எடுத்துக்கொள்வாரா? பாதுகாப்பு வளையத்தில் வசிப்பது வீரர்களின் மனநலத்தைப் பாதிக்கிறது. 

IPL இல் அதிக விலைக்கு எடுக்கப்பட்டு சொதப்பிய வீரர்கள்

சில நாட்களுக்கு இயல்பு வாழ்க்கை வாழ்ந்தால் அது உதவியாக இருக்கும். இதுபற்றிய உரையாடல்கள் நிகழ வேண்டும்” என தெரிவித்தார்.

கடந்த வருடம் நடைபெற்ற பிக் பாஷ் T20 தொடரில் சம்பியன் பட்டம் வென்ற சிட்னி சிக்ஸர்ஸ் அணியை ஸ்மித் வழிநடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இம்முறை ஐ.பி.எல் தொடரில் விளையாடி வரும் அவுஸ்திரேலியாவின் டேவிட் வோர்னர், பெட் கம்மின்ஸ் ஆகிய இருவரும், இந்தியாவுடனான தொடரை கருத்திற் கொண்டு இம்முறை பிக் பாஷ் தொடரில் இருந்து விலகலாம் என கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<