சர்வதேசத்தில் இந்த ஆண்டு பிரகாசித்த இலங்கை துடுப்பாட்ட வீரர்கள்!

Sri Lanka Cricket

167

இலங்கை கிரிக்கெட் அணியின் இந்த ஆண்டுக்கான சர்வதேச போட்டிகள் ஆப்கானிஸ்தான் தொடருடன் நிறைவுக்கு வந்துள்ளன. இலங்கை அணிக்கான இனிவரும் போட்டிகள் அடுத்த ஆண்டே தொடங்கவிருக்கின்றன.

இந்த ஆண்டை பொருத்தவரை இலங்கை அணிக்கு கடந்த 2 ஆண்டுகளை விட சராசரியான ஆண்டாக அமைந்திருந்தது. குறிப்பாக, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணியின் பிரகாசிப்புகள் முன்னேற்றம் கண்டிருக்கின்றன.

ஐசிசி ஒருநாள் சுபர் லீக்கை இலகுவாக எடுத்துக்கொண்டதா இலங்கை?

அதன்படி ஒருசில வீரர்களும் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி நம்பிக்கை கொடுத்திருக்கின்றனர். இதில் இந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இலங்கை அணிக்கு அதிக ஓட்டங்களை பெற்றுத்தந்த வீரர்கள் தொடர்பில் இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

பெதும் நிஸ்ஸங்க – 1314 ஓட்டங்கள்

T20I – 713 ஓட்டங்கள் | ஒருநாள் – 491 ஓட்டங்கள் | டெஸ்ட் – 110 ஓட்டங்கள்

இலங்கை அணியில் அறிமுகமாகியதிலிருந்து நிலையான முன்னேற்றத்தை காண்பித்துவரும் பெதும் நிஸ்ஸங்க, இந்த ஆண்டு இலங்கை அணிக்காக அதிகூடிய சர்வதேச ஓட்டங்களை பெற்றுள்ளார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகிய இவர், ஒரு சில போட்டிகளில் வாய்ப்புகளை பெற்றுக்கொள்ள தவறியிருந்தாலும், கடந்த ஆண்டு T20 உலகக் கிண்ணத்தின் பின்னர் தொடர்ச்சியான வாய்ப்புகளை பெற்று வருகின்றார்.

ஒருநாள் மற்றும் T20I போட்டிகளில் இந்த ஆண்டு அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையை இலங்கை அணிக்காக பெற்றுக்கொடுத்துள்ள இவர், 3 டெஸ்ட் போட்டிகளில் மாத்திரமே விளையாடியுள்ளார்.

இந்த ஆண்டு மொத்தமாக 24 T20I போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 6 அரைச் சதங்கள் அடங்கலாக 713 ஓட்டங்களையும், 11 ஒருநாள் போட்டிகளில் 49.10 என்ற மிகச்சிறந்த சராசரியில் 491 ஓட்டங்களையும் பெற்றுள்ளார். இதில் ஒரு சதம் மற்றும் 4 அரைச்சதங்களும் அடங்கும்.

முக்கியமாக அவுஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் 137 ஓட்டங்களை விளாசி தன்னுடைய சிறந்த துடுப்பாட்ட இன்னிங்ஸையும் பதிவுசெய்தார். டெஸ்ட் போட்டிகளில் அதிகமாக வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் 3 போட்டிகளில் ஒரு அரைச்சதம் அடங்கலாக 110 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

மொத்தமாக இந்த ஆண்டில் 40 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள இவர், ஒரு சதம் மற்றும் 11 அரைச்சதங்கள் அடங்கலாக 1314 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளார்.

குசல் மெண்டிஸ் – 1289 ஓட்டங்கள்

T20I – 521 ஓட்டங்கள் | ஒருநாள் – 388 ஓட்டங்கள் | டெஸ்ட் – 380 ஓட்டங்கள்

இலங்கை கிரிக்கெட் அணியை பொருத்தவரை இந்த ஆண்டில் மிகச்சிறந்த முன்னேற்றத்தை கண்டிருப்பவர் குசல் மெண்டிஸ். இவரின் திறமை தொடர்பில் எவ்வித கேள்விகளும் இல்லாத நிலையில், கடந்த சில வருடங்களாக துடுப்பாட்டத்தில் பங்களிப்பை கொடுக்க தவறிவந்தார்.

எனினும், கடந்த ஆண்டு இங்கிலாந்தில் வைத்து கொவிட்-19 விதிமுறையை மீறிய குற்றச்சாட்டுக்காக தண்டிக்கப்பட்ட பின்னர் மீண்டும் அணிக்கு திரும்பியதிலிருந்து அணியில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தியுள்ளார்.

T20I போட்டிகளில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராகவும், டெஸ்ட் போட்டிகளில் மத்தியவரிசையிலும் களமிறங்கிவரும் இவர், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக பயன்படுத்தப்பட்டிருந்தார்.

இவர் இந்த ஆண்டு எந்தவொரு சதத்தையும் பெறாத போதும், 43 இன்னிங்ஸ்களில் 12 அரைச்சதங்கள் அடங்கலாக 1289 ஓட்டங்களை குவித்துள்ளார். T20I போட்டிகளில் இலங்கை அணிக்காக இரண்டாவது அதிகூடிய ஓட்டங்களை பெற்றுள்ள இவர், 20 இன்னிங்ஸ்களில் 5 அரைச்சதங்கள் அடங்கலாக 521 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

அதேநேரம், 11 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 48.50 என்ற சராசரியில் 388 ஓட்டங்களை பெற்றுள்ளார். டெஸ்ட் போட்டிகளை பொருத்தவரை 12 இன்னிங்ஸில் 31.66 என்ற ஓட்ட சராசரியில் 380 ஓட்டங்களை இவர் பெற்றுக்கொடுத்துள்ளார்.

தினேஷ் சந்திமால் – 978 ஓட்டங்கள்

T20I – 112 ஓட்டங்கள் | ஒருநாள் – 147 ஓட்டங்கள் | டெஸ்ட் – 719 ஓட்டங்கள்

இலங்கை அணிக்கு இந்த ஆண்டு அதிகூடிய ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த வீரர்களில் மூன்றாவது இடத்தை பிடித்துக்கொண்டவர் தினேஷ் சந்திமால்.

இவர் இந்தப்பட்டியில் 3வது இடத்தை பிடிப்பதற்கான முக்கிய காரணம் இவருடைய டெஸ்ட் துடுப்பாட்டம். இந்த ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணிக்காக இவரே அதிகூடிய ஓட்டங்களை பெற்றுக்கொடுத்துள்ளார். எனினும் ஒருநாள் மற்றும் T20I போட்டிகளில் இவருடைய பங்களிப்பு சிறப்பாக அமையவில்லை.

டெஸ்ட் துடுப்பாட்டத்தை பொருத்தவரை 10 இன்னிங்ஸ்களில் 102.71 என்ற சராசரியில் 719 ஓட்டங்களை இவர் குவித்துள்ளார். இதில் ஒரு இரட்டைச்சதம் (அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக), ஒரு சதம் மற்றும் 4 அரைச்சதங்கள் உள்ளடங்குகின்றன.

அதேநேரம், 7 ஒருநாள் போட்டிகளில் ஒரு அரைச்சதம் அடங்கலாக 147 ஓட்டங்களையும், 7 T20I போட்டிகளில் 112 ஓட்டங்களையும் மாத்திரமே இவர் பெற்றுக்கொடுத்துள்ளார். எனவே மொத்தமாக 20 இன்னிங்ஸ்களில் 978 ஓட்டங்களை இவர் இந்த ஆண்டு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

சரித் அசலங்க – 851 ஓட்டங்கள்

T20I – 386 ஓட்டங்கள் | ஒருநாள் – 426 ஓட்டங்கள் | டெஸ்ட் – 59 ஓட்டங்கள்

சர்வதேச கிரிக்கெட்டை இந்த ஆண்டு வெற்றியுடன் நிறைவுசெய்து வைத்திருந்தவர் சரித் அசலங்க. இவர் இலங்கை டெஸ்ட் அணியில் அதிகமாக இணைக்கப்படாத போதும் ஒருநாள் மற்றும் T20I போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடிவருகின்றார்.

ஒருநாள் போட்டிகளில் மிகச்சிறந்த திறமையை வெளிப்படுத்தியுள்ள இவர், இந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளை 53.25 என்ற சராசரியுடன் நிறைவுசெய்துள்ளார். 11 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒரு சதத்தை விளாசியிருந்ததுடன், இறுதியாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 83 ஓட்டங்களை விளாசி அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்திருந்தார்.

அசலங்க 10 ஒருநாள் இன்னிங்ஸ்களில் ஒரு சதம் மற்றும் 3 அரைச்சதங்கள் அடங்கலாக 426 ஓட்டங்களை பெற்றுள்ளார். அத்துடன், 22 T20I போட்டிகளில் ஒரு அரைச்சதம் அடங்கலாக 366 ஓட்டங்களையும், 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 59 ஓட்டங்களையும் பெற்றுள்ளார்.

எனவே மொத்தமாக இவர் 36 இன்னிங்ஸ்களில் ஒரு சதம் மற்றும் 4 அரைச்சதங்கள் அடங்கலாக 851 ஓட்டங்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தசுன் ஷானக – 728 ஓட்டங்கள்

T20I – 497 ஓட்டங்கள் | ஒருநாள் – 231 ஓட்டங்கள்

இலங்கை அணியின் ஒருநாள் மற்றும் T20I போட்டிகளுக்கான தலைவர் தசுன் ஷானக இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இவர் விளையாடாவிட்டாலும், இந்த ஆண்டு T20I போட்டியில் சிறந்த வேகத்துடன் ஓட்டங்களை குவித்திருந்ததுடன், ஒருநாள் போட்டிகளில் தன்னுடைய கன்னி சதத்தை ஜிம்பாப்வே அணிக்கு எதிராக பதிவுசெய்திருந்தார்.

இந்திய அணிக்கு எதிரான T20I போட்டியில் 74 ஓட்டங்களை அதிகபட்சமாக குவித்த தசுன் ஷானக, 24 இன்னிங்ஸ்களில் 2 அரைச்சதங்கள் அடங்கலாக 497 ஓட்டங்களை 135.79 என்ற ஓட்ட வேகத்தில் பெற்றுள்ளார். அதேநேரம் 11 ஒருநாள் போட்டிகளில் ஒரு சதம் அடங்கலாக 231 ஓட்டங்களை பெற்றுள்ள இவர், மொத்தமாக இந்த ஆண்டு 728 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

மேற்குறித்த வீரர்களை தவிர்த்து இந்த வரிசையில் அடுத்ததாக தனன்ஜய டி சில்வா 24 இன்னிங்ஸ்களில் ஒரு சதம் மற்றும் 3 அரைச்சதங்கள் அடங்கலாக 704 ஓட்டங்களையும், அஞ்செலோ மெதிவ்ஸ் 8 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் மாத்திரம் விளையாடி 615 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 8 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 569 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<