முத்தரப்பு டி20 தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு முதல் வெற்றி

43
ICC Twitter
 

பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20  தொடரில், இன்று நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி தொடரில் தங்களுடைய முதல் வெற்றியை பதிவுசெய்துள்ளது.

முத்தரப்பு தொடரின் முதல் போட்டியில் ஜிம்பாப்வே அணியை எதிர்கொண்ட பங்களாதேஷ் அணி, 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தது. இந்தநிலையில், பங்களாதேஷ் அணியுடன் தோல்வியுற்ற ஜிம்பாப்வே அணி தங்களுடைய முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது.

இளையோர் ஆசியக் கிண்ண சம்பியனாக முடிசூடிய இந்திய அணி

த்ரில்லாக நடைபெற்று முடிந்த இளையோர் ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் அணியை 5 …

டாக்காவில் நடைபெற்ற இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஜிம்பாப்வே அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. இதன் அடிப்படையில் துடுப்பாடக் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி ரஹ்மதுல்லாஹ் குர்பஷின் சிறந்த ஆரம்பத்துடனும், மத்தியவரிசையில் நஜிபுல்லாஹ் சத்ரான் மற்றும் மொஹமட் நபி ஆகியோரின் அதிரடி துடுப்பாட்டங்களின் உதவியுடனும், 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 197 ஓட்டங்களை குவித்தது.

அணிக்காக வேகமாக ஓட்டங்களை குவித்திருந்த நஜிபுல்லாஹ் சத்ரான் 30 பந்துகளில் 69 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, ரஹ்மதுல்லாஹ் குர்பஷ் 24 பந்துகளில் 43 ஓட்டங்களையும், மொஹமட்  நபி 18 பந்துகளில் 38 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். ஜிம்பாப்வே அணி சார்பில் பந்துவீச்சில் டெண்டாய் சடாரா மற்றும் சோன் வில்லியம்ஸ் ஆகியோர் 2 விக்கெட்டுகளை அதிகபட்சமாக பகிர்ந்தனர்.

கடினமான இலக்கினை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணியின் துடுப்பாட்ட வீரர்கள் ஓரளவுக்கு பங்களிப்பை வழங்கிய போதும், அணிக்கு தேவையான அளவு ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க தவறியிருந்தனர் என்பதுடன், அவர்களுடைய ஓட்ட வேகமும் ஏற்றதாக அமையவில்லை. இதன் காரணமாக ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் துடுப்பெடுத்தாடிய போதும், 7 விக்கெட்டுகளை இழந்து 169 ஓட்டங்களை பெற்று, 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

ஜிம்பாப்வே அணிக்காக இறுதிக்கட்டத்தில் போராடி வேகமாக ஓட்டங்களை குவித்திருந்த ரெகிஸ் சகப்வா வெறும் 22 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 42 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இவரைத் தவிர துடுப்பெடுத்தாடிய ஏனைய வீரர்கள் ஆரம்பத்தை பெற்றிருந்த போதும், குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.  இதில், பிரெண்டன் டெய்லர் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கி 16 பந்துகளுக்கு 27 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தார்.

ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சை பொருத்தவரை ரஷீட் கான் மற்றும் பரீட் அஹமட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை அதிபசட்மாக வீழ்த்தியிருந்தனர்.

குறைந்த வயதில் ஏழாயிரம் ஓட்டங்களைக் கடந்து ஜோ ரூட் சாதனை

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் குறைந்த வயதில் 7 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த 3 ஆவது வீரர் என்ற பெருமையை இங்கிலாந்து அணித்…

இந்த முத்தரப்பு டி20  தொடரின் மூன்று போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தாங்கள் விளையாடிய ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளதுடன், ஜிம்பாப்வே அணி 2 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது.

அத்துடன், இந்த தொடரின் மூன்றாவது போட்டியில் பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் நாளைய தினம் (15) பலப்பரீட்சை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போட்டி சுருக்கம்

ஆப்கானிஸ்தான் – 197/5 (20) – நஜிபுல்லாஹ் சத்ரான் 69*,  ரஹ்மதுல்லாஹ் குர்பஷ் 43, மொஹமட் நபி 38, சோன் வில்லியம்ஸ் 16/2

ஜிம்பாப்வே – 169/7 (20) – ரெகிஸ் சகப்வா 42, பிரெண்டன் டெய்லர் 27, ரஷீட் கான் 29/2, பரீட் அஹமட் 35/2

முடிவு – ஆப்கானிஸ்தான் அணி 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<