பிக்பாஷ் தொடரிலிருந்து வெளியேறும் ஏ.பி.டி. வில்லியர்ஸ்

133

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்டவீரரான ஏ.பி.டி. வில்லியர்ஸ் இந்த ஆண்டுக்கான (2020) பிக் பேஷ் லீக் தொடரில் இருந்து விலகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 

இந்திய தொடருக்கான போட்டி அட்டவணையை வெளியிட்ட ஆஸி.!

அந்தவகையில், பிக் பேஷ் லீக் தொடரில், ப்ரிஸ்பேன் ஹீட் அணிக்காக விளையாடவிருந்த ஏ.பி.டி. வில்லியர்ஸ் தன்னுடைய 3ஆவது குழந்தையின் பிறப்பு, கொவிட்-19 வைரஸ் ஏற்படுத்தியிருக்கும் சிக்கலான சூழ்நிலை என்பவற்றினைக் கருத்திற் கொண்டே பிக் பாஷ் லீக் தொடரிலிருந்து விலகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 

அதேநேரம், ஐ.பி.எல். தொடரில் றோயல் செலஞ்சர்ஸ் அணிக்காக அசத்தல் ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகின்ற ஏ.பி.டி வில்லியர்ஸ் பிக்பேஷ் தொடரில், ப்ரிஸ்பேன் ஹீட் அணிக்காகவும் ஜொலிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சந்தர்ப்பம் ஒன்றிலேயே அவர் அணியில் இருந்து நீங்கியிருக்கும் செய்தி வெளியாகியிருக்கின்றது. 

இதேநேரம், ஏ.பி.டி. வில்லியர்ஸினை இழந்திருக்கும் ப்ரிஸ்பேன் ஹீட் அணியினர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த மணிக்கட்டு சுழல்பந்துவீச்சாளரான முஜிபுர் ரஹ்மானை தமக்காக மூன்றாவது முறையாக ஒப்பந்தம் செய்திருக்கின்றனர்.

ஐ.பி.எல். தொடரில் இந்த ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஆடிய முஜிபுர் ரஹ்மான் அதில் எதிர்பார்த்த ஆட்டத்தினை வெளிப்படுத்தாது போயினும், இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் வெறும் 13.56 என்கிற பந்துவீச்சு சராசரியுடன் 16 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Video – LPL தொடரிலிருந்து விலகும் வெளிநாட்டு வீரர்கள் | Sports Roundup – Epi 137

ஏ.பி.டி. வில்லியர்ஸ் ப்ரிஸ்பேன் ஹீட் அணியில் இருந்து விலகிய விடயத்தினையும், முஜிபுர் ரஹ்மான் தொடர்ந்து அணியில் நீடிக்கும் விடயத்தினையும் ப்ரிஸ்பேன் ஹீட் அணியின் பயிற்சியாளரான டர்ரன் லேமன் உறுதி செய்திருந்தார். 

இந்த வீரர்கள் தவிர, பிக் பேஷ் லீக் தொடரின் முதல் பதினொருவர் அணியில் மூன்று வெளிநாட்டு வீரர்கள் ஆட முடியும் எனக் கூறப்பட்டதனை அடுத்து ப்ரிஸ்பேன் ஹீட் அணி விக்கெட்காப்பு துடுப்பாட்டவீரரான டொம் பென்டனையும் தமது அணிக் குழாத்தில் இணைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

மறுமுனையில், இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறவிருக்கும் பிக்பேஷ் லீக் தொடரின் போட்டி அட்டவணை அவுஸ்திரேலிய – இந்திய அணிகள் இடையிலான சுற்றுத் தொடரின் போட்டி அட்டவணை வெளியிடப்பட்ட பின்னர் வெளியிடப்படும் எனக் கூறப்பட்டிருக்கின்றது. 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<