பங்களாதேஷிடம் தோற்று அரையிறுதி வாய்ப்பை தவறவிட்டது இலங்கை

0

இலங்கைக்கு எதிரான பங்கபந்து தங்கக் கிண்ண தொடரின் தீர்க்கமான குழுநிலை போட்டியில் மாடின் மியாவின் இரட்டை கோல்களின் உதவியோடு 3-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி தொடரின் அரைறுதிப் போட்டிக்கு முன்னேற்றம் கண்டது. 

இலங்கை அணி அதிகம் தற்காப்பு ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் கோல் வாய்ப்புகளை தனக்கு சாதகமாக்கிக் கொள்ளாததால் 6ஆவது பங்கபந்து தங்கக் கிண்ண தொடரின் குழு நிலை போட்டிகளுடன் வெளியேறியது. 

கடைசி நேர தவறுகளால் பலஸ்தீனிடம் தோற்ற இலங்கை

பங்களாதேஷில் நடைபெற்றுவரும் 2020…..

இந்தத் தொடரிலும் இலங்கை வீரர்களால் ஒரு கோலைக் கூட பெற முடியாமல் போனமை குறிப்பிடத்தக்கது. முன்னதாக இலங்கை அணி தனது முதல் போட்டியில் பலஸ்தீனத்திடம் 2-0 என்ற கோல்கள் கணக்கில்  தோல்வி அடைந்தபோதும் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்புடனேயே டாக்கா, பங்கபந்து சர்வதேச அரங்கில் இன்று (19) பங்களாதேஷை, A குழுவின் கடைசி குழுநிலை போட்டியில் எதிர்கொண்டது.

பங்களாதேஷ் அணியும் தனது முதல் போட்டியில் பலஸ்தீனத்திடம் தோல்வியுற்ற நிலையில் அந்த அணிக்கும் இந்தப் போட்டி வாழ்வா சாவா என்ற போட்டியாக இருந்தது. 

இலங்கை அணி இந்தப் போட்டியில் ஒரு மாற்றத்துடனேயே களமிறங்கியது. மத்தியகள வீரர் ரசூனியா சபீருக்கு பதில் பின்கள வீரர் தர்மகுலனாதன் கஜகோபன் அழைக்கப்பட்டார்.  

இந்நிலையில் பங்களாதேஷ் அணி போட்டியின் ஆரம்பத்திலேயே கோல் ஒன்றை பெறும் முயற்சியாக ஆக்கிரமிப்பு ஆட்டம் ஒன்றை வெளிப்படுத்த அதனை எதிர்கொள்வதற்கு இலங்கை வீரர்கள் பின்களத்தை பலப்படுத்தினார்கள்.   

உள்நாட்டு ரசிகர்கள் அரங்கு முழுவதும் கோஷம் எழுப்ப அந்த உத்வேகத்தோடு 17 ஆவது நிமிடத்தில் மாடின் கோல் பெற்று பங்களாதேஷ் அணியை முன்னிலை பெறச்செய்தார். 

இதன்போது தனது முதல் போட்டியில் களமிறங்கிய மானிக் ஹொஸைன் முல்லா நீண்ட தூரத்தில் இருந்து பரிமாற்றிய பந்தை பெனால்டி பெட்டிக்குள் இருந்து பெற்ற மாடின் வேகமாக நகர்த்தி இலங்கை தற்காப்பு அரணை முறியத்து வலைக்குள் செலுத்தினார். 

21 ஆவது நிமிடத்தில் பங்களாதேஷ் அணி மற்றொரு கோலை பெற முயன்றபோது இலங்கை கோல்காப்பாளர் ஹேரத் அருணசிறி சிறப்பாக தடுத்தார்.  

முதல் பாதியின் கடைசி பத்து நிமிடங்களில் இலங்கை வீரர்கள் போட்டியில் வேகத்தை காட்டி பதில் கோல் திருப்ப முயன்றனர். அவ்வாறான முயற்சி ஒன்று 43 ஆவது நிமிடத்தில் வீணானது. இதன்போது இலங்கை அணியின் கோல் வாய்ப்பை எதிரணி கோல்காப்பாளர் அஷ்ரபுல் இஸ்லாம் ரானா தடுத்து நிறுத்தினார். 

முதல் பாதி: பங்களாதேஷ் 1 – 0 இலங்கை

இரண்டாவது பாதியிலும் இலங்கை அணியால் எதிரணியின் கோல் பகுதியில் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. மறுபுறம் பங்களாதேஷ் வீரர்கள் மேலும் கோல் வாய்ப்புகளை தேடி அதிக நேரம் பந்தை தம்வசம் வைத்திருந்தனர். 

எனினும் 48 ஆவது நிமிடத்தில் இலங்கை முன்கள வீரர் ரசீக் வசீம் இலக்கை நோக்கி பந்தை உதைத்தபோதும் அது கோல் வாய்ப்பை தறவில்லை.    

64 ஆவது நிமிடத்தில் மாடின் தனித்து அபார கோல் ஒன்றை பங்களாதேஷ் அணிக்காக பெற்றுக்கொடுத்தார். இலங்கையின் பின்களத்தில் ஜூட் சுமனிடம் இருந்து பந்தை பறித்த மாடின் மெதுவாக இலங்கை கோல் எல்லைக்குள் எடுத்துச் சென்று அருணசிறியையும் தாண்டி வலைக்குள் செலுத்தினார்.  

ரியல் மெட்ரிட்டுக்கு தீர்க்கமான வெற்றி: முக்கிய ப்ரீமியர் லீக் போட்டிகள் சமநிலையில்

இங்கிலாந்து ப்ரீமியர் லீக், ஸ்பெயின் லா லிகா…

இலங்கை அணியின் பின்களம் பலவீனம் அடைந்ததை பயன்படுத்திக் கொண்ட பங்களாதேஷ் அணி 84 ஆவது நிமிடத்தில் மூன்றாவது கோலையும் புகுத்தியது. மாற்று முன்கள வீரராக வந்த ரகீப் ஹொஸைன் பரிமாற்றிய பந்தை மொஹமட் இப்ராஹிம் கோலாக மாற்றினார். 

இந்நிலையில் 89ஆவது நிமிடத்தில் அணித் தலைவர் டொப்பு பர்மான் இரண்டாவது மஞ்சள் அட்டை பெற்று வெளியேறியதால் பங்களாதேஷ் அணி கடைசி நிமிடங்களை 10 வீரர்களுடனேயே விளையாடியமை குறிப்பிடத்தக்கது.  

முழு நேரம்: பங்களாதேஷ் 3 – 0 இலங்கை

“கால்பந்து என்பது சந்தர்ப்பங்களை கொண்ட ஒரு விளையாட்டு. எமது சந்தர்ப்பங்களை நாம் தவறவிட்டோம் எனவே நாம் தோல்வியுற்றோம். அவர்கள் சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொண்டதால் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றது” என்று போட்டிக்குப் பின்னர் இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் பகீர் அலி தெரிவித்தார்.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி அரையிறுதியில் புருண்டி அணியை எதிர்கொள்ளவுள்ளது.   

கோல் பெற்றவர்கள்

பங்களாதேஷ் மாடின் மியா 17’ & 64’, மொஹமட் இப்ராஹிம் 83’

சிவப்பு அட்டை

பங்களாதேஷ் – டொபு பர்மான் 89’

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<