இளம் வீரர் கமிந்து மெண்டிஸிற்கு அறிவுறை வழங்கிய திசர பெரேரா

1990

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற T20 போட்டியில் அறிமுக வீரர் கமிந்து மெண்டிஸ், நேர்மறை எண்ணத்துடன் தொடர்ந்தும் துடுப்பெடுத்தாடினால் சிறந்த வீரராக பிரகாசிக்க முடியும் என திசர பெரேரா தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு போட்டி கொண்ட T20 தொடரில் இலங்கை அணி 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இலங்கை அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய திசர பெரேரா 57 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, அறிமுக வீரர் கமிந்து மெண்டிஸ் 14 பந்துகளுக்கு அதிரடியாக 24 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தார்.

கமிந்து மெண்டிஸின் பதற்றமட்ட துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சு அனைவராலும் பாராட்டப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கமிந்து மெண்டிஸின் ஆட்டம் குறித்து அணித் தலைவர் திசர பெரேரா கருத்து தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அணித் தலைவர் திசர பெரேரா போராடியும் இலங்கைக்கு தோல்வி

இலங்கை அணிக்கு எதிராக ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற…

“கமிந்து மெண்டிஸ் இன்றைய தினம் துடுப்பெடுத்தாடிய விதம் வரவேற்கத்தக்கது. முக்கியமாக அறிமுக வீரர் எந்தவித அழுத்தங்களும் இல்லாமல் துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியமை அவரது தன்னம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.

அதேநேரம் கமிந்து மெண்டிஸ் 19 வயதுக்கு உட்பட்ட அணியில் விளையாடிய போதும், எம்முடன் இணைந்து போட்டிகளில் விளையாடியுள்ளார். இதனால் அவர் அழுத்தங்கள் இன்றி தனது திறமையை வெளிப்படுத்தினார். அதுமாத்திரமின்றி நான் மற்றும் பயிற்றுவிப்பாளர் அவரால் முடிந்த அளவு அணிக்கு பங்களிப்பை வழங்குமாறு தெரிவித்தோம்.

எனினும் மெண்டிஸ் சிறப்பாக துடுப்பெடுத்தாடியதற்கு காரணம்,  அவர் நேர்மறையான சிந்தனையுடன் துடுப்பெடுத்தாடியிருந்தார். அணித் தலைவராக நான் அவரிடம் கேட்டுக்கொள்ளும் விடயமும் அதுதான். இனிவரும் போட்டிகளிலும் நேர்மறையான சிந்தனையுடன் துடுப்பெடுத்தாட வேண்டும்.

நான் சுமார் 10 வருடங்களாக தேசிய அணியில் விளையாடுவதற்கான காரணமும் அதுதான். என்னால் அழுத்தத்தின் போதும் எனது துடுப்பாட்டத்தை நேர்மறை எண்ணத்துடன் மேற்கொள்ள முடியும். அதேபோன்று, கமிந்து மெண்டிஸும் அவரது துடுப்பாட்டத்தை இதேபோன்று நம்பிக்கையுடன் துடுப்பெடுத்தாடினால் அவரது எதிர்காலம் சிறப்பாக இருக்கும்” என்றார்.

இதேவேளை அணியின் தோல்விக்கான காரணத்தை குறிப்பிட்ட திசர பெரேரா,

“ஆரம்பத்தில் நாம் தவறவிட்ட இரண்டு பிடியெடுப்புகளும் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாகும். பிடியெடுப்புகள் தவறவிடப்பட்ட நிலையில்,  இங்கிலாந்து அணி பாரிய இலக்கினை எட்டியிருந்தது. எனினும் ஆடுகளத்தை பொருத்தவரை ஓட்ட எண்ணிக்கையை எட்ட முடியும் என்ற சூழ்நிலை இருந்த போதும், முதல் இரண்டு விக்கெட்டுகளையும் ஆரம்பத்தில் இழந்திருந்தமை அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்திருந்தது” என்றார்.

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் மற்றும் T20 தொடர்களை இங்கிலாந்து அணி கைப்பற்றியுள்ள நிலையில், டெஸ்ட் தொடர் எதிர்வரும் 6 ஆம் திகதி காலியில் ஆரம்பமாகவுள்ளது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க