அரையிறுதிக்குத் தகுதிபெறாதது ஏமாற்றம் அளிக்கிறது – மஷ்ரபி

85
Image Courtesy : Getty
 

இம்முறை உலகக் கிண்ணத்தில் சிறப்பாக விளையாடியும் அரையிறுதிக்குத் தகுதிபெற முடியாமல் போனது ஏமாற்றம் அளிப்பதாக பங்களாதேஷ் அணித் தலைவர் மஷ்ரபி மொர்தஸா தெரிவித்துள்ளார். 

உலகக் கிண்ணத் தொடரில் அரையிறுதி வாய்ப்பை இழந்த பங்களாதேஷ் அணி, பாகிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் 94 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. 

பங்களாதேஷை வென்றும் உலகக் கிண்ண அரையிறுதி வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் 43ஆவது லீக் போட்டியில்……

கோல்டன் ஜெனரேஷன் என்று கருதப்படும் பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள், இம்முறை உலகக் கிண்ணத்தில் முக்கியமான தருணங்களில் தடுமாறியிருந்தனர். அந்த அணிக்காக சகிப் அல் ஹசன் சகலதுறையிலும் பிரகாசித்திருந்தார். 

ஆனாலும், அரையிறுதிக்கான வாய்ப்பை அந்த அணியால் பெற்றுக்கொள்ள முடியவில்லை. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்கு எதிரான காலிறுதியில் தோல்வியடைந்ததிலிருந்து அந்த அணி மேற்கொண்ட முயற்சி இம்முறை ஏமாற்றத்தில் தான் முடிந்தது. 

இது இவ்வாறிருக்க. பங்களாதேஷ் அணியின் முன்னணி வீரர்களான மஷ்ரபி மொர்தஸா மற்றும் சகிப் அல் ஹசன் ஆகியோருக்கு இது கடைசி உலகக் கிண்ணத் தொடராக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில், போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இம்முறை உலகக் கிண்ணத்தில் துரதிஷ்டமான அணிகளில் ஒன்றாக பங்களாதேஷ் உள்ளதா என எழுப்பிய கேள்விக்கு மஷ்ரபி மொர்தஸா கருத்து தெரிவிக்கையில், 

நாங்கள் எங்கள் 100 சதவீத பங்களிப்பினைக் கொடுத்திருக்கிறோம், ஆனால் சில நேரங்களில் எங்களுக்கு அதிர்ஷ்டம் தேவை. அது எங்களுடன் இருந்ததில்லை. நாங்கள் ஒருசில பகுதிகளில் சிறப்பாக செயற்பட்டோம். 

எமது வீரர்கள் தம்மால் முடியுமான பங்களிப்பினை அணிக்கு வழங்கியிருந்தனர். நாங்கள் களத்தடுப்பில் தவறுகள் செய்திருந்தோம். ஒருசில முக்கியமான போட்டிகளில் இதனால் அதிக ஓட்டங்களைக் கொடுக்க வேண்டி ஏற்பட்டது. அதுவும் எமது பின்னடைவுக்கு காரணமாக இருக்கலாம். 

எமது பந்துவீச்சும் ஆரம்பத்தில் சிறப்பானதாக இருக்கவில்லை. முதல் 20 ஓவர்களில் அதிக ஓட்டங்களைக் கொடுத்தோம். முக்கியமான இணைப்பாட்டங்களை முறியடிக்க முடியாமல் போனது. ஒருவேளை இந்தத் தொடர் ஆசிய மண்ணில் நடைபெற்றால் நிச்சயம் நாங்கள் தான் சிறந்து பந்துவீச்சைக் கொண்ட அணியாக இருந்திருப்போம். எனவே இவ்வறான தவறுகள் மைதானத்தில் இடம்பெறுவது வழக்கம்.

ஆனாலும், நாங்கள் விட்ட தவறுகள் குறித்து எதிர்வரும் காலங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். எனினும், மற்றைய அணிகளைக் காட்டிலும் நாங்கள் ஓரளவு சிறப்பாக விளையாடியுள்ளோம் என நான் நினைக்கிறேன்.  

இதேநேரம், சகிப் அல் ஹசன், முஸ்பிகுர் ரஹீம் மற்றும் முஸ்தபிசூர் ரஹ்மான் ஆகியோரது பங்களிப்பு குறித்து மொர்தஸா பேசுகையில், 

இம்முறை உலகக் கிண்ணத்தில் ஒவ்வொரு போட்டிகளிலும் துடுப்பாட்டம், பந்து வீச்சு ஆகியவற்றில் சிறப்பாக செயற்பட்ட சகிப் அல் ஹசனுக்கு எங்களால் உதவி செய்ய முடியவில்லை என்பதில் நாங்கள் மிகவும் வருந்துகிறோம். 

கடைசி இரண்டு போட்டிகளில், சகிப் மிகச் சிறப்பாக துடுப்பெடுத்தாடி இருந்தார், ஆனால் எங்களுக்கு மத்திய வரிசையில் இணைப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ள முடியவில்லை, அதுதான் எமது தோல்விக்கு காரணமாக இருந்தது.

சகிப் அல் ஹசன் 3ஆம் இலக்கத்தில் களமிறங்கி சிறப்பாக விளையாடியிருந்தார். அவரால் முடிந்தளவு ஒத்துழைப்பை அணிக்கு வழங்கயிருந்தார். இந்த இடத்துக்கு வருவதற்கு அவருடைய பங்களிப்பும் முக்கிய காரணம் என்பதை மறக்க முடியாது. ஆனால் எமது இலக்கை அடைய முடியாமல் போய்விட்டது. உண்மையில் ஒரு அணியாக நாங்கள் சகிப் அல் ஹசனிடம் மன்னிப்பு கோருகிறோம். 

அதேபோல, உலகக் கிரிக்கெட்டில் உள்ள ஒரு நட்சத்திர சகலதுறை வீரராக நான் அவரைப் பார்க்கிறேன். எனவே அடுத்த முறை எமது வீரர்கள் அவருக்கு சிறந்ததொரு ஒத்துழைப்பினை வழங்குவார்கள் என நம்புகிறேன்.

அத்துடன், முஸ்பிகுர் ரஹீமும் மிகவும் சிறப்பாக விளையாடியிருந்தார். அவருக்கும் இன்றைய போட்டியில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்க முடியாமல் போனது. 

காயங்களால் அடிக்கடி அவதிப்பட்டு வரும் மஷ்ரபி மொர்தஸா இம்முறை உலகக் கிண்ணத்துடன் ஓய்வு பெறுவார் என தெரிவிக்கப்பட்டது. எனவே குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் மஷ்ரபியின் ஓய்வு எப்போது என எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், நாடு திரும்பிய பிறகுதான் எனது ஓய்வு குறித்து மறுபரிசீலனை செய்வேன் என தெரிவித்தார். 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<