ஆண்களுக்கான அஞ்சலோட்டத்தில் இலங்கைக்கு வெள்ளிப் பதக்கம்

Indian Inter-State Senior Athletics Championships 2022

135

இந்தியாவின் சென்னையில் நடைபெற்று வருகின்ற 61ஆவது இந்திய மாநிலங்களுக்கு இடையிலான தேசிய சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டியில் ஆண்களுக்கான 4×400 மீட்டர் அஞ்சலோட்டத்தில் பங்குகொண்ட இலங்கை அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் 61ஆவது தேசிய தேசிய சிரேஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், போட்டித் தொடரின் 5ஆவதும், கடைசியும் நாளான (14) இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 4×400 மீட்டர் அஞ்சலோட்டத்தில் அருண தர்ஷன தலைமையிலான இலங்கை அணி பங்குகொண்டது.

போட்டியில் வேகமான ஆரம்பத்தைப் பெற்றுக் கொண்ட இலங்கை அணி முதலிரண்டு கோல் பரிமாற்றங்களிலும் முன்னிலை பெற்றாலும், கடைசி இரண்டு கோல் பரிமாற்றங்களில் சற்று பின்னடவை சந்தித்தது. குறிப்பாக இந்திய A மற்றும் இந்திய A அணிகள் இலங்கைக்கு பலத்த போட்டியைக் கொடுத்தது.

எவ்வாறாயினும், அருண தர்ஷன, இசுரு லக்ஷான், தினுக தேஷான், பபசர நிகு ஆகியோர் அடங்கிய இலங்கை அணி வெள்ளிப் பதக்கம் சுவீகரித்தது. அவர்கள் போட்டித் தூரத்தை 3 நிமிடம் 06.05 செக்கன்களில் கடந்தனர்.

இதன்மூலம் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஆண்களுக்கான 4×400 மீட்டர் அஞ்சலோட்டத்தில் இலங்கை அணி சிறந்த நேரப் பெறுமதியைப் பதிவு செய்தது.

முன்னதாக 2018 ஆசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 4×400 மீட்டர் அஞ்சலோட்டத்தை 3 நிமிடம் 02.74 செக்கன்களில் இலங்கை அணி நிறைவு செய்தமை குறிப்பிடத்தக்கது.

இதுஇவ்வாறிருக்க, போட்டியை 3 நிமிடம் 05.34 செக்கன்களில் நிறைவு செய்த இந்திய A அணி தங்கப் பதக்கத்தையும், இந்திய B அணி போட்டியைய 3 நிமிடம் 15.78 செக்கன்களில் நிறைவு செய்து வெண்கலப் பதக்கத்தையும் சுவீகரித்தது.

இதற்கிடையில், முப்பாய்ச்சல் தேசிய சம்பியனான சமல் குமாரசிறி, இன்று மாலை நடைபெற்ற ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் 15.81 மீட்டர் தூரம் பாய்ந்து 8ஆவது இடத்தைப் பிடித்தார்.

இதன்படி, கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்த 61ஆவது இந்திய மாநிலங்களுக்கு இடையிலான தேசிய சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டியில் பங்குகொண்ட இலங்கை அணி 2 வெள்ளிப் பதக்கங்களை வென்றது.

இதில் பெண்களுக்கான 4×100 மீட்டர் அஞ்சலோட்டம் மற்றும் ஆண்களுக்கான 4×400 மீட்டர் அஞ்சலோட்டம் ஆகிய போட்டி நிகழ்ச்சிகளில் இலங்கை அணி பதக்கங்களை வென்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

>> மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க <<